ஆளுமை:இராசரெத்தினம், வ. அ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வ. அ. இராசரெத்தினம்
தந்தை வஸ்தியாம்பிள்ளை
தாய் அந்தோனியா
பிறப்பு 1925.06.05
இறப்பு 2001.02.22
ஊர் மூதூர், திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் திருகோணமலை மாவட்டத்தின் இலக்கிய பிதாமகராகத் திகழ்ந்த மூதூரை சேர்ந்த வ. அ. இராசரெத்தினம் அவர்கள் (1925 - 2001) கொட்டியாரப்பற்று கிராமங்களின் வரலாற்று சம்பவங்கள், அவை அனுபவித்த துன்பதுயரங்கள் என்பனவற்றை தனது சிறுகதைகள், நாவல்கள், கவிதை, நாடகம், இலக்கிய பேச்சுக்கள் என்பனவற்றின் மூலம் அடுத்த சந்ததியினர் அறிவதற்காக நூலுருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது ஈழத்தமிழ் நாட்டில் பல தமிழிலக்கியப் பணிகளை மேற்கொண்ட இவர் திருகோணமலை மண்ணின் பெருமையை உலகறியச் செய்தவர்களுள் முக்கியமானவர்.

இவர் 1925.06.05 மூதூரில் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தாமரைவில் இரோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும், பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 இல் மேரி லில்லி திரேசா என்பவரைத் திருமணம் புரிந்தார்.

தான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்திருந்த போதிலும் இந்து சமய புராணங்கள் பலவற்றின் உள்ளடக்கங்களையும், இஸ்லாமிய நற்போதனை மார்க்கங்களையும் கற்றறிந்து இன நல்லுறவைப் பேணிய ஒரு தலைமகன் என பல விமர்சகர்கள் போற்றுகின்றனர். தனது எழுத்துக்களில் கொட்டியாபுரத்து மண்வாசனையை கமழ விட்ட இவர் "பழமையை அறியாதவனுக்கு புதுமையை சிருஷ்டிக்க உரிமை இல்லை" என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். 20 - 30 க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், கிழக்கிலங்கையில் முதலாவதாக எழுதப்பட்ட தமிழ் தொடர் நாவலையும் ("கொழுகொம்பு" 1955 ), “கிரௌஞ்சப் பறவைகள்" எனும் வரலாற்று நாவலையும், பல கவிதைகள், நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். இவர் சம்பூர் மகாவித்தியாயைத்தில் 1963 ஆம் ஆண்டில் ஆசிரியப் பணியாற்றிய போது அங்கு மேடையேற்றிய "முதல் முழக்கம்" என்னும் நாடகமே 1975 இல் கிரௌஞ்சப் பறவைகளானது குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பூர், சேனையூர், மூதூர், ஆலங்கேணி முதலான பல கிராமப் பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் 1964 ஆம் ஆண்டில் இலங்கையின் நாலாபுறமிருந்தும் பல அறிஞர் பெருமக்களை மூதூருக்கு வரவழைத்து "முத்தமிழ் விழா" கொண்டாடிய ஒரு பெருமகனாவார். அத்தோடு 1962 இல் மூதூரில் முதலாவது நூல் வெளியீட்டு விழா ஒன்றை புனித அந்தோனியார் பாடசாலையில் நிகழ்த்தி (தோணி நூல் வெளியீடு) சாதனை புரிந்தார். இந் நூலுக்கு 1963 ஆம் ஆண்டு தமிழ் நூல்களுக்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.

மூதூரின் இலக்கணப் புலியும், பழமைவாதியும், நிரம்பிய தமிழ் புலமையாளனுமாகிய உமறு நெய்னா புலவரை சீறாப்புராணத்தின் பதுறு படலத்திற்கு உரை செய்விக்கக் காரணமானவரும் இவரே. "ஈழநாகன்" என்னும் புனைப் பெயரிலும் பல ஆக்கங்களை பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். இவரின் எழுத்துக்களை ஈழகேசரி, ஈழநாடு, வீரகேசரி, மித்திரன், தினக்குரல், வசந்தம் சஞ்சிகை மற்றும் விவேகி மாத இதழ் ஆகியன தாங்கி வெளிவந்துள்ளன. மூதூரின் முதலாவது அச்சகமான "அமுதா அச்சகம்" இவரது நண்பரான மட்டக்களப்பு செல்வராசகோபால் அவர்களைக் கொண்டு 1977 ஆவணி மாதம் 15 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வ. அ வின் மொழிபெயர்ப்புக் கவிதையான "பூவரசம்பூ", நீலாவணனின் 'வேளாண்மை", அ. ஜெயராசாவின் "சேகுவாரா", கவிஞர் செ. குணரத்தினத்தின் "நெஞ்சில் ஒரு மலர்" என்னும் கவிதைத் தொகுதி ஆகியனவற்றை அச்சுப் பதிப்பித்த இவருடைய இவ் அச்சகம் மூதூரில் இடம்பெற்ற வன்செயலில் தீக்கிரையாக்கப்பட்ட துன்பக் கதை வரலாற்றில் பதிந்தே விட்டது. இத் துர்ச்சம்பவத்திலிருந்து வ. அ. இறக்கும் வரை அவரால் விடுபடவே முடியவில்லை என அவரது இலக்கிய நண்பர்களும் குடும்ப உறவினர்களும் கனத்த இதயத்துடன் கூறுகின்றனர்.

"மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு" என்னும் நூலை எழுதியதன் மூலம் மூதூர் கிறிஸ்தவ மக்களின் பழம் பெருமைகளை இன்றுள்ள கிறிஸ்தவ சந்ததியினருக்கும் வரலாற்றில் ஆர்வமுடையோருக்கும் ஒரு ஆவணமாகத் தந்துள்ளார். அத்தோடு புனித அந்தோனியார் ஆலயத்தின் வரலாற்றையும், அவ் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு மெருகேற்றிய அடிகளார் பலரையும் உலகறியச் செய்த பெருமைக்குரியவரும் இவரே.

2001.02.22ம் திகதியன்று அன்னார் இறைவனடி சேர்ந்தார்.