நிறுவனம்:கிளி/ திருவையாறு மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/திருவையாறு மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் திருவையாறு
முகவரி திருவையாறு
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திரு என்றால் செல்வம் என்று பொருள்படும். அந்த வகையில் கோயில், குளம், கல்வி ,கலை,விவசாயம்,ஒழுக்கம்,ஒற்றுமை, ஆற்றல் என ஒருங்கே அனைத்து செல்வங்களும் ஒன்று சேர்ந்து திருவையாறு கிராமமாக 1966 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் DLO ஆகக் கடமை புரிந்த திரு.கந்தையா பொன்னம்பலம் அவர்களால் இக்குடியேற்றமானது நான்கு பகுதிகளாக ஆரம்பிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு முதலாம் பகுதியும், 1971 ஆம் ஆண்டு 3ஆம் பகுதியும் 1972 ஆம் ஆண்டு 2ஆம் பகுதியும், 1975 ஆம் ஆண்டு 4ஆம் பகுதியுமாக பிரிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட குடியேற்ற்மானது முறையே முதலாம் , இரண்டாம் பகுதிகள் படித்த வாலிபர்களுக்கான குடியேற்றத் திட்டம் ஆகவும், மூன்றாம் பகுதி கிராம விஸ்தரிப்புத் திட்டமாகவும் , நான்காம் பகுதி படித்த மகளிர்க்கான மகளிர் திட்டமாகவும் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அக்காலப் புகுதியில் அரச அதிபராக இருந்த திரு. விமல் அமரசேகர, உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு.முருகேசம்பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஆனந்தசங்கரி CO ஆகக் கடமையாற்றிய திரு.குமாரசாமி மற்றும் கிராம சேவகராகக் கடமையாற்றிய திரு. ராஜேஸ்வரன் போன்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பும்,உழைப்பும் இக்கிராம குடியேற்றத்திற்கு பெரிதும் துணை நின்றன. கிராம உருவாக்கத்தின் பின்னர் பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்ட போது பலரினது ஒத்துழைப்புடன் அரச நிதி ஒதுக்கீட்டில் 120X20 அடி கொண்ட ஒரு நிரந்தரக் கட்டடமும் அதிபர், ஆசிரியர் விடுதி, கிணறு மற்றும் மலசல கூடமென அடிப்படை வசதிகளுடன் கூடிய 10 ஏக்கர் நிலப்பரப்பில் அக்கால கிராம மாணவர்களுடன் 1974 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18 ஆம் திகதி பாடசாலை சம்பிரதாய பூர்வமாக யாழ்/திருவையாறு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை கிழக்கு நோக்கிய நுழை வாயில் பாடசாலையாக ஆரம்பிக்கப் பட்டது. அதிபராக திரு.வல்லிபுரம் அவர்கள் கடமையைப் பொறுப்பேற்று பல்தரக் கற்பித்தலை மேற்கொண்டார். பின்னர் கிளிநொச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டில் கிளி/திருவையாறு மகா வித்தியாலயம் ஆக மாற்றம் பெற்றது. அடுத்த சில வருடங்களில் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்ல வளங்களும், வாய்ப்புக்களும் அதிகரிக்கத் தொடங்கின. 1974 ஆம் ஆண்டு தொடக்கம்1985 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அதிபர்களாக திரு.அருணாசலம், திரு.தியாகராசா(சின்ன சேர்), திரு.ஆறுமுகதாஸ், திரு.அழகரத்தினம் போன்றோர் சிறப்பாகக் கடமையாற்றினார்கள். ஆசிரியர்களாக திரு.திருமதி.வாதவூரர்,திரு.சின்னத்தம்பி போன்றோர்களின் சேவையும் சிறப்பானது.மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் புதிய வகுப்புக்கள் அரம்பிக்கப்பட்டதனால் கட்டட தேவை ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்யுமு் பொருட்டு 1980 ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில் நிரந்தர கட்டடத் தொகுதியுடன் தொடர்ச்சியாக இணைந்த 40X20 அடி அளவு கொண்ட fட்டடத்தினை பாடசாலை பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர் அமைத்துக் கொண்டதாக அறிய முடிகின்றது. எனினும் 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் விளைவாக வேறு இன அரச சேவையாளர்கள் தங்கியிருந்த காரணத்தால் அதிபர் விடுதி எரிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. பற்றைகளும் , புற்றுகளும் நிறைந்த அக்காலப் புகுதியில் பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திரு.