ஆளுமை:பாலகிருஷ்ணன், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலகிருஷ்ணன்
தந்தை சின்னத்தம்பி
தாய் செல்லம்மா
பிறப்பு 1959.02.22
ஊர் வாதரவத்தை, புத்தூர் கிழக்கு
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரு. பாலகிருஷ்ணன் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் புத்தூர் கிழக்கிலே வாதரவத்தை எனும் குக்கிராமத்திலே 1959 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் ஒரு விவசாயி. இவருக்கு நான்கு பெண் சகோதரிகள். இவர் முதலாம் தரத்தில் யா/ வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் சேர்ந்து கொண்டார். தரம் எட்டிலிருந்து உயர்தரம் வரை யா/புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியில் பயின்று 1974 ஆம் ஆண்டு க.பொ.த(சா.த) பரீட்சையில் சித்தி பெற்றார். 1977 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சையில் கணிதப் பிரிவில் சித்தி பெற்றார். பல்கலைக் கழக அனுமதி கிடைக்கவில்லை. அதன் பின்னர் குடும்ப வறுமை காரணமாக ஆசிரிய தொழிலுக்கு விண்ணப்பித்திருந்தார். அதன்படி 1978 ஆம் ஆண்டு வடமாகாணக் கல்வி அதிபதி தி.மாணிக்கவாசகர் அவர்களினால் கிளி/தட்டுவன் கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்பாடசாலை ஆனையிறவு A9 நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அக்காலத்தில் இப்பாடசாலை ஒரு ஆரம்பப் பிரிவுப் பாடசாலையாகும். அப்பாடசாலைக்குத் தினமும் வாதரவத்தையிலுள்ள வீரவாணிச்சந்தியில் காலை 6.00 மணிக்கு பேருந்தில் ஏறி சாவகச்சேரியில் இறங்கி A9 வீதியில் செல்லும் பேருந்து ஒன்றில் ஏறி ஆனையிறவில் இறங்கும் போது நேரம் 7.15 ஆகிவிடும். தொடர்ந்து 3கி.மீ தூரத்தில் உள்ள பாடசாலை நோக்கி விரைந்து நடந்து 7.50 மணியளவில் பாடசாலை சென்று விடுவார். காலை 8.00 மணிக்கு முதலாவது மணியுடன் பாடசாலை ஆரம்பிக்கும். 3ஆம் வகுப்பின் பொறுப்பாசிரியராக இவர் அதிபர் திரு.க.கணபதிப்பிள்ளை அவர்களால் நியமிக்கப்பட்டார். ஒன்றரை வருடங்கள் கழிந்தது. இவர் கணிதம் கற்றவர் என்பதனை பரந்தன் வட்டாரக் கல்வி அதிகாரி திரு.க.தங்கராசா அவர்கள் அறிந்து கிளி/தருமபுரம் மத்திய கல்லூரிக்கு இவரை இடம்மாற்றம் செய்தார். அவ்வேளை அதிபர் திரு.மார்க்கண்டு அவர்களின் தலைமையின் கீழ் 26 ஆசிரியர்கள் கற்பித்துக் கொண்டு இருந்தனர். 370 மாணவர்கள் கல்வி கற்றனர். க.பொ.த.(சா/த) வரை வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இவர் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். இவருடன் திரு.தம்பிராசா.குருகுலராசா (முன்னாள் வடமாகாணக் கல்வி அமைச்சர்) திரு. சபாபதி (மறைந்த கோட்டக் கல்வி அலுவலர்) ஆகியோரும் சக ஆசிரியர்களாகக் கற்பித்தனர். தருமபுரத்தில் கற்பித்த காலத்தில் ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்து கற்பித்தார். மாலை வேளையில் கணித, விஞ்ஞான வகுப்புக்களை இவருடன் திரு.ஈஸ்வரனும் மாணவர்களுக்குக் கற்பித்தனர். 1980, 1981 ஆகிய இரண்டு வருடங்கள் இப்பாடசாலையில் கடமையாற்றிய பின் 1982,1983 ஆம் ஆண்டுகளில் யா/ பலாலி ஆசிரிப் பயிற்சிக் கலாசாலையில் கணித பாடப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பின்னர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நு/நாணுஓயா சிங்கள தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இடம்மாற்றப்பட்டார். 1983 ஆம் ஆண்டு யூலைக் கலவரத்தின் போது தென்பகுதி, மத்திய பகுதி ஆகியவற்றிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் உத்தியோகத்தின் நிமித்தம் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வேலைக்குச் செல்லவில்லை. 1984 ஜனவரி மாதத்தின் பின்னரே மெல்ல மெல்ல மீள வேலைத்தளங்களுக்குச் சென்றனர். நானுஓயாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த விடுதி ஒன்றில் தங்கியிருந்து கடமைக்குச் சென்ற வேளை தும்பளையைச் சேர்ந்த நண்பரிடம் சிங்களத்தையும் கற்றுக்கொண்டார். 