ஆளுமை:உஷாதேவி, கனகசுந்தரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உஷாதேவி
தந்தை சரவணமுத்து
தாய் நல்லம்மா
பிறப்பு 1949.03.12
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உஷாதேவி, கனகசுந்தரம் (1949.03.12) மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த பெண் கலைஞர். இவரது தந்தை சரவணமுத்து; தாய் நல்லம்மா. உடன்பிறப்புக்கள் நான்கு சகோதரிகளும் மூன்று சகோதரர்களுமாகும். இவரது இளமைக் கல்வியை மட்/ஆனைபந்திப் பெண்கள் ஆங்கில பாடசாலையில் ஆரம்பித்தார், க.பொ.த. பரீட்சையும் அதேபாடசாலையில் முடித்தார். பாடசாலைக் காலத்தில் நடனம், நாடகம், விளையாட்டு இவற்றில் ஆர்வம் காட்டினார். போட்டிகளில் கலந்து பரிசுகளும் பெற்றார். தையல் கலையிலும் உஷாதேவிக்கு அதிக ஆர்வம் இருந்தது. இவர் பாடசாலைக் காலத்தில் நடனம் ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆசிரியரின் இடமாற்றம் காரணமாக அதனை தொடர முடியவில்லை.

நடனம் பயில வேண்டும் என்ற ஆவலில் அவரை 1973ல் சென்னை கலாசேத்ராவிற்கு பெற்றோரும், சகோதரர்களும் அனுப்பி வைத்தனர். ஆரம்ப காலத்தில் மிக கஷ்டமாக இருந்தது. என்றாலும் இக்கலையின் மேலுள்ள ஆர்வத்தின் காரணமாக அதனை நேசித்தார். கல்லூரி வாழ்க்கை அருமை, அற்புதம் என்பதையும் உணர்ந்தார். நான்கு வருடங்கள் கலாசேத்ராவில் கற்று டிப்ளோமா பட்டமும் பெற்றார்.

கலாசேத்ரா கலைக் கூடத்தின் ஸ்தாபகராக ஸ்ரீமதி ருக்மனி அருண்டேல் அவர்கள் உயிருடனிருக்கும் போதே அங்கு கலைபயிலும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்ததையிட்டு பெருமையுடன் நினைவுகூருகின்றார். உலகத்தில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கலாசேத்ராவில் படித்தவர் எனக் கூறினால் அதுவே ஒரு பெருமைக்குரிய விடயமாக இருக்கும். மட்டுமல்லாது பெருமையுடன் மதிக்கவும் செய்கிறார்கள். இது நேரில் அனுபவித்த உண்மை விடயமாகும் என்கிறார். 1973-1977 வரை கலாசேத்ராவில் அவரது டிப்ளோமா பட்டத்தினை நடனத் துறையில் பெற்றார். பின் தாயகம் வந்து 1977ல் மட்/புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமை புரிந்தார். நான்கு வருடங்கள் இப்பாடசாலையில் கற்பித்தார். அவ்வேளை முதன் முறையாக தமிழ் மொழித் தினப் போட்டி நடத்தப்பட்டது. தேசிய மட்டப் போட்டி யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதில் இவரது மாணவி முதலாம் இடத்தினைப் பெற்று இவருக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்ததந்தார்.

1977ல் தாயகம் வந்தவுடன் நாட்டியசேத்ரா எனும் நடனப்பள்ளியை ஆரம்பித்தார். 1977ல் இவரும் இவருடன் நடனம் பயின்ற லக்சுமி நடராஜா என்பவரும் மட்/மாநகரசபை மண்டபத்தில் நடன நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது. பின் 1998ல் இலங்கையிலுள்ள கலாசேத்ராவில் பயின்ற ஏழுபேர் சேர்ந்து கலாசேத்ரா நடனங்கள் எனும் தலைப்பில் மட்/மாநகரசபை மண்டபத்தில் ரோட்டரி கலகத்தின் அனுசரணையுடன் நிகழ்த்தினார்கள் இதற்கு நல்ல வரவேற்பும் ஆசிகளும் கிடைத்தன.

இவரது முதலாவது மாணவி செல்வி ஷர்மிளா அருகிரிநாதன் அவர்களின் அரங்கேற்றம் 1981ல் மட்/மாநகரசபை மண்டபத்தில் கோலாகலமாக நடந்தேறியது. இவரும், இவரது மாணவிகளும் கொழும்பு சர்வோதயம் நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் 1979ல் நிகழ்த்தினார்கள். இதில் பாராட்டும், பரிசில்களும் பெறமுடிந்தது. 1980-2010 வரை மட்/வின்சன் மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமை புரிந்து ஓய்வு பெற்றார். பாடசாலைக் காலத்தில் 1991லிருந்து க.பொ.த.(சா.த). பரீட்சையில் நடனத்துறையில் செயன்முறை, வினைாத்தாள் திருத்துதல், உதவிப் பரீட்சகராகவும், பிரதம பரீட்சகராகவும் பல ஆண்டுகள் கடமைபுரிந்துள்ளார்.

வட இலங்கை சங்கீத சபை நடாத்தும் நடனம் பரீட்சைக்கும் பிரதம தேர்வாளராக இன்றுவரை இருந்து வருகின்றார். விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்திலும் பகுதி நேர விரிவுரையாளராக கடமை புரிந்துள்ளார். தவிர, விபுலானந்த ஆழகியற் கற்கை நிறுவகத்தில் பரீட்சை தேர்வாளராக கடமைபுரிந்து கொண்டுள்ளார். அரசினர் ஆசிரிய கலாசாலையிலும் நடன விரிவுரையாளராக கடமை புரிந்துள்ளார்.

இவரது கலைக்கூடமான நாட்டியசேத்ராவின் 30ம் ஆண்டு விழாவை ருக்மணி சமர்ப்பணம் எனும் பெயருடன் வெகு விமர்சையாக நடத்தினார்கள். ஸ்ரீமதி ருக்மணி அருண்டேல் அவர்களின் வரலாற்றினை நாட்டிய நாடகமாக நிகழ்த்தினார்கள். இது பலரின் பாராட்டுக்களையும் பெற்றதாக அமைந்தது. பாடசாலை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் மாணவிகளை பங்கு பற்றவைத்து பல தடவைகள் தேசிய மட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டார். 2019ல் மட்/இந்து மகளிர் மன்றத் தலைவியாகவும் சேவை புரிந்துள்ளார்.

விருதுகள்

லாநர்தகி

தேனக கலைச்சுடர்

கலாபூஷணம்

முதலமைச்சர் விருது

குறிப்பு : மேற்படி பதிவு உஷாதேவி, கனகசுந்தரம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.