சுந்தரலிங்கம் கொமாண்டர், திரு.விஸ்வராசா, திரு.பரமேஸ்வரன், திரு.திருவருட்தேவன்,திரு.குணராசா, போன்ற பெற்றோர்களின் உழைப்பு இப்பாடசாலைக்கு பெரிதும் உதவியாக இருந்தது. தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு அதிபர் திரு.வீ.கே. பரஞ்சோதி அவர்கள் கடமையேற்றுக் கொண்டார். அக்காலப் பகுதியில் தரம் 8 வரை வகுப்புக்கள் நடைபெற்ற போதும் 1985 ஆம் ஆண்டு தரம் 9 வகுப்பிலிருந்து 1986 ஆம் ஆண்டு முதல் சாதாரண தரமும் ஆரம்பிக்கப் பட்டது சிறப்பம்சமாகும். அக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தரும் ஆசிரியரிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. அவர்கள் ஆசிரியர்கள் விடுதிகளிலும் அயலிலுள்ள வீடுகளிலும் வாடகைக்கு தங்கி இருந்து கற்பித்தலில் ஈடுபட்டனர். அவ்வருடம் முதன் முதலாக 14 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 9 மாணவர்கள் உயர்தரம் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். அmவர்களில் செல்வி .நடராசா அனுசியா, செல்வன் துரைராசா பிரபாகரன் ஆகிய மாணவர்கள் அரசின் புலமைப் பரிசில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ் வருடம் கிளி/திருவையாறு மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் தரம்5 புலமைப் பரிசில் பெறுபேறு முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றது. செல்வன் சுப்பிரமணியம் சுபாஸ்கரன் என்னும் மாணவன் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்று பாடசாலை வரலாற்றில் முதன் முதலில் சித்தி அடைந்த மாணவன் என்னும் பெருமையைப் பெற்றுக்கொண்டான். அக்காலப் பகுதியிலிருந்து இப்பாடசாலை மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்த பெருமை ஆசிரியர் திருமதி.சிவபாக்கியம் நடராசா அவர்களையே சாரும். குறிப்பாக 1991 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 46 மாணவர்கள் சித்தி அடைந்த வேளை அதில் இப்பாடசாலையைச் சேர்ந்த 23 மாணவர்கள் சித்தி பெற்றுக் கொண்டனர்.இச்சாதனை இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையாகவே தொடர்கின்றது.(இவர்களுள் மூன்று சோடி இரட்டையர்கள் சித்தியடைந்தமையும் சுவாரசியமானது.) மேலும் மாணவர்களின் அதிகரிப்புக்கு ஏற்ப கட்டடங்களின் தேவையை உணர்ந்த 3ஆம் பகுதி அம்பாள்நகர் அபிவிருத்திச்சங்கத்தினர் சங்கத்தின் நிதிப் பயன்பாட்டில் 60x20 அடி கொண்ட நிரந்தரக் கட்டடத்தினை அக்காலப் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.அ.க. செல்வநாயகம், செயலாளர் திரு.திருவருட்தேவர், மற்றும் பொருளாளர் திரு.வேலாயுதம்பிள்ளை எனும் குழுவின் முயற்சியினால் கிராமத்திற்கு பல சேவைகளைச் செய்த திரு.இராசேந்திரம் அவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு “இராசேந்திரம் நினைவு மண்டபம்” எனும் மண்டபம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இம்மூன்று கட்டடங்களையும் தவிர 1996 ஆம் ஆண்டு வரை தற்காலிக கொட்டகைகளிலேயே மாணவர்கள் பல சாதனைகளைச் சாதித்துள்ளனர். பிள்ளைகளின் அடிப்படை வசதிகள் , தளபாடத் தேவைகள் அனைத்தும் அக்காலப் பகுதியில் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்புடனேயே நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் அக்காலப் பகுதியில் குறிப்பாக 1980 களின் பிற் பகுதியிலிருந்து 1990 முழுமையாகவும் பின் 2013 வரையான காலப்பகுதி வரையில் அக்காலப்பகுதியில் (1996-2013)பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளரும் உறுப்பினர்களான திரு.வீ.சிவசுப்பிரமணியம், திரு.திருவருட்தேவன், திரு.சு.கணபதிப்பிள்ளை, திரு.வேலாயுதப்பிள்ளை, திரு.