ஆளுமை:விஜயசிங்கம், காளியப்பு

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:30, 15 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=காளியப்பு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காளியப்பு விஜயசிங்கம்
தந்தை காளியப்பு
தாய் தங்கமுத்து
பிறப்பு -
இறப்பு 1990
ஊர் சேனையூர், மூதூர்
வகை பல்துறை கலைஞர்
புனை பெயர் விஸ்வலிங்கம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நூற்றாண்டு விழாக் கண்ட சேனையூர் வித்தகர் காளியப்பு விஜயசிங்கம் அவர்கள் புலவர், பரியாரியார், பூசாரியார் விஸ்வலிங்கம் என எல்லோராலும் அறியப்படுபவர் ஆவார். இவர் சேனையூரில் காளியப்பு, தங்கம்மா தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார்.

இளமைக் காலத்தில் மிகுந்த குழப்படி மிகுந்தவராகவே இருந்திருக்கிறார். ஆனாலும் படிப்பில் செலுத்திய அக்கறை ஒரு அறிஞராக உருமாற்றியது. தன் ஆரம்பகல்வியை சேனையூர் மெதடிஸ்த மிசன் கல்லூரியில் கற்ற இவர், தன் தகப்பனாரிடம் நம் மரபுவழி முறையிலான குருகுலக் கல்வி முறையின் மூலம் கற்றுக் கொண்டார். தொல்காப்பியம், நிகண்டு, பழந்தமிழ் இலக்கியங்கள் என்பவற்றை பிழையற கற்றார். அதனால் இளமையிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றவராக விளங்கினார்.

இவருடைய முப்பாட்டன் அறம் பாடுவதில் வல்லவர். அந்த வகையில் ஊரவர் வளவு, வேலிகளை முறித்து பயிர்களை அழித்த அவர்கள் வீட்டு பாலி என்கிற பசுவை அறம்பாடி கொன்றதாக ஒரு கதையுள்ளது. இவர் அறம் பாடியதை விரும்பாத தகப்பனார் காளியப்பு இனிமேல் நீ அறம் பாடக் கூடாது என சத்தியம் வாங்கியதாக ஊரார் கூறியுள்ளனர்.

தன் இறுதிக் காலம் வரை எழுத்தாணியாலேயே எல்லாவற்றையும் எழுதினார். சம்பூர் பத்திரகாளி மேலான காவியம், சம்புக்களி பத்தினியம்மன் மேலான காவியம், சேனையூர் வர்ணகுலப்பிள்ளையார் ஊஞ்சலென்பன இவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன. பல நூல்களை அவர் ஏட்டு வடிவில் எழுதி வைத்திருந்தார். ஆனால் அவர் சேமித்து வைத்திருந்த பழந்தமிழ் ஏடுகளும், மந்திர ஏடுகளும் அவர் ஆக்கங்களும் யுத்த வெள்ளம் காவு கொண்டு விட்டது.

வித்தகர் என்று சொல்வதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றவர். பரியாரியார், பூசாரியார், புலவர், நல்ல குரல் வளம்மிக்க பாடகர், நடிகர் என பல பரிமாணங்கள் கொண்டவர். சம்புக்களி பத்தினி அம்மன் வேள்வியில் அவர் குளிர்த்தி பாடும் அழகே தனி. சம்புக்களி பத்தினி அம்மன், சேனையூர் வீரபத்திரர் கோயில், சேனையூர் கும்பத்துமால் ஆகியவற்றின் பூசகராக சிறப்பாக பணியாற்றியவர்.

மந்திரம் சொல்வதில் இவரை மிஞ்ச எவருமிலர் என்றே சொல்லலாம். அவர் மொழியில் அழகாய் மந்திரங்கள் வந்து விழும் ஊரில் எங்கு வீட்டு வேள்வி நடந்தாலும் இவரே பிரதான பூசகர். சம்பூர் பத்திரகாளிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு வருடந்தோறும் வேள்வி முறை சடங்கே நடை பெற்று வந்தது. அவ் வேள்வியில் முன்னர் இவர் தகப்பனார் காளியப்பு அவர்கள் பங்கு பற்றி வந்தார். அவர் பின் இவரே அந்த உரிமை முறையில் பங்கு பற்றினார்.

நம் மண்ணுக்கே சொந்தமான பத்ததி முறை, பரிகல வேள்வி முறை ஆகியவற்றிலும், நம் மரபு சார் சடங்கு முறைகளிலும் மிகுந்த ஞானம் உள்ளவராக அவர் விளங்கினார். ஆயுள் வேத வைத்திய முறையில் கொட்டியாரம் முழுவதும் புகழ் பெற்றவர். அவருடய தகப்பனார் விட்டுச் சென்ற இடத்தை தன் திறமையல் இட்டு நிரப்பியவர் எனலாம். கொட்டியாரத்தின் எல்லைகளான கெவுளி முனை தொடக்கம் வெருகல் வரை இவர் வைத்தியம் புகழ் பெற்றிருந்தது. தம்பலகாமம் ஆலங்கேணி எனவும் தன் வைத்தியத்தால் புகழ் பெற்றவர்.

புராண படனம் செய்வதில் கொட்டியாரத்தில் அவருக்கு நிகர் அவரே வெருகல் சித்திரவேலாயுதர் கோயில் திருக்கரசையம்பதியில் ஆண்டு தோறும் நடைபெறும் திருக்கரசைப்புராண படிப்பு, சேனையூர் வர்ணகுல பிள்ளையார் கோயிலில் நடைபெறும் கந்தபுராண படிப்பு ஆகியவற்றில் பயன் சொல்வதும் புராணம் படிப்பதும் அவர் அறிவின் அகட்சியின் அடையாளங்கள் அகடவிகடமாக பேசுவதிலும் கெட்டிக்காரர் இவர்.

