ஆளுமை:இராஜரத்தினம் பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜரத்தினம் பிள்ளை
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் தெல்லிப்பழை
வகை -
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை , கல்வியிற் சிறந்த ஊராக யாழ்ப்பாண மன்னர் காலத்திலிருதே விளங்கி வருகிறது.போர்த்துக்கேயர் காலத்தைச் சேர்ந்த, தமிழிலும் வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்ற பேதுருப் புலவர் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இங்கு நிலவிய கல்விப் பாரம்பரியமே, ஆங்கிலேயர் இங்கு தமது மிசனரி பாடசாலையைத் தொடங்கக் காரணமாக அமைந்ததெனலாம். 1816 ஆம் ஆண்டு அமேரிக்க மிசனரிமார் முதல் முதல் தெல்லிப்பழையிலும் மல்லாகத்திலுமே இலவசத் தமிழ்ப் பாடசாலையைத் தொடங்கியதுடன் விடுதிப் பாடசாலையை அமைக்கவும் பின்னர் ஆங்கிலமொழிப் பாடசாலை ஒன்றை அமைக்கவும் இக்கல்விப் பாரம்பரியமே காரணம் எனலாம்.

“நீண்ட நெடுங் காலமாக நிலவி வந்த தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தோடு மிசனரிமார் இப்பகுதியில் நிறுவிய பாடசாலைகளும் இப்பகுதியின் கல்விப் பாரம்பரியத்திற்கு வலுச் சேர்ப்பவையாகவே அமைந்ததெனலாம்.” என்ற கலாநிதி .சிவலிங்கராஜா கூற்று மிகவும் பொருத்தமானதே.

இந்த ஊரில் தோன்றிய அறிஞர்கள் பலர். அவர்களில் முக்கியமானவராகப் பாவலர் துரையப்பாப் பிள்ளையைக் குறிப்பிடலாம். இவரை அறிந்த அளவுக்கு இவரது மூத்த சகோதரரான இராஜரத்தினம் பிள்ளையைத் தமிழ் உலகம் அறியவில்லை என்றே கூற வேண்டும்.

துரையப்பாப் பிள்ளையினதும் இராஜரத்தினம் பிள்ளையினதும் மிக நெருங்கிய உறவினராக இருந்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. இவரைத் தமது மாமன் என இராஜரத்திம் பிள்ளை தமது நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார்( வில்லியம் மில்லர் சரித்திரம்-முன்னுரை ) இவர்கள் மூவருக்கும் இடையே சில பொதுத்தன்மைகள் காணப்படுகிறன.