அ.க.செல்வநாயகம், திரு.குலசேகரம், திரு.உலகநாதன், திரு.சுதந்திரன், திரு.அரத்தினசிங்கம் , திரு.பொன்னம்பலநாதன், திரு.தசவரன் போன்றோரைச் சாரும். தொடர்ந்து திரு.நாகமணி நடராஜா அதிபர் 1988 ஆம் ஆண்டு இப்பாடசாலையை பொறுப்பேற்றுக் கொண்டார்.அவரது சேவை 1986 தொடக்கம் 1993 வரையாக அமைந்திருந்தது. அக்காலப் பகுதியில் புலமைப் பரிசில் ,க.பொ.த.காதாரண தரப் பெறுபேறுகள் உயர்வடைந்து காணப்பட்டது. தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு திரு.விமலநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.அக்காலப் பகுதியில் 1994 ஆம் ஆண்டு கலைப்பிரிவிற்கும் 1995 ஆம் ஆண்டு வர்த்தகப் பிரிவிற்கும் அனுமதி கிடைக்கப் பெற்று கிளி/திருவையாறு மகா வித்தியாலயமாக (1C) தரம் உயர்த்தப்பட்டது. செல்வி சுப்பிரமணியம் சுசித்திரா என்னும் மாணவி 1995 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு முதன் முதலில் தெரிவானார். இவ்வருடத்திலே சாதாரண தரத்தில் செல்வி சாம்பசிவம் பவதாரணி என்னும் மாணவி எட்டுபு் பாடங்களிலும் D தரத்தைப் பெற்ற முதல் மாணவி என்னும் பெருமையை தனதாக்கிக் கொண்டார். தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு சத்ஜெய இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பாடசாலை ஆவணங்கள், தளபாடங்கள் வன்னேரிக்குளம் நோக்கி நகர்த்தப்பட்டது. கிளிநொச்சியின் பெரும்பான்மை பாடசாலைகள் A9 வீதிக்கு மேற்பகுதியிலேயே தற்காலிகமாக நிலை கொண்டமையால் இப் பாடசாலை A9 இற்கு கிழக்குப்புறமாக நகர்த்தப்பட்டு வட்டக்கச்சி மகா வித்தியாலயத்துடன் இணைப்புச் செய்யப்பட்டு ஓரிரு மாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை பாடசாலையின் பொறுப்பாசிரியராக இருந்த திரு. கெங்காதரன் அவர்கள் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் மாயவனூர் பகுதியில் பாடசாலைகள் இல்லாமல் இருந்த பிள்ளைகளின் நிலையினை உணர்ந்து ஆசிரியர் திரு.ந.சிவநேசன் போன்றோரின் முயற்சியினாலும் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு இணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாயவனூரில் பாடசாலை இயங்கத் தொடங்கியது. தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு அதிபராக வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு.ப.இராமச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இடப்பெயர்வின் போது நகர்த்தப்பட்ட தளபாடங்கள், ஆவணங்கள் போன்றவற்றை மீண்டும் உரிய இடத்தில் சேர்க்க இப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடன் பெற்றோர்களான திரு.குணராசா, திரு.கோபால்ராசா போன்றவர்களின் அயராத ஒத்துழைப்பில் அவர்களது உழவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் இவ் இராணுவ நடவடிக்கை காரணமாக ஆசிரியர் விடுதி முற்றாக தரைமட்டமாக்கப்பட்டமை வேதனைக்குரியதே. இப்பாடசாலை 2000 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் பின் மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியது. இங்கு குறிப்பிடத் தக்க விடயம் மாயவனூர்ப் பிரதேசத்தில் தற்போது தறபோது நிரந்தரமாகவே பாடசாலை நிறுவப்பட்டமை. அதன் போது திருமதி.அரியரத்தினம் அவர்கள் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து 2001-2013 வரையான காலப் பகுதியில் திருமதி.மாணிக்கம் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்று நடாத்தி வந்தார். பெறுபேறுகள் தொடர்ந்து உயர்வடைந்த நிலையில் 2003-2007 வரையான காலப்பகுதியில் அதிபர் திரு.சீ.திரவியம் அவர்கள் பாடசாலையைப் பொறுப்றே்றுக் கொண்டார். இவரது காலத்தில் தற்காலிக கொட்டகைகளில் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு 60X20 அடி அளவில் வகுப்பறைத் தொகுதியும் மற்றும் அரச நிதி உதவியுடன் கூடிய வகுப்பறைத் தொகுதி 120 X 24 அடி அளவில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 2007 தொடக்கம் 2012 வரையான காலப் பகுதியில் அதிபராக திரு.