ஆளுமை:பாக்கியலட்சுமி, நடராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாக்கியலட்சுமி
தந்தை நடராஜா
தாய் அன்னலட்சுமி
பிறப்பு 1945.01.12
ஊர் யாழ்ப்பாணம், நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாக்கியலட்சுமி, நடராஜா (1945.01.12) யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த இசை கலைஞர். இவரது தந்தை நடராஜா, தாய் அன்னலட்சுமி. தனது ஆரம்ப வயலின் கல்வியை ஈழத்தில் உள்ள பிரம்ம ஸ்ரீ சர்வேஸ்வர சர்மா, சித்திவிநாயகம் ஆகியோரிடமும் கற்றார். 1967ஆம் ஆண்டு தனது இசையை மேலும் வளர்ப்பதற்காக இந்தியா சென்னை கர்நாடக இசைக்கல்லூரியில் 3 ஆண்டுகள் வயலின் இசையைக் கற்றார். தென்னக வயலின் மேதைகளான எம்.எஸ்.அனந்தராமன், ரி.என் கிருஷ்ணன், ஆலத்தூர் நடராஜன் ஆகியோரிடனும் வயலினைக் கற்றுக் கொண்டார். தனது இசைக்கல்வியை முடித்துக்கொண்டு சங்ககீத வித்துவானாக 1970ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை திரும்பினார்.

மீண்டும் இசையைக் கற்றுக்கொள்ளும் நோக்கில் 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1973ஆம் ஆண்டு வரை சென்னை கர்நாடக இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு இசையை கே.வி.நாராயணஸ்வாமி, ரி.எம்.தியாகராஜன், பி.ராஜம்ஐயா, ராமநாதபுரம் கிருஸ்ணன், திருப்பாம்பரம் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் பிரதான பாடமாகக் கற்றார். எம்.எஸ்.அனந்தராமன் அவர்களிடம் வயலின் வாத்தியத்தை அவரது பாணியில் வாசிக்கும் முறைகளை சிறப்புடனும் நுணுக்கமாகவும் கற்றுக்கொண்டார். எம்.எஸ்.அனந்தராமன், பரூர் சுந்தரம் ஐயர், எம்.எஸ்.கோபாலகிருஸ்ணன் அவர்களிடமும் வயலின் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டார். தென்னகத்தில் வாய்ப்பாட்டு இசையையும் வயலின் இசையையும் கற்றுக்கொண்டார். 1973ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை வந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 1999ஆம் ஆண்டு (சங்கீதம்) முதுதத்துவமாணி பட்டத்தைப் பெற்றார்.

தனியார் இசைமன்றங்களிலும் பல இடங்களிலும் அரிய சேவைகளை ஆற்றியுள்ளார். 1973-1980ஆம் ஆண்டு வரையான காலப்பகுயில் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தில் வயலின் இசையை கற்பித்தார். இளங்கலைஞர் மன்றத்தில் காரியதரிசியாகவும் மன்ற உறுப்பினராகவும் இசைப்பணி ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

1980ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் வயலின் விரிவுரையாளராகவும் நியமனம் பெற்று சிரேஷ்ட விரிவுரையாளர் தரத்திற்கு உயர்வுபெற்று இசைத்துறைத் தலைவராக 6 ஆண்டுகள் சேவையாற்றி 2010ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பல இசை உருப்படிகளைத் தெரிந்து வைத்திருப்பவராகவும் சிறந்த பாடந்தரத்தை உடையவராகவும் எல்லாவிதமான வாசிப்பு முறைகளிலும் தேர்ச்சி பெற்றவராகவும் விளங்குகின்றார். இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெறும் இசை விழாக்கள், கலைவிழாக்கள், ஸ்ரீ தியாகராஜா உற்சவம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் தனிக்கச்சேரி நிகழ்தியுள்ளார். பக்கவாத்தியமாகவும் கலைப்பங்காற்றியுள்ளதுடன் பல நடன, வாய்ப்பாட்டு, மிருதங்கம், புல்லாங்குழல், அரங்கேற்றங்களிலும் வயலின் வாசித்து புகழ் பெற்றவராக விளங்குகின்றார். இலங்கையின் புகழ்பூத்த வாய்ப்பாட்டு கலைஞர்கள் பலரின் இசைக் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியம் வாசித்து தனது இசைத்துறை சார்ந்த அனுபவத்தை விருத்தி செய்த ஒரு வித்வானாகக் காணப்படுகின்றார்.

விருதுகள்

கலாபூஷண விருது கலாசார திணைக்களம், கலைஞான சுடர் நல்லூர் பிரதேச கலாசார பேரவை, இசைச்செல்வர் ஆலாபனா சங்கீத சபா, இசை ஞான மணி சர்வதேச இந்துமத குருபீடம், சிறந்த கலைஞர் திருநெல்வேலி இராமகிருஸ்ணாலயம், சங்கீத சாணாக்கியா நல்லூர் சாரங்கம் இசை மன்றம்.

குறிப்பு : மேற்படி பதிவு பாக்கியலட்சுமி, நடராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.