நிறுவனம்:சனீஸ்வரன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சனீஸ்வரன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் திருக்கோணமலை
முகவரி சனீஸ்வரன் கோவில், திருக்கோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இந்த ஆலயம் திருக்கோணமலையிலுள்ள சனீஸ்வரனுக்கான ஒரேயொரு கோவிலாகும். ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு எதிரே, வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்குச் சமீபமாக திருக்கோணமலைப் புகை யிரத நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் மடத்தடியில் இருக்கின்றது. இவ்வாலயம் 1885ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணன் கோவில் ஆதீனகர்த்தராயிருந்த சிவஸ்ரீ கா. பஞ்சனதக் குருக்களுக்கும், அவருடைய மனைவியார் தர்மசம்வர்த்தனி அம்மாளுக்கும் கிரகதோஷம் காரணமாக சிக்கலான சுகவீனங்கள் ஏற்பட்டிருந்ததாம். சனீஸ்வரனுடைய தோஷத்தை நீக்குவதற்காக ஸ்ரீபஞ்சனதக் குருக்களும், அவருடைய மனைவியாரும் இவ்வாலயத்தைக் கட்டினார்கள். கர்ப்பக்கிரகத்தையும், அர்த்த மண்டபத்தையும் கட்டிமுடித்து இந்தியாவிலிருந்து கருவறைக்குரிய சில விக்கிரகத்தையும், எழுந்தருளி விக்கிரகத்தையும் கொண்டுவந்து இவ்வாலயத்திற் பிரதிஷ்டைசெய்து பூஜை வழிபாடுகளை நடத்திவந்தார்கள்.

இவர்களுக்கேற்பட்ட நோய் துன்பங்கள் நீங்கிவிட்டபடியால் நம்பிக்கைகொண்ட பொதுமக்களும், தங்கள் கஷ்ட துன்பங்கள் நீங்குவதற்காக இவ்வாலயத்தில் வழிபாடு செய்யத் தொடங்கினார்கள். மக்களுடைய ஆதரவு பெருகப் பெருக ஆலயமும் பெரிதாகக் கட்டப்பட்டது. தரிசன மண்டபம் பெரிதாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாலயம் கட்டப்பட்ட காலத்தில் இதனைச் சூழவுள்ள இடங்களெல்லாம் தமிழ் மக்களே வாழ்ந்திருந்தார்கள். இதனால் மக்களுடைய ஆதரவும் ஆலயத்திற்கு இருந்து வந்தது. கற்கோவிலாகவே கட்டப்பட்ட இவ்வாலயம் இன்று நல்ல முறையில் பரிபாலிக்கப்பட்டு வருவதோடு மக்களுடைய ஆதரவும் பெருகிக்கொண்டிருக்கின்றது.

திருக்கோணமலையை சிவபூமியென்று சொல்லலாம். ஆலயங்கள் அனேகமுண்டு. சிவன், சக்தி, முருகன், பிள்ளையார் என்பவர்களுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்த போதிலும் இலங்கையிலுள்ள ஒரேயொரு சனீஸ்வரன் கோவில் இதுவாயிருப்பதால், புரட்டாதி மாதத்தில் இவ்வாலயத்தில் மக்கள் திரள் திரளாக வந்து எள்ளெண்ணெய் எரித்து வழிபாடு