ஆளுமை:இராஜேஸ்வரி, சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜேஸ்வரி, சண்முகம்
தந்தை பிச்சாண்டிப்பிள்ளை
தாய் அண்ணாமலையம்மாள்
பிறப்பு 1940.03.16
இறப்பு 2012.03.23
ஊர் கொழும்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜேஸ்வரி, சண்முகம் (1940.03.16 - 2012.03.23) கொழும்பு, விவேகானந்தா மேட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை பிச்சாண்டிப்பிள்ளை; தாய் அண்ணாமலையம்மாள். இவர் ஸ்ரீ கதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

நாடகத்துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமான இவர், 1952 ஆம் ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்ற அகில இலங்கை மாவட்டப் பாடசாலைகள் நாடகப் போட்டியில் கண்ணகி பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். சனாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்", முருகையனின் "விடியலை நோக்கி", சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்", சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு" ஆகிய நாடகங்களை நடித்துள்ளார். இவரது நடிப்பாற்றலைக் கண்ணகி நாடகத்தில் பார்த்த வானொலி நாடகத் தயாரிப்பாளர் சானா (சண்முகநாதன்) இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்.

1952, டிசம்பர் 26 இல் வானொலிக் கலைஞராக அறிமுகமானார். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். சில்லையூர் செல்வராசனின் "சிலம்பின் ஒலி" தொடர் நாடகத்தில் பாண்டிமாதேவியாக நடித்தார். 1952 ஆம் ஆண்டு முதல் 1969 வரை வானொலியில் நாடகம், மாதர் நிகழ்ச்சி, மற்றும் உரைச்சித்திரங்களில் நடித்து வந்தார். இவர் அசட்டு லட்சுமியாக நடித்த சி. சண்முகம் எழுதிய "நெஞ்சில் நிறைந்தவள்" நகைச்சுவை நாடகம் மங்கையர் மஞ்சரியில் 52 வாரங்கள் ஒலிபரப்பாயின. 1969 ஆம் ஆண்டு இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஆரம்பத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக அறிமுகமானார். 1971 இல் மாதர், மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1994 இல் மீயுயர் அறிவிப்பாளராக உயர்ந்தார். இறக்கும் வரை இவர் அறிவிப்பாளராகப் பணியாற்றினார்.

இலங்கை இயக்குனர் லெனின் மொராயஸ் இயக்கிய "நெஞ்சுக்குத் தெரியும்" தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் தாயாக நடித்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'நான் உங்கள் தோழன்' திரைப்படத்தில் ருக்மணி தேவிக்கும், குத்துவிளக்குத் திரைப்படத்தில் சாந்திலேகாவுக்கும் பின்னணிக் குரல் வழங்கினார்.

இவரின் ஆற்றல்களைக் கெளரவிக்கும் வகையில் 1994 இல் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது, 1995 இல் டாக்டர் புரட்சித்தலைவி விருது, கலாச்சார அமைச்சின் மூலம் முன்னாள் அமைச்சர் செ. இராசதுரையினால் மொழி வளர்ச்செல்வி பட்டம், அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரினால் 'தொடர்பியல் வித்தகர்' என்ற பட்டம், எட்டயபுரம் தென்பொதிகைத் தமிழ்சங்கத்தினால் 1995 ஜனவரி 29 இல் 'வானொலிக்குயில்' பட்டம், சாய்ந்தமருது கலைக்குரலினால் 'வான்மகள்' விருது, சிந்தனை வட்டத்தினால் 'மதுரக்குரல்' பட்டம் ஆகியன வழங்கப்பட்டுள்ளன..

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 110-112

வெளி இணைப்புக்கள்

ச. இரஜேஸ்வரி பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

ச. இரஜேஸ்வரி பற்றி பிரசன்னா