பூசாரியார் காளியப்பு சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேனையூரில் கும்ப விழாவின் பிதா மகராக இருந்து ஒரு பண்பாட்டு பெரு விழாவின் அடிப்படை நெறிகளை உருவாக்கியவர் அவர் செல் நெறியிலேயே இன்று வரை இந்த கலாசார பண்பாட்டு வெளி தொடர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கொண்டு சென்றவர்களில் இவர் முக்கியமானவர். திரு. காளியப்பு அவர்களின் பின்பு அவரது மூத்த மகன் விஸ்வலிங்கம் என அழைக்கப்பட்ட இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐம்பதுகளின் கடைசி ஆண்டுகளில் தொடங்கி எண்பதுகள் வரை இறக்கும் வரை பூசாரியாக இருந்து வழி நடத்தினார்.

இவர் புலவராக, வைத்தியராக, பூசாரியாக என பன்மைத்துவ ஆற்றலுடன் எல்லா வகையான மந்திரங்களையும் கையாளக் கூடியவராக விளங்கினார். மலையாள மந்திரம், சிங்கள மந்திரம், தமிழ் மந்திரம் இவைகளை சரளமாக கையாளும் தேர்ச்சி இவரை ஏனைய பூசாரிகள் இடமிருந்து வேறுபடுத்தி சிறப்பித்தது.

மிகச் சிறந்த குரல் வளம் மிக்கவர். மந்திர உச்சாடனத்தின் போது தடித்த கரகரத்த ஒலியாய் சாமியாடுபவர்களை ஈர்க்கும் வல்லமையும், மங்கள பூசையின் போது குளிர்த்தி பாடும் நேரத்தில் இனிய குரலால் குளிர்த்திப் பாடலுக்கு அழகு சேர்க்கும் அவர் குரல் கும்ப நாளாந்த பூசைகளின் போது சாமியாடுபவர்களை கட்டு மந்திரங்களால் படுகளம் செய்வோரை ஒரு கள்ளப் புன்னகையுடன் கடந்து போகும் அவர் கும்பத்து மாலை விட்டு வெளியே வராமலேயே கட்டுகளை அவிழ்க்கும் வித்தை தெரிந்த வித்தகன் அவர்.

கும்ப ஊர்வலத்தில் எங்காவது ஒரு இடத்தில் கடும் மறிப்பு என்று தெரிந்தால் மட்டுமே அந்த இடத்துக்கு வந்து ஒரு அதட்டலுடன் மறிப்பை கடந்து போக வைக்க கூடியவர். தன் தகப்பனாரிடம் மரபு வழியாய் எல்லாவற்றையும் கற்றதோடு தம்பலகாமம் சென்று அங்கிருந்த மரபுவழி கல்வியாளர்களிடமும் அனுபவங்களை பெற்றுக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வாகட முறைகள் சித்த வைத்திய செல் நெறிகள், தொல்காப்பியம் நிகண்டு ஆகியவற்றினை தன் தகப்பனாரிடமிருந்தே பெற்றுக் கொண்டார். எடுத்தவுடன் செய்யுள் படைக்கும் திறன் மிக்க ஒரு புலவராகவும் விளங்கினார். சம்பூர் பத்திரகாளி மேல் பாடிய காவியம், சம்புக்களி பத்தினிமேல் பாடிய காவியம் என்பன சிறு நூல்களாக வெளி வந்தன.

காளியப்பு விஜயசிங்கம் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாக பலர் அவரோடு இணைந்து தொழிற்பட்டனர். திரு. முத்துக்குமார், திரு. இராமலிங்கம், திரு. பொன்னம்பலம், திரு. செல்லத்துரை, திரு. பாலசிங்கம், திரு. சின்னராசா, திரு. நடராசா என பலர் இணைந்து செயல்பட்டமை சேனையூர் கும்ப மாலுக்கு பெருமை சேர்த்தது.

கும்பம் வைத்தல், கும்பம் எடுத்தல் பூசைகள் என எல்லாவற்றிலும் முறைப்படுத்தப்பட்ட மந்திர நெறிமுறைகளை விஜயசிங்கம் அவர்கள் கடைப்பிடித்தார். மந்திர உச்சாடனத்தின் போது அவரது தடித்த குரல் காந்த மந்திரக் குரலாய் உருவேற்றம் பெற்று சாமியாட்டம் சதிராட்டம் பெறும். கும்பம் எடுப்போர் எத்தனை பேர் என்பது முதல் நாளிலேயே தெரிய வரும். அவரவர்க்குரிய கும்பத்தை தாபனம் பண்ணுதல், கும்ப விழாவில் கும்பத்து சடங்கில் முக்கிய ஊடு பொருளாய் அமையும் அவரவர்க்குரிய வாலாய தெய்வங்களை கும்பத்தில் ஒவ்வொரு நாளும் தாபனம் பண்ணி உருக் கொடுத்தல் என அனைத்தையும் செய்யும் வல்லமை உடையவர்.

கும்பம் எடுப்போர் மந்திரக் கட்டுக்களால் கட்டுப்படாமல் இருக்க பூசாரி காளியப்பர் மரபில் விஜயசிங்கம் அவர்கள் இடுப்பில் மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம் பழம் கட்டுவது நடைமுறையாக உள்ளது. இது வேறு எந்த கும்பத்திலும் இல்லாத தனித்துவ நடைமுறை.

இவர் 1990 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.