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவரது துணைவியார் காங்கேசன்துறை தையிட்டியைச் சேர்ந்தவர். தமிழ்ப்பாட ஆசிரியர். 1989 ஆம் ஆண்டு யா/ காங்கேசன்துறை மகா வித்தியாலயத்திற்கு இடம் அாற்றம் பெற்று ஒரு வருடம் ஆசிரியராகக் கடமையாற்றினார்.1990 ஆம் ஆண்டு முதல் காங்கேசன்துறைக் கொத்தணி அதிபர் திரு.க.இராசதுரையின் கொத்தணி உதவியாளராகக் கல்லூரியில் நியமிக்கப் பட்டு கடமையாற்றிக் கொண்டிருந்தார். 1990 யூன் மாதம் 15 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக முப்படையினரதும் தாக்குதல் காங்கேசன்துறையில் ஆரம்பித்தது. மறுநாளே இவர்கள் இடம்பெயர்ந்து இறுதியில் இணுவிலில் உறவினர் வீட்டில் ஒருவருடம் தங்கி வாழ்ந்தனர். 1991,1992,1993 ஆகிய வருடங்களில் சுன்னாகத்தில் தங்கி வாழ்ந்தனர். 1989 ஆம் ஆண்டு இவருக்கு மகனும், 1993 ஆம் ஆண்டு மகளும் பிறந்தனர். இவரும் மனைவியும கடமையாற்றிய யா/ நடேஸ்வராக் கல்லூரி இடம் பெயர்ந்த பாடசாலையாக யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் மாலை நேரப்பாடசாலையாக இயங்கியது. 1994,1995 ஆம் ஆண்டுகள் யா/புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலையில் இடம்பெயர்ந்து இயங்கிக் கொண்டிருந்த யா/ குட்டியபுலம் அ.த.க.பாடசாலையில் கடமையாற்றினார். படையினரின் தாக்குதல்கள் தொடரவே பூநகரிக் கடலேரி ஊடாக கிளாலியிலிருந்து படகு மூலம் இவரது குடும்பம் அக்கராயனுக்கு சென்றனர். 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கிளி/அக்கராயன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1997 ஆம் ஆண்டு இவர் ஆசிரியராக இருந்த வேளை அக்கராயன் மத்திய கல்லூரியின் அதிபர் திரு. கனகசபாபாரத்தினம் அவர்கள் இந்தியா சென்றதனால் தொடர்ச்சியாக லீவில் நின்றார். இதனால் பாடசாலையின் சிரேஸ்ட நிலையிலுள்ள ஆசிரியராக இவர் இருந்த படியாலும் இவரது செயலாற்றலை நேரடியாக மதிப்பீடு செய்தமையாலும் இவரைப் பொறுப்பேற்று நடத்தும்படி வலயக்கல்விப்பணிப்பாளர் திருஇபொன்.சபாபதி அவர்கள் கூறினார். அப்போது 2140 மாணவர்களும் 107 ஆசிரியர்களும் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். (கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை இடம்பெயர்ந்து வந்து அக்காலத்தில் அக்கராயன் மத்திய கல்லூரிக் கட்டடத்திலேயே 1996 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நல்லபிப்பிராயத்துடன் இணைந்து இவரைப் பதில் அதிபராக திரு.பொன்.சபாபதி அவர்கள் நியமித்தார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அதிபராக அங்கு கடமையாற்றினார். இக்காலத்தில் திரு.ப.அரியரத்தினம் அவர்கள் கல்விப்பணிப்பாளராக இருந்து இவருடன் நெருங்கிப் பழகி இவருக்கு பூரண ஒத்துழைப்பையும் வழங்கினார். ஏழு வருடங்கள் அப்பாடசாலையில் இவர் தொடர்ந்து கடமையாற்றியதால் 2003 ஆம் ஆண்டு கிளி/இராமநாதபுரம் மேற்கு பாடசாலைக்கு இடம்மாற்றத்தில் சென்று நான்கு ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றினார். அதன் பின் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 வரை கிளி/இந்துக்கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினார். உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்தமையால் 2008 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கிளி/இந்துக்கல்லூரி இடம்பெயர்ந்து சென்று கிளி/கல்மடுநகர் அ.த.க. பாடசாலையில் இயங்கியது. தொடர்ந்து கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன. அடுத்து இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் சென்று மீண்டும் மீள்குடியேறி மீண்டும் பாடசாலை இயங்கத் தொடங்கியது. ஆறு ஆண்டுகள் இப்பாடசாலையில் கடமையாற்றியமையால் கிளி/பளை மத்திய கல்லூரிக்கு 2013 ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.