துரையப்பாப் பிள்ளையினதும் ,இராஜரத்தினம் பிள்ளையினதும் முன்னோரான கதிர்காமச் சட்டம்பியார் வடமொழியும் தமிழ் மொழியும் நன்கு அறிந்த கல்விமானாகத் திகழ்ந்தார். இவர்களது தந்தையார் அருளம்பலம் அவர்கள் சமூக செல்வாக்கு மிகுந்த பதவியான கச்சேரி முதலிப் பதவியை வகித்தவர். தாயர் தங்கம்மா சிற்பம், நாடகம், ஓவியம் ஆகிய நுண்கலை வல்லுநரான காசிநாதர் கந்தப்பிள்ளையின் வழி வந்தவர். சி. வை தாமோதரனாரோ ஏழுதலை முறைகளுக்கு முன்னவரான மாப்பாண முதலியின் வழித் தோன்றியவர். இவரது தந்தை வைரவநாதர் தமிழாசிரியர். ஆகவே மெற்கூறியவர்களின் கல்விப் பின்புலமும் பொருளாதார வளமும் சமூக மேலாண்மையும் இவர்களது சூழலிலேயே கல்விக்கான வாய்ப்புக் கிடைத்தமையும் இவர்களைக் கல்விமானாக்குவதில் பெரும் பங்கு வகித்தன எனலாம். சி, வை தாமோதரனாரும் துரையப்பாப் பிள்ளையும் தெல்லிப்பழை மிசனரி ஆங்கிலப் பாடசாலையில் தமது ஆரம்பக்கல்வியைக் கற்றுவிட்டு மேற்படிப்புக்கு வட்டுக்கோட்டை மிசனரி கல்லூரியில் சேர்ந்து கற்றார்கள் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. ஆனால் இராஜரத்தினம் பிள்ளையவர்கள் பிறந்த ஆண்டோ அவர் தமது ஆரம்பக்கல்வியை எங்கு கற்றார் என்றோ அறிய முடியவில்லை. அவரது உறவினரின் கூற்றால் துரையப்பாப் பிள்ளையை விட இரண்டு வருடம் மூத்தவர் இராஜரத்தினம் பிள்ளை எனத் தெரியவருகிறது. எனவே இவர் 1870ஆம் ஆண்டளவில் பிறந்திருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் இவர் தமது ஆரம்பக்கல்வியை தெல்லிப்பழை மிசனெறி ஆங்கிலப் பாட சாலையில் கற்றிருப்பார் எனக் கருத இடமுண்டு. இவரது இடை நிலைக் கல்வி புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குரிய கல்லூரியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் இராஜரத்தினம்பிள்ளையின் கூற்றாலேயே அறிந்துகொள்ள முடிகிறது. “அஸ்தமன வேளையில் நீதியதிபர் மூவரும் ,மந்திரியாரும் ரதவாகனாரூடராய்த் தேகவப்பியாசத்தின் பொருட்டு, சமஸ்தான இராஜ வீதியிற் சவாரிசெல்வதும் ,பந்தடிக்குஞ் சாலையிற் சென்று பந்து விளையாடுவதும் , பின்னர் தம்முள்ளொருவரகத்துச் சென்று விநோத சம்பாஷணை செய்வதும், அடிக்கடி இராச சமூகஞ்சென்று கொண்டாடுவதும் அக்காலத்துச் சிறுவராயிருந்து பிள்ளையவர்கள் பராமரிப்பின் கீழ்வளர்ந்த எமது கண்களைவிட்டின்னும் அகன்றபாடில்லை. மகாராஜா அவர்கள் கலாசாலையில் மாணவராய்க் கல்விகற்ற எமக்கும் நீதியதிபர் வீட்டுப் பிள்ளைகளென்னுங் கண்ணியமும் விஷேட மதிப்பும் கிடைத்தன.” இராஜரத்தினம் பிள்ளை தமது உயர் கல்வியை மெற்றாஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் மில்லரிடம் கற்றார் என்பதைச் சி வை தாமோதரனாரின் புதல்வரான அழகசுந்தரம் ‘மில்லர் சரித்திரத்திற்கு ’ எழுதிய சிறப்புப் பாயிரத்தால் தெரிந்துகொள்ள முடிகிறது. வில்லியம் மில்லர் கிறிஸ்தவக் கல்லூரியின் அதிபராக இருந்த போது அவரிடம் இராஜரத்தினம் பிள்ளை கற்றதோடு அக்கல்லூரியின் ஒருபகுதியாகச் செயற்பட்ட பாடசாலையின் ஆசிரியராகவும் கடைமையாற்றினார். இதனை “இது பற்பல பாடசாலைப் புத்தகங்களை ஆக்கியோனும் முன்னர்,சென்னைக் கிறிஸ்தவக் கலாசாலையைச் சேர்ந்த பாடசாலையின் ஆசிரியனுமான தெ.அ. இராஜரத்தினம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது” என்ற இரண்டாம் வாசகப் புத்தகத்தில் உள்ள குறிப்பால் அறியக்கூடியதாக உள்ளது.

