ஆளுமை:சித்தி அமரசிங்கம், தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிமுத்து அமரசிங்கம்
தந்தை தம்பிமுத்து
தாய் முத்தம்மா
பிறப்பு 1937.01.05
இறப்பு 2007.01
ஊர் திருகோணமலை
வகை பல்துறை கலைஞர்
புனை பெயர் சித்தி அமரசிங்கம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அமரசிங்கம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு திருகோணமலையில் தம்பிமுத்து, முத்தம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் ஒரு பல்துறை கலைஞர் ஆவார்.

1957ஆம் ஆண்டு எஸ். எஸ். சி. பரீட்சை சித்தி எய்து 1959 ஆம் ஆண்டு சென்னை மெற்றி குலேசன் பரீட்சையில் சித்தியடைந்தார். ஐந்து வயதில் இருந்தே பாடசாலை நாடகங்களில் பங்கு கொண்டு தனது கலைத்துறையை வளர்க்க முற்பட்டவர் அமரசிங்கம்.

பல பரிமாணங்களைக் கொண்ட பல்துறை ஆற்றல் கொண்ட அமரசிங்கம், கலாவிநோதன், சித்தி அமரசிங்கம் என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். கலாபூஷணம் அமரசிங்கம் திருகோணமலை மேடை நாடக வரலாற்றில் பல தசாப்தங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்ட கலைஞர். கல்வி கற்கும் காலத்தில் இருந்தே எழுத்துத் துறையிலும், நாடகத் துறையிலும் நிறைந்த ஈடுபாடு கொண்டவர்.

நாடக நடிகனாக, தயாரிப்பாளராக, நாட்டுக்கூத்தனாக, வில்லுப்பாட்டு கலைஞனாக, வானொலி கலைஞனாக, இலக்கிய ஆர்வலனாக, சினிமா நடிகனாக பரிணமித்தவர். நாடகத்தந்தை விஸ்வலிங்கத்தைத் தனது மானசீகக் குருவாகக் கொண்ட இவர் தனது பள்ளிப்பருவ காலத்தில் கப்பலோட்டியதமிழன், ஒளவையார், வழிகாட்டி, மனமாற்றம், வேடன், கண்ணப்பா, நந்திவர்மன் காதலி போன்ற நாடகங்களில் நடித்து புகழ் ஈட்டியவர்.

தனது மேற்படிப்புக்காக இந்தியா சென்ற (1958) அமரசிங்கம் நாடகத் துறையுடன் அதிக ஈடுபாடு கொண்டு நுட்பநெறிகளை ஆர்வத்துடன் கற்றார். பல்வேறு நாடகங்களைத் தமிழகத்தில் பார்த்து அனுபவத்தைத் திரட்டிக் கொண்டது மாத்திரமன்றி திருச்சியில் அழியட்டும் அண்ணா, சென்னையில் பண்போடு பிறந்தது, மணிமகுடம் போன்ற நாடகங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தமிழகத்தில் இருந்து திரும்பிய இவர் 1968 ஆம் ஆண்டு தனது ஆரம்ப கால நண்பர்கள் நடத்திய கலைவாணி நாடக மன்றத்துடன் இணைந்து பல நாடகங்களில் நடித்து புகழ் ஈட்டிய காலத்தில் 1970 ஆம் ஆண்டு, அமரன் ஸ்கிறீன் என்ற நாடக மன்றை நிறுவி தனது நண்பர்களின் துணை கொண்டு 'குத்துவிளக்கு' என்னும் பரிசோதனை முயற்சி நாடகம் ஒன்றை நெறியாள்கை செய்து மேடையேற்றினார். இந்த நாடகம் மேடைக்கதை எழுதப்பட்டு, நெறியாள்கை செய்யப்பட்டதுடன் காட்சி அமைப்பையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு புதிய பரிசோதனை முயற்சிகளைச் செய்துகாட்டி நாடக உத்திகள், மேடை உள்ளீடுகளில் அரிய அற்புதங்களைச் செய்தவர்.

ஆரம்பகாலத்தில் சச்சிதானந்தம் என்ற கலைஞருடன் இணைந்து அமரன் ஆனந்தன் என்ற இணைப்பெயருடன் பல ஓரங்க நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். தன்னை ஒரு நாடக நெறியாளராக ஆக்கிய பெருமைக்குரியவர் தனது நண்பர் க. ஜோன் என்று இவர் நன்றி உணர்வோடு கூறுவார்.

அக்காலத்தில் பிரபயல்யமாகப் பேசப்பட்ட கலைஞன், நெறியாளன் என்பதற்கு 12.10.1968 தினபதியில் இவர் பற்றி வந்த பதிவு சான்றாகும். 'குத்துவிளக்கு' நாடக மேடையேற்றத்தைத் தொடர்ந்து 'குத்துவிளக்கு’ நாடகமலர் ஒன்றையும் அமரசிங்கம் (23.08.1970) வெளியிட்டார். இம்மலரைக் பழம் பெரும் கலைஞன் எஸ். இராயப்புக்கு காணிக்கை ஆக்கியுள்ளார்.

குத்துவிளக்கு நாடகத்தைத் தொடர்ந்து 'சொப்பன வாழ்வில் (1971) என்ற நாடகத்தையும் அரங்கேற்றிப் புகழ் பெற்றவர். மட்டக்களப்பு, கேகாலை, கொழும்பு போன்ற ஏனைய இடங்களிலும் பல நாடகங்களை மேடையேற்றியும், நடித்தும் நவரசத்திலகம் என்ற பாராட்டைப் பெற்ற அமரசிங்கம் ஈழத்தின் திரைப்பட வரலாற்றிலும் முன்னோடிக் கலைஞனாக மதிக்கப்படுகிறார்.

வேதநாயகம் அவர்களின் இராஜராஜேஸ்வரி பிலிமஸ் தயாரித்த 'தென்றலும் புயலும்' என்னும் திரைப்படத்தில் வினோதன் என்ற நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்து பாராட்டுப் பெற்றவர்.

வில்லிசை, பத்திரிகைத் துறை, வெளியீட்டுத் துறை போன்ற பல்வேறு தடங்களில் கால்பதித்து வெற்றி கண்டவர். தினபதி, சிந்தாமணி பத்திரிகையின் கொழும்பு நிருபராகக் கடமையாற்றியவர். ஈழத்து இலக்கியச் சோலை என்னும் வெளியீட்டு அகத்தை திருமலையில் ஸ்தாபித்து திருக்கோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் 15 இற்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு, ஆவணப்பதிவு செய்துள்ளார்.

சித்தி அமரசிங்கத்தினால் உருவாக்கப்பட்ட கலைவாணி நாடக மன்றம் பழிக்குப்பழி, மனமாற்றம், புரடக்ஷன் நம்பர் 12, Banda comes to town, வேடன் கண்ணப்பா, காணிக்கை, மலர் விழி, இராவண தரிசனம், ஹரிச்சந்திரா, திருத்தப்படும் தீர்மானங்கள் நாடகங்களை மேடையேற்றியது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 107-111
  • நூலக எண்: 2074 பக்கங்கள் 22-26