க.மதுரநாயகம் அவர்கள் கடமையாற்றினார்.2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்த இடப்பெயர்வின் போது இப்பாடசாலை கிளி/குமாரசாமிபுரம் அ.த.க.பாடசாலையில் தற்காலிகமாக இயங்கி மீண்டும் 2010 ஆம் ஆண்டில் மீள் குடியேற்றத்தின் பின் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்துப் பாடசாலைகளினதும் ஆவணங்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் இப் பாடசாலையின் ஆவணங்கள் ஆசிரியர் திரு.நா. உதயகுமார் அவர்களால் பாதுகாப்பாகக் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டது. எனினும் யுத்தத்தின் போது இப் பாடசாலையின் நடன ஆசிரியை செல்வி .சிவகலை அவர்களையும் , ஆசிரியர் திரு.வை. வேணுகானன் அவர்களையும் இறைவன் இவ்வுலகிலிருந்து பிரித்தது வேதனைக்குரியதே. இக்காலப்பகுதியில் நாகேஸ்வரன்.சுடர்வர்ணன் 2010 ஆம் ஆண்டு க.பொ.த.(சா/த) பரீட்சையில் 8A,1C பெறுபேற்றினை பெற்று இப் பாடசாலைக்கு மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையினைப் பெற்று சாதனை படைத்து ஜனாதிபதியினால் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு இப் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் 2011 ஆம் ஆண்டு செல்வி.ந.அபிராமி தமிழ்த்தினப் போட்டியின் பிரிவு 2 பேச்சுப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்ததுடன் இவருக்கான கௌரவமாக மேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் பதவியேற்புத் தொடர்பாக அலரிமாளிகையில் இடம்பெற்ற விழாவிற்கு 17.11.2011 அன்று மாணவியால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி காரணமாக இப்பாடசாலை அழைக்கப்பட்டிருந்தது. அவ்வைபவத்தில் பாடசாலை நூலகத்திற்கு 1 00000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும், 5 00000.00 பெறுமதியான கணனி உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் மக்கள் வங்கியினால் நடாத்தப்பட்ட சிசு உதான கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும் 2011 ஆம் ஆண்டில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கீழ்ப் பிரிவில் முதலாம் இடத்தினையும், 2011,2013 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை பேச்சுப் போட்டியில் கீழ்ப் பிரிவில் முதலாம் இடத்தினையும் 2012 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகம் நடாத்திய அகில இலங்கை கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினையும் பெற்றதுடன் BRANDIX நிறுவனத்தினால் நடாத்தப் போட்டியில் திறமை விருதினைப் பெற்றதற்காக 70,000.00 ரூபா பெறுமதியான நீர் வழங்கல் வசதிகளை பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். 2011 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தால் நடாத்தப்பட்ட திருக்குறள் மனனப் போட்டியில் செல்வி கேதீஸ்வரன் அபியுகா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், கொழும்பு விவேகானந்த சபை பேச்சுப் போட்டி கீழ்ப்பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொடுத்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவ் வருடம் செல்வி சிறிதரன் .துசாளிகா கொழும்பு விவேகானந்த சபை பேச்சுப் போட்டி கீழ்ப் பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொடுத்துப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவ்வருடமே மத்திய பிரிவில் செல்வி நகுலகுமார் .சாமந்தி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். பாடசாலையின் தேவைகளும் அதிகரித்த வண்ணமிருந்தன. அக்காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.மு. சந்திரகுமார் அவர்களின் சிபாரிசின் பெயரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ.பசில் ராஜகபக்ஷ அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர்.கௌரவ. திரு.மு. சந்திரகுமார் அவர்களாலேயே அக்கட்டடம் 12.01.2012 அன்று திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டட கட்டுமான வேலை ஒப்பந்தத்தை இப்பாடசாலையின் பழைய மாணவனான திரு.சந்திரதாஸ் மேற்கொண்டிருந்தார். அவ் வேலைத்திட்டத்தில் அவருக்குக் கிடைத்த இலாபப் பணமான 800000.00 ரூபாவினை முழுமையாகப் பயன்படுத்தி 30X20 அடி கொண்ட ஒரு வகுப்பறை அதனுடன் இணைத்துக் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அக்காலப் பகுதியிலே அரசு நிதி உதவியுடன் கூடிய 60X20 அடியைக் கொண்ட 3 வகுப்பறைத் தொகுதியும், 80X20 அடியை கொண்ட 4 வகுப்பறைகளைக் கொண்ட வகுப்பறைத் தொகுதிகளும் கிடைக்கப் பெற்று பாடசாலையின் பௌதீக வளம் மேலும் மேம்படுத்தப்பட்டது. தற்போது நூலகமாக இயங்கும் நூலக கட்டடம் PSDG நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்டு பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ. மு.சந்திரகுமார் அவர்களால் 02.05.2013 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் அதிபராக திரு.ப.சிறிதரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட கொடையாளர் S.K.நாதன் அவர்களால் பாடசாலையின் பாதுகாப்பின் தேவையை உணர்ந்து தாமாகவே பாடசாலையின் கிழக்குப் புறம் மதிலை பாடசாலைக்கு கட்டி உரிய காலத்தில் கையளித்தார். அத்துடன் பிரதான மண்டபத்திற்கான மின்சார வசதி,மின்சாரவிசிறி மற்றும் பிளாஸ்ரிக் கதிரைகள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தார். பாடசாலைக்குப் பின்புறம் மைதான வேலி பழைய மாணவர் சங்கத்தினரால் அமைக்கப்பட்டது. மேலும் 2019 ஆம் ஆண்டு விஷேட கல்வி மாணவர்களான செல்வன்.ச.சுபாஸ்கரன் சமநிலை நடையில் முதலாம் இடத்தினையும், செல்வன்.இ.அனுசாந்தன் நின்று நீளம் பாய்தலில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்தனர். கல்வி அமைச்சின் நிதி அனுசரணையுடன் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டறை,மாதிரி வகுப்பு நூலகம் கொண்ட கட்டட தொகுதி அமைக்கப்பட்டது. இக்கட்டடம் 01.10.2020 அன்று கௌரவ இமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இப்பாடசாலை அதிபராக திரு.கிருஸ்ணபிள்ளை.விக்கினராஜா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பாடசாலையின் பௌதீக வளத்தேவையின் வரிசையில் பாடசாலைச் சமூகத்தினரால் உணரப்பட்ட நுழைவாயில்த் தேவை முன்னிலைப்படுத்தப்பட்டு கொடையாளர் S.K.நாதன் அவர்களின் முழுப் பங்களிப்புடன் கட்டடக் கலைஞர்களின் வண்ணத்தில் 23.07.2021 ஆம் ஆண்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது. இப் பாடசாலையின் நுழைவாயில் கொடையாளர் S.K.நாதன் அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலையின் மேற்கு, தெற்கு எல்லைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாடசாலையின் பழைய மாணவர்களையும், பிரதேச உறுப்பினர்களையும் கொண்டு மண் சுமக்கும் வேர்கள் திருவையாறு,இரணைமடு அமைப்பின் உதவியுடன் 1228 அடி நீளமான மதிலையும், மைதான மேற்குப்புற நுழைவாயிலினையும் அமைத்து 31.07.2022 அன்று பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது. மதிலின் பெயர்ப்பலகையினை அமைப்பின் உறுப்பினர் திருமதி.ஞா.கவிதா அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். நுழைவாயிலின் கதவைினை மாணவர்கள் திறந்து வைத்தனர். பாடசாலையின் பல பௌதீக தேவைகளிலும், வளர்ச்சிகளிலும் பழைய மாணவர் சங்கம்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் மண் சுமக்கும் வேர்கள் அமைப்பு, அனைத்துப் பல்கலைக்கழக திருவையாறு மாணவர் ஒன்றியம், பெற்றோர்கள்,நலன்விரும்பிகள், அனைவரும் இப்பாடசாலைக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.