2025 உயர்தரப் பரீட்சையை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கான அனர்த்தகால கல்வி வளங்கள் திரட்டும் முயற்சி.
கல்விசார் வளவாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமது குறிப்பேடுகளை சிறந்தமுறையில் பேணி வைத்திருக்கும் மாணவர்கள் கவனத்துக்கு!
இவ்வாண்டு இலங்கையின் பல பகுதிகளிலிருந்து உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிவந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் தமது பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் பரீட்சைக்கு அவசியமான கல்வி வளங்களை இழந்துள்ளனர்.இந்தச் சூழ்நிலையினை கருத்திற்கொண்டு நூலக நிறுவனமானது, மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றத் தேவையான, கல்வி வளங்களை சேகரித்து ஆவணங்களை எண்ணிமப்படுத்தி, திறந்த அணுக்கத்தில் பதிவேற்றும் முயற்சியினை மேற்கொண்டுள்ளது.
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் எழுந்து வரவும், குறுகிய காலத்தில் தம்மை மீண்டும் பரீட்சைக்கு தயார்ப்படுத்தவும், அவர்களது தேடலை இலகுவாக்கி பரீட்சைக்கு தேவைப்படும் அனைத்து கல்வி வளங்களையும் ஒரே தளத்தில் வழங்குவதுமே இம்முயற்சியின் நோக்கமாகும்.