ஆளுமை:ஷர்மிளா, ரஞ்சித்குமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஷர்மிளா
தந்தை கொறேய்ரா
தாய் மேரி ஸ்டெலா
பிறப்பு 1973.06.23
ஊர் மட்டக்களப்பு புளியந்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷர்மிளா, ரஞ்சித்குமார் மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்த நடனக் கலைஞர். இவரது தந்தை கொறேய்ரா. தாய் மேரி ஸ்டெலா. இவரின் கணவர் ரஞ்சித்குமார் (முகாமையாளர், கொமர்ஷல் வங்கி, மட்டக்களப்பு), இவர்களுக்கு ஒரு புதல்வனும், ஒரு புதல்வியும் உள்ளனர். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை மட் /புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் கற்றார். பாடசாலையில் கல்வி கற்று வரும்போது பல போட்டி நிகழ்வுகளில் பங்கேற்று பல சான்றிதழ்களையும், தங்கப்பதக்கங்களையும் வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார். அத்துடன் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள், போட்டிகள் என்பவற்றில் கலந்து கொண்டு மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் பல சாதனைகளைப் பெற்றதுடன் விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தனது ஆரம்ப நடனக்கலையை கலாபூஷணம் திருமதி கமலா ஞானதாஸ் அவர்களிடம் முறையாகப் பயின்றார். வட இலங்கை சங்கீத சபையின் நடனப் பரீட்சைகளில் தோற்றி அனைத்து தரங்களிலும் சித்தியடைந்து, கலாவித்தகர் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20 வருடங்களாகப் பணியாற்றி வரும் சிரேஸ்ட விரிவுரையாளராவார்.

உயர் கல்வியைக் கற்பதற்காக இந்தியாவிலுள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்கு சென்று கவின்கலையியல் இளையர் (BFA) என்ற பட்டத்தினைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பினை மேற்கொண்டு முதற்பிரிவில் சித்தியடைந்து கவின்கலையியல் நிறைஞர் (MFA) என்ற பட்டத்தினைப் பெற்றார். 2000ம் ஆண்டு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் இணைந்து பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமாக உயர்வடைந்தது. உயர்வடைந்த காலம் தொடக்கம் இன்று வரை சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார;. இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார்.

இவர் பல்கலைக்கழக சேவைக்காலத்தின் போது நடன, நாடகத்துறைத் தலைவராகவும், மாணவர் ஆலோசகராகவும், பல நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். பல சலங்கை பூஜை நிகழ்வுகளையும் நடன அரங்கேற்றங்களையும் நாட்டிய நாடகங்களையும் நெறியாள்கை செய்து அரங்கேற்றியுள்ளார்.

இந்தியா, மலேசியா, சிங்கப்புபூர், இந்தோனேஷியா, கம்போடியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று பல ஆய்வு மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளிக்கை செய்து, பல நிகழ்வுகளை நடத்திப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவற்றுள் கம்போடியா அங்கோரவாட் சிவன் ஆலயத்தில் இவரால் நெறியாள்கை செய்து வழங்கிய நடன நிகழ்விற்காக கம்போடிய அரசு இவருக்கு அபிநய அரசி என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.

இவர் நெறியாள்கை செய்த நாட்டிய நாடகங்களுள் பெத்தலகேம் குறவஞ்சி, மகிஷாசுர மர்த்தனி, தசாவதாரம், நவக்கிரக உலா, இலங்கைத் திருச்சபையின் காவலன், சிலம்பு கூறும் பதினோராடல், விபுலானந்தரின் ஆற்றுகைகள் போன்ற நாட்டிய நாடகங்கள் பிரபல்யமானவை. கிறிஸ்தவ பாஸ்கா நிகழ்வுகளில் கிறிஸ்துவின் இரவு, கல்வாரிப் பூக்கள், இயேசு நிலா, இயேசுவின் பாடுகள் போன்ற நிகழ்வுகள் பிரபல்யமானவை. நாட்டிய சாஸ்திரமும் பரதக் கலையும் – 2007, சிலப்பதிகாரத்தில் ஆடல் செய்தி – 2008, தமிழக நாட்டுபுற நடனக்கலைகள் – 2015 ஆகிய நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். அத்துடன் இவரின் ஆக்கங்கள் இலங்கையில் பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளதுடன் பல ஆய்வுக்கட்டுரைகளையும் மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.

விருதுகள்

கலாவித்தகர் NCOMS 2003

அபிநய சரஸ்வதி ABINAYASARASWATHY” 2019 Cambodia 2019 கம்போடிய அரசு

சிலம்புச்சுடர் Silampu Chudar யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

குறிப்பு : மேற்படி பதிவு ஷர்மிளா, ரஞ்சித்குமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.