ஆளுமை:இராஜினிதேவி, சிவலிங்கம்

From நூலகம்
Name இராஜினிதேவி, சிவலிங்கம்
Pages இராமலிங்கம்
Pages நாகம்மா
Birth 1957.12.06
Pages -
Place உடுவில்
Category எழுத்தாளர், ஆசிரியர்

இராஜினிதேவி, சிவலிங்கம் (1957.12.06) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமலிங்கம்; தாய் நாகம்மா. அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, உடுவில் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியை கற்ற இவர் தனது இடைநிலைக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கற்றுள்ளார். மேலும் கிளி/ இராமநாதபுரம் மகாவித்தியாலயம் யா/ கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளதோடு யா/ கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் 26 ஆண்டுகள் ஆசிரியராகவும் 4 ஆண்டுகள் பிரதி அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். தமிழ், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களை கற்பித்த இவர் தமிழ் மொழித் தினப் போட்டி, ஆக்கத்திறன் போட்டிகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கோட்ட, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றி பெறச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2016ஆம் ஆண்டு தமிழ் மொழித்தினப் போட்டியில் அவரால் பயிற்சியளிக்கப்பட்ட மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

1998ஆம் ஆண்டு முதல் இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் உதயன் பத்திரிகையில் வெளிவருவதுடன் சிறுகதைகள் ஜீவநதி, வலம்புரி, கவின்தமிழ், கூர்மதி ஆகியவற்றிலும் வெளிவருகின்றன. கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளில் இதழாசிரியராக இருந்து சஞ்சிகைகளை வெளியிட உதவியதோடு அவற்றில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது நிலவும் சுடும் என்ற சிறுகதை தொகுதி 2013ஆம் ஆண்டும் தடம் மாறும் பாதைகள் என்ற சிறுகதை தொதுதி ஜீவநதி வெளியீடாக 2017 ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளன

.2006ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அகவிழி சஞ்சிகையினர் நடத்திய கல்விச் சமூகமும் பால்நிலை சமத்துவமும் என்னும் கருப்பொருளில் அமைந்த ஆய்வு கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் தேசிய கலை இலக்கியப் பேரவையால் நடாத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றி பிரதேச, மாவட்ட மட்டங்களில் கவிதை, ஆக்கம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், பாடலாக்கம் ஆகியவற்றில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு 2014ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக மேம்பாட்டு மையமும் சுவிற்சலாந்து தூதரகமும் இணைந்து நடாத்திய விருது வழங்கும் நிகழ்வில் இலக்கியத்திற்கான விருதினையும், அதே ஆண்டில் பேனா இலக்கிய விருதினையும் நல்லாசிரியருக்கான பிரதீபாபிரபா விருதினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்