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ,பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் யாழ்ப்பாண அறிஞர்கள் பலர் இந்தியாவுக்குச் சென்று கற்பதும் அங்கு உத்தியோகத்தில் அமர்வதும் சில காலமோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ அங்கு வசிப்பதும் பொது வழக்காக இருந்துவந்திருக்கிறது. ஶ்ரீ லஶ்ரீ ஆறுமுக நாவலர் தொடக்கம் வித்துவான் நா.கதிரவேற்பிள்ளை,சி.வை தாமோதரம் பிள்ளை என இந்த வரிசை நீண்டு செல்லும். இந்தவகையில் பாவலர் துரையப்பாப் பிள்ளையும் சிலகாலம் பம்பாயில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின் நாடுதிரும்பினார். ஆனால் இவரது சகோதரரான இராஜரத்தினம் பிள்ளையோ சி. வை.தாமோதரம் பிள்ளை போலவே தமது இறுதிக்காலம் வரை தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தார். புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இராஜரத்தினம்பிள்ளையும் ,D.நடராஜன் பி.ஏ. அவர்களும் எழுதிய பாலர் தமிழ் வாசகம்-இரண்டாம் புத்தகத்தின் முதற்பதிப்பு 1941 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதால் இவர் 1941 ஆம் ஆண்டின் பின்னரே மரணம் அடைந்தார் எனக் கொள்ள இடமுண்டு.

இவரது சமூகப் பின்னணி பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் (பாவலர்) ‘துரையப்பாப் பிள்ளையும் தேசியப் பின்னணியும்’ என்ற கட்டுரையில் பிரித்தானிய ஆட்சியின் வருகை காரணமாக தேசிய ரீதியான உயர்ந்தோர் குழாமும், பிரதேச ரீதியான உயர்ந்தோர் குழாமும் உருவாகியதாகக் குறிப்பிடுகிறார். இவர்களின் குணாம்சமாக அவர் குறிப்பிடுவன பின்வருமாறு.

“இன மத,மொழி அக்கறைகள் இவர்களைக் கூடுதலாகப் பாதித்தது. கலாசாரப் பிரச்சினைகளில் இவர்கள்(பிரதேச ரீதியான உயர்ந்தோர் குழாம்) தவிர்க்கவியலாதவாறு ஆழ்ந்த ஈடுபாடும் சிரத்தையும் கொண்டியங்கினர். உதாரணமாக, தேசிய உயர்ந்தோர் குழாத்தைச் சேர்ந்தோர்( பொன்னம் பல முதலியார் குடும்பத்தைச்சேர்ந்த சேர் பொன் .இராமநாதன் ,சேர் பொன் அருணாச்சலம் முதலானோர் - இங்கிலாந்துவரை சென்று படித்தவர்கள்) அனைவரும் அன்றைய நிலையில் ஆங்கில மொழியையே தமது பிரதான கருத்து வெளிப்பாட்டு சாதனமாகக் கொண்டனர். ஆனால் பிரதேசங்களில் வாழ்ந்த பிரமுகர்கள் தாய்மொழியையே அதிகமாகப் பயன் படுத்தலாயினர். ஆறுமுக நாவலரிலிருந்து துரையப்பாப்பிள்ளை, ஈழகேசரி பொன்னையா வரையிலான உள்ளூர் உயர்ந்தோர், தாய் மொழிப் பாண்டித்தியம் நிரம்பப் பெற்றவராய்த் திகழ்ந்தனர். இத்தகைய பொதுப்பண்புகள் வாய்க்கப் பெற்றிருந்த உள்ளூர்ப் பிரமுகர் வரிசையில் இடம் பெறுபவரே பாவலர் தெ.அ. துரையப்பாப் பிள்ளை.”

பாவலர் துரையப்பாப் பிள்ளை போலவே அவரது மூத்தசகோதரரான இராஜரத்தினம் பிள்ளையும் பிரதேச உயர்ந்தோர் குழாத்தினது பிரதிநிதியாக, தமிழர் கலாசாரத்தின் பால் ஈடுபாடு கொண்டவராகவும் ஆங்கில மொழிப் புலமை நிரம்பியவராக இருந்த போதும் தமிழ் மொழி மூலமாக பெருமளவு எழுதியவராயுமே காணப்படுகிறார்.

