ஆளுமை:இராமநாதன், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமநாதன்
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு 1851.04.16
இறப்பு 1930.11.26
ஊர் மானிப்பாய்
வகை வழக்கறிஞர், அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேர் பொன் இராமநாதன் (1851.04.16 - 1930.11.26) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த வழக்கறிஞர், அரசியல் தலைவர். இவரது தந்தை பொன்னம்பலம். இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்று 13 ஆவது வயதில் பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக்கல்வி பயின்று 1873 இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முதன்மைக் கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கப்பட்டது.

இவரது தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் 1857 நவம்பரில் நிர்மானித்துக் குடமுழுக்குச் செய்வித்த ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற்களால் கட்டுவித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர், 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1897 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50 ஆவது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக இராமநாதன் அவர்களே தெரிவு செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி என்னும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும், வாதத்திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.

எழுத்துத்துறையில் An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898), An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902), The Culture of the Soul Among Western Nations (1906), The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905), On Faith or Love of God (1897), The Gospel of Jesus According to St. Matthew, as Interpreted to R. L. Harrison by the Light of the Godly Experience of Sri Paránanda,The Judgments of the Supreme Court of Judicature: And of the High Court of Appeal of the Island of Ceylon, Delivered Between the Years 1820-1833, Riots and martial law in Ceylon, 1915, Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon...: 1860, 1861 and 1862. 1880, பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914), திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919), ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம் போன்ற நூல்கள் உட்பட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 96 - 43-45

வெளி இணைப்புக்கள்