ஆளுமை:அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலேசபிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1853.02
இறப்பு 1910.01
ஊர் திருகோணமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை (1853.02 - 1910.01) திருகோணமலையைச் சேர்ந்த புலவர், பதிப்பாசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. திருகோணமலையில் வாழ்ந்த குமாரவேற்பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் நிகண்டையும் கற்ற இவர், 1872 முதல் பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.

திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல், திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல், திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல், நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல், திருக்கோணை நாயகர் பதிகம், திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம் திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம், வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல், வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை, திருக்கோணாசல வைபவம் போன்றவை இவரது நூல்கள். இவர் திருக்கரசைப் புராணம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல், நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

இவர் 07/03/1853 ஆந் திகதி சைவ ஆச்சாரமுடைய மரபில் வேலுப்பிள்ளை அவர்களுக்கு ஏகபுத்திரனாகப் பிறந்தார். குமாரவேலுப்பிள்ளை அவர்களிடம் இலக்கிய இலக்கணங்களையும், தையல்பாகம்பிள்ளை அவர்களிடம் தமிழ், ஆங்கிலத்தையும் கற்று இளவயதிலேயே நெடுங்கணக்கு, நிகண்டு, வடமொழி, ஆங்கிலம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். 1872 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் சேர்ந்து பின்னர் தலைமை ஆசிரியராகவும் பதவி வகித்தார்.

சிவப்பணி செய்வதற்கு ஆசிரியர் தொழில் தடையாக இருப்பதை உணர்ந்து அத் தொழிலைக் கைவிட்டார். தந்தை வழியில் விஸ்வநாத சிவன் கோயில், வீரகத்திப் பிள்ளையார் கோயில் போன்றவற்றின் தர்மகர்த்தாவாகவும் தொண்டாற்றினார். ஆலயத்தை மையமாகக் கொண்டு இளைஞர்களுக்கு சைவசமய நூல்களைக் கற்பித்தார். இறைவழிபாட்டோடு சைவப்பண்பாட்டையும் இளைஞர்களிடையே வளர்ப்பதில் மும்முரம் காட்டினார்.

பழைய ஏடுகளைத் தேடித் திரிந்து அவற்றைப் பெற்று நூல்களாகப் பதிப்பித்தார். இவற்றுள் திருக்கரைசைப் புராணம் (1893), வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (1906), நரேந்திரசிங்கராசன் சிந்து (1908), கோணேசர் கல்வெட்டு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்தோடு நில்லாது இவர் பல பிரபந்தங்கள், பதிகங்கள் விருத்தங்கள், நாடகங்கள் போன்றவற்றை ஆக்கியுள்ளார். சிவகாமியம்மன் ஊஞ்சல், விசாலாட்சியம்மை பெருங்கழி நெடில் விருத்தம், விஸ்வநாதர் ஊஞ்சல், பத்திரகாளி ஊஞ்சல், வில்லூன்றிக் கந்தன் பத்துப்பதிகம், சித்திரவேலாயுத சுவாமி பெயரில் ஊஞ்சலும் சிறை விடு பதிகமும், கோணைநாயகர் பதிகம் போன்றவற்றை இயற்றிப் பாடியுள்ளார். கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அவர்கள் பதிப்பித்த "திருகோணமலைப்புலவர் வே. அகிலேசபிள்ளை நூற்றிரட்டு" என்னும் நூலானது பண்டிதர் இ.வடிவேல் ஐயாவின் விளக்கவுரையுடன் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டி நாடகம் என்னும் கூத்து பிரதியை 1887 இல் எழுதியுள்ளார். அத்தோடு நெஞ்சறிமாலை என்னும் நூல் இவரது மகன் அ. இராசக்கோன் அவர்களால் பருத்தித்துறை கலாநிதி இயந்திரசாலையில் 1913ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இதற்கு சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருக்கோணாச்சல வைபவம் என்னும் இவரது கையெழுத்துப் பிரதியானது திருகோணமலையிலுள்ள சைவசமயிகள் பலரும் கேட்டுக்கொண்டதிற்கிணங்க மகன் அ.அளகைக்கோன் அவர்களால் 1950 ஆம் ஆண்டு திருக்கோணமலை திருக்கோணேஸ்வரா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இது பற்றி புலவர் அவர்கள் இவ்வாறு (1889 சர்வதாரி வருடத்தில்) கூறுகின்றார்.

"திருக்கோணாச்சலத்தின் சரித்திரம் வடமொழி நூலாகிய தட்சிணகைலாய மான்மியத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதாக அறியக் கிடக்கிறது. அந்நூல் கோணைநாயகர் கோயிற் பூசகர்களாகிய இருபாகை முதன்மைகளிடமிருந்து சில வருடங்களின் முன் மோசம் போய் விட்டது. தென் மொழியில் செகராசசேகர மகாராசாவினாற் பாடப்பெற்ற தட்சிணகைலாய புராணமொன்றே இவ்விடத்து வழங்குகின்றது. பிற்காலத்தில் சில வித்துவான்களால் அந்நூலை ஆதாரமாகக் கொண்டு பாடப்பெற்ற கோணவரைப்புராணம். சாரசைப்புராணம் எனும் நூல்களுமுள. இதுவன்றி கம்பைச் சாத்திரம், பெரியவளமைப் பத்ததி, கல்வெட்டு என்னும் மூன்று நூல்களுமுண்டு. திருக்கோணாச்சல மான்மியத்தை அறிய பேரவாக் கொண்டிருக்கும் நம் சுதேசிகளுக்கு மேற்சொல்லப்பட்ட நூல்கள் கிடைப்பது அருமையாயிருக்கின்றது. அதுபற்றி மேற்சொல்லப்பட்ட நூல்களை மிகுந்த பிரயாசத்தினாற் சம்பாதித்து, அவைகளிலுள்ள சரித்திரங்கள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி, யாவரும் எளிதில் அறியும் பொருட்டு வசனநடையிலியற்றி அரங்கத்தில் விடுத்திருக்கின்றேன். " இது மிகுந்த தீர்க்கதரிசனத்துடன் திருகோணமலை மீதுள்ள அளப்பெரும் பற்றின் காரணமாக செய்யப்பட்ட செயல் என்றே எம்மால் எண்ணத் தோன்றுகிறது. இதுவே எமது வரலாற்றின் அத்திபாரமுமாகின்றது.

மேலும், "திருக்கோணமலையில் இலக்கிய வெளியீட்டின் முன்னோடி புலவர் வே. அகிலேசபிள்ளை" என்னும் நூல் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரது நூலகம் பல அரிய நூல்களைக் கொண்டு காணப்பட்டது. இதை பல ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இவர்களுள் பண்டிதர் இ. வடிவேல் ஐயா, வித்துவான் எப்.எக்ஸ். சி. நடராசா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆறுமுகம் புலவர் எழுதிய கோணமலை அந்தாதி என்னும் நூல் வடிவேல் ஐயா அவர்களினால் இங்கிருந்தே நூலுருப் பெற்றது என்பது வரலாறு.

இவ்வாறாக திருகோணமலையின் பக்தி இலக்கியத் தோற்றுவாயின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவரும், வரலாற்று ஆவணப் பாதுகாவலருமான புலவர் அகிலேசபிள்ளை அவர்கள் 01/01/1910 அன்று இறைவன் திருவடி சேர்ந்தார்.இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 252
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 97-105
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 66-75
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 149-156
  • நூலக எண்: 399 பக்கங்கள் 35-39