இவரால் எழுத்தப்பட்ட நூல்கள் சிறுவருக்கான படைப்புக்கள். 1.பாலர் தமிழ் வாசகம் -இரண்டாம் புத்தகம்.(1941) 2.கிண்டர் காடன் பாட்டுக்களும் ராஜவிஸ்வாசக் கும்மிகளும் (1925) 3.முதலாவது கதா வாசகப் புத்தகம்.-(1921) 4.இரண்டாம் வாசகப் புத்தகம்--

கல்லூரி மாணவருக்காண புத்தகங்கள் 1 அத்தேன் நகரத்து தைமன் சரித்திரம்(1910) 2 இலங்கைச் சரித்திரம் (1930) 3 இந்து தேச சரித்திரம்.(1928) 4 பஞ்ச தந்திரம்.-வித்துவான் தாண்டவராய முதலியாரால் எழுதப்பட்ட இந்த நூலைத் திருத்தி வெளியிட்டுள்ளார்.(1928)

வாழ்க்கை வரலாற்று நூல்கள் (BIOGRAPHY) 1 தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம். (1934) 2 மில்லர் சரித்திரம்(The life of The Hon .Rev .Dr .WilliaM Miller)(1901) 3 கம்பர் சரித்திரம்(1909)

பொது உவெம்பிளி பல்பொருட் காட்சி(1925) படைப்பு ஒன்றுக்கு அது எழுந்த காலத்தின் பயன்பாடும் முக்கியத்துவமும் ஒருவகையாக இருக்கும் .அதேசமயம் காலங்கள் கடந்த நிலையில் வேறொரு வகையான பரிமாணத்தை அந்தப் படைப்பு பெறுவது வழமைதான். இன்று பாட நூல் வழிகாட்டிகள் பலரால் வெளியிடப்படுவது சாதாரணமாகக் காணக்கூடியதே. ஆனால் இராஜரத்தினம் பிள்ளையின் பாடநூல் வெளியீட்டுப் பணியை அவ்வாறு எளிமையாகக் கருதிவிட முடியாது. பத்தொம்ம்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்க் கல்விப் பாடத்திட்டம் எவ்வாறு இருந்தது என்பதைப் புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை ‘உள்ளதும் நல்லதும்’ என்ற தமது வாழ்க்கை வரலாறு நூலில் குறிப்பிடுகிறார். பத்துவயது மாணவனுக்கான பாடத்திட்டம் அக்காலத்தில் இவ்வாறுதான் இருந்தது.

“சூடாமணி நிகண்டு ,திருச்செந்தூர் புராணம் இரண்டையும் முதல் வருடத்தில் படிக்கத் தொடங்கினோம்.படிப்பென்றால் பாடமாக்குவதுதான்.பரீட்சைக்குப் படியாமல் பாடத்துக்காகவே படித்தோம்.” சி. வை தாமோதரம் பிள்ளையும் ஆரம்பத்தில் தமது தந்தையிடமே வாக்குண்டாம், நன்னெறி, மூதுரை,முதலிய நீதி நூல்களையும் திவாகரம்,உரிச்சொல் நிகண்டு முதலிய ஏனைய நூல்களையும் கற்றார் என்பதும் பின்னர் மேலதிகமாகக் கற்பதற்காக அக்காலத்தில் சிறந்து விளங்கிய வித்துவான்களில் ஒருவரான முத்துக்குமார நாவலரிடமிருந்து நைடதம், இராமாயணம், பாரதம் ,கந்தபுராணம் முதலான அரிய நூல்களைக் கற்றதோடு இலக்கணப் பயிற்சியும் பெற்றுவந்தார் என்பதும் இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

ஆனால் இந்தக் கல்வி முறைமை ஆங்கிலேயக் கல்விமுறையின் வருகையினால் மாற்றமடைகின்றது. அம்,முறைமைக்கு இணங்க கணிதம், புவியியல் முதலான பாடங்களில் ஒரு பாடமாகவே தமிழ் பாடமும் கற்பிக்கப்படும் நிலை உருவாகிறது. அதுவும் குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு இணங்க கற்பிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த நிலமைகளைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைய அத்திட்டத்துக்கு அமைவான பாடநூல்களை உருவாக்கும் தேவையும் ஏற்படலாயிற்று. இத் தேவைபற்றி திரு, வி கலியாணசுந்தரனார் தமது ‘மனித வாழ்க்கையும் காந்திஅடிகளும் ‘ என்ற நூலின் முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார். காலத்தின் அத்தேவையை நிறைவேற்றும் வகையில் நவீன பாடத்திட்டத்துக்கு முற்றிலும் அமைவான பாடநூல்களை இராஜரத்தினம் பிள்ளை எழுதினார் என்பதைப் பின்வரும் அவரது கூற்றாலேயே அறிந்துகொள்ளலாம்.


“எமது லலிதா நூதன வாசகம் இரண்டாம் புத்தகத்தைப் புதிய பாடத்தைப் பின்பற்றித் திருத்தி இப் புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 400 புதிய சொற்கள் இதனில் கையாளப்பட்டுள்ளன. மாணவர் திருத்தமாகப் பேசவும் ,சரியான சொற்களைப் உபயோகித்துத் தம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கற்றுக்கொள்வதே மொழிப்பயிற்சிக்குரிய முதற்படி. ஆகவே ,ஒவ்வொரு பாடத்தின் கீழும் சில கேள்விகள் வாய்மொழியில் விடையளிக்கத்தக்கனவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எளிய நாடகங்களை நடித்தலாலும்,எளிய சம்பாஷணைகளை நடத்துவதாலும் தொடர்ந்த கருத்துக்களை அபிநயங்களுடன் வெளிப்படுத்தக்கூடும். அம்முறைக்கும் ஒத்தபடி சில பாடங்களும் கேள்விகளும் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கு நாற்பது வீதமாவது பிள்ளைகள் தாமாகவே மௌனமாகப் பாடங்களைப் படித்து ,அவற்றிலுள்ள பொருள்களை அறிய வேண்டும். ….மிக எளிய இலக்கணப் பயிற்சிகளும் உதாரணங்கள் வழியாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன.” ஆரம்ப பாடசாலைகளில் தமிழ் பாடம் மட்டுமன்றி, ஏனைய அறிவு நெறிகளையும் கற்பிக்க ஏதுவாக ‘கலாநிதித் தொடர்’ என்ற நூல் தொடரை அவர் எழுதி வெளியிட்டமை காலங்கருதிய உதவியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

“பிரதம கல்வியை பயிற்றும்(Elementary Education ) பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு அனுகூலமாக நாம் ‘கலாநிதித் தொடர்’ என்னும் இப்புத்தகத் தொடரை நவீனமாய் இயற்றி அச்சிட்டுள்ளேன் இத்தொடர் புத்தகங்களில் மாணாக்கர் உள்ளத்தை வசீகரித்து நல்லறிவுறுத்தும் நீதிக்கதைகளும் சுகாதாரம் ,பூமி சாஸ்திரம், இயற்கைசாஸ்திரம்,அங்க ஜீவசாஸ்திரம், தாவரசாஸ்திரம், வானசாஸ்திரம் ,ராஜாங்கமுறை முதலியவைகளைப் பற்றி மாணாக்கர் அவசியம் அறிய வேண்டிய விசயங்களும் ,பொருட் பாடங்களும் ,நீதி போதனகளும் அந்தந்த வகுப்புக்குத் தக்கவாறு சுலபமான தெள்ளிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன”.

இன்று பாட நூல்கள், அரசின் மேற்பார்வையில் பல்துறை சார்ந்த அறிஞரின் ஆலோசனைகள் உள்வாங்கப் பெற்று குழு முயற்சியாகச் செய்யப்படுகின்றன. ஆனால் இத்தகைய வளர்சிகள் அதிகம் இல்லாத நிலையில் தனியொருவராக இராஜரத்தினம் பிள்ளை, இன்று கல்வியியல் துறையில் பின்பற்றப்படும் சிறுவர் உளவியல், மொழியியல் கொள்கைகள், பாடத்தெரிவு,பாட உள்ளடக்கம் என்ற பல்வேறு அம்சங்களை உள்வாங்கி, அன்றே எழுதியமை அவரது கல்விக்கொள்கை பற்றிய ஆழ்ந்த அறிவையே பிரதிபலிக்கிறது எனலாம்.

தமிழில் எழுதப்பட்டுள்ள ‘இலங்கைச் சரித்திரம் ‘ என்ற நூல் முக்கியமாக இலங்கையில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்களின் பயன் பாட்டுக்காக எழுதப்பட்டது. இருப்பினும் ‘வாசனைத்திரவியத்துக்கான தீவு’ (The spicy Island Of Ceylon) எனச்சிறப்பிக்கப்படும் இலங்கையைப் பற்றி அறிய விரும்பும் தமிழ் வாசகர் அனைவரும் கற்றுப் பயன்பெறும் வகையிலேயே இந் நூல் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை மாணவர்களில் உருவாக்கும் வகையில் சுவாரசியமான கதை வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதில்‘உண்மைகளுக்கும் புனைவுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை வரலாற்று ஆசிரியன் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்பதை ராஜரத்தினம் பிள்ளை மறந்துவிடவில்லை. பல்வேறு வரலாற்று நுல்களைக் கவனமாகப் படித்தும், இத்துறையில் மிகவும் சிறந்த அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்றும், இந்த விடயம் தொடர்பான மிக அண்மைய ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்தியும் இந் நூல் அவரால் எழுதப்பட்டுள்ளது. இதனை தாம்பிறந்த நிலமாகிய இலங்கை பற்றியும் தாம் நெடும் காலம் வாழ்ந்த நிலமாகிய தமிழ்நாடு பற்றியும் தமக்குள்ள நேரடி அறிவும், ஆசிரியராகப் தாம் பெற்ற அனுபவமும், யாழ்ப்பாணப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சிலரால் தமக்கு வழங்கப்பட்ட குறிப்புகளும் மற்றும் ஆலோசனைகளும் இந்த புத்தகத்தை தயாரிப்பதில் பெரும் உதவியாக அமைந்ததாக இதன் முன்னுரையில் இராஜரத்தினம் பிள்ளையும் உறுதிசெய்கிறார்.

இலங்கையில் ஆட்சிசெய்த முக்கியமான சிங்கள மன்னர்கள்,அவர்கள் நடத்திய போர்கள் ,அவர்கள் கட்டிய பிரமாண்டமான விகாரைகள் ,தாது கோபங்கள் ,அவர்களால் நிறுவப்பட்ட நகரங்கள் என்பனபற்றி இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளது ஆரிய சக்கரவர்த்திகளாக ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது மேலும் பல்வேறுகாலங்களில் நிகழ்ந்த தமிழர் படையெடுப்புக்கள் பற்றியும் அதன் விளைவுகள்பற்றியும் இராஜரத்தினம் பிள்ளை விபரிக்கத் தவறவில்லை. இப்படையெடுப்புக்கள் சிங்களவரிடம் தமிழர் பற்றிய பய உணர்வையும் அவநம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்திவிட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். பெரிய இராச்சியங்களையும் வம்சங்களையும் செழிப்படையச் செய்து அதிகாரத்தை உயர்த்தும் நற்பண்புகள் எவை என்பதையும் அவற்றை வீழ்ச்சியடையச் செய்யும் தீமைகள் எவை என்பதையும் இந்நூல் அடையாளம் காட்டுகிறது.

இந்நூலைப் போன்றே ‘இந்து தேச சரித்திரம்’ என்ற நூல் இரண்டாம் பார மாணவர்களுக்காக எழுதப்பட்டதாகும்.இதேபோல் மாணவர்களது வாசிப்புத்திறனை வளர்க்கும் முகமாக முதலாவது கதா வாசகப் புத்தகம்.,அத்தேன் நகரத்து தைமன் சரித்திரம்,ஆகிய நூல்கள் இவரால் எழுதப்பட்டன .இந்நோக்கத்துக்காகவே பஞ்ச தந்திரம் இவரால் திருத்தி அச்சிடப்பட்டது . தமிழில் இன்றுகூட குழந்தைப்பாடல்கள் மிகக் குறைந்தளவானவையே உள்ளன. பத்தொம்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆத்திசூடி முதலான நீதி நூல்களே குழந்தைகளுக்கான இலக்கியங்களாகக் கொள்ளப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.இராஜரத்தினம்பிள்ளை இந்நிலையைக்கருத்தில் கொண்டு சிறுமியர் விளையாடும் பொழுது பாடவும் ஆடவும் வசதியாக கும்மி கோலாட்டப் பாடல்கள் சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். அவற்றோடு கதைப்பாடல்களையும் சொல்லிசைவுத் தொடர்களையும்(nursery rhyme) தொகுத்ததன் வாயிலாக வாய்மொழி வடிவத்துக்கு எழுத்து வடிவத்தை வழங்கி அவற்றை பாதுகாத்துமுள்ளார். ‘சிறுமிகளின் உல்லாச நடை ‘ என்ற தலைப்பில் அவர் தந்த சொல்லிசைவுத் தொடர்கள் பலரது குழந்தைப்பருவ நினைவுகளை மீட்டெடுக்க உதவும்.

நீ என்கே போறாய் ஊருக்குப்போகிறேன் எந்த ஊர் ‘ மயிலாப்பூர் எந்த மயில்? காட்டுமயில் என்ன காடு ? ஆறு காடு . என்ன ஆறு? பால் ஆறு என்ன கள்ளி இலைக் கள்ளி


என்ன மா ? எங்கள் அம்மா . மாணவர்களுக்காக எழுதிய நூல்கள் யாவற்றிலும் இராஜரத்தினம் பிள்ளை மிக எளிமையான சிறு சிறு வசனங்கள் கொண்ட ஆற்றொழுக்கான நடையையே கையாண்டுள்ளார்.

“இலங்கை ,சகலவிதமான செல்வங்களுக்கும் உறைவிடமான தேசம். இக்காரணத்தினால் தென் இந்தியாவிலுள்ள தமிழர்கள் அதற்கு ஈழம் என்று பெயரிட்டார்கள். ஈழம் என்றால் பொன் என்று அர்த்தம், அதாவது செல்வம் நிறைந்த நாடு என்பது பொருள்” இவர் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதற்கு இந்த நடையும் சிறந்த ஆதாரமாக அமைகிறது எனலாம்.

இவர் மாணவர்களுக்காக இன்னும் சில நூல்களையாவது எழுதியிருக்க வேண்டும் என்பதைக் ‘கதா வாசக புஸ்தகம்’ என்ற இவரது நூலின் முன்னுரையால் ஊகிக்கமுடிகிறது. “தமிழ் கற்கும் மாணாக்கர் அப்பாஷையை விரும்பிக் கற்று மிகவும் விருத்தியடைய வேண்டும் என்னும் நோக்கத்தோடு இத்தொடர் புத்தகங்களை நவீனமாய் இயற்றி வெளியிட்டுள்ளேன்.” காலாநிதித் தொடரும் இந்த உண்மையையே வலியுறுத்துகிறது.