ஆளுமை:கிரேஸ், சடகோபன்

From நூலகம்
Name கிரேஸ்
Pages ஆபிரகாம் ஜோசப்
Pages எஸ்தர் காலமணி
Birth 1959.02.02
Place கொழும்பு
Category கல்வியாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிரேஸ், சடகோபன் (1959.02.02) கொழும்பு ஹெவ்லொக் டவுனில் பிறந்த கல்வியாளர். இவரது தந்தை ஆபிரகாம் ஜோசப்; தாய் எஸ்தர் காலமணி. கொழும்பு வெள்ளவத்தை சென் கிளேயர்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாக பயின்று இளமாணிப்பட்டத்தை பெற்றார். கல்வித்துறையில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவம் என்பவற்றிலும் பட்டம் பெற்றவர். ஆசிரியராகவும் முதல்தர அதிபராகவும் நீர்கொழும்பு வலய தமிழ் மொழி பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாட அலகின் உதவிக் கல்விப் பணிப்பாளராக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றி பாடசாலைகளில் தமிழ் மொழி பாடம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார். இவர் வலய மட்டம், அகில இலங்கை ரீதியில் தேசிய மட்ட தமிழ்த் தினப் போட்டிகளை வருடாந்தம் வெற்றிகரமாக நடத்தி மாணவ மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டு வந்ததோடு தமிழ் மொழிப் பாட பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறுப்பட்ட செயற்றிட்டங்களையும் செய்த இவர் பல செயலமர்வுகளையும் நடாத்தி வெற்றி கண்டுள்ளார். கிரேஸ் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். சிங்களம், ஆங்கில கதைகள் பலவற்றை தமிழில் மொழிப்பெயர்த்தவை விஜய் என்ற சிறுவர் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான புவியியல் வரலாற்றுக் கட்டுரைகள் பலவற்றையும் தொடர்ந்து எழுதியுள்ளார். கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவால் வருடந்தோறும் வெளியிடப்படும் கூர்மதி எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார். கல்வி அமைச்சியில் தொடர்ச்சியாக தமிழ் சஞ்சிகை ஒன்று வெளிவருவதற்கு பேருதவியாக கிரேஸ் இருந்துள்ளார்.

அரச சாகித்திய விருது பெற்ற பண்டார மெருவன் (பண்டாரவைக் கொன்றவர்கள்) என்ற சிங்கள நூலைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். கல்வி அமைச்சின் விசேட தேவையுடையவர்களுக்கான கிளையில் ஒரு வளவாளராகவும் செயற்பட்டுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு கிரேஸ், சடகோபன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 10894 பக்கங்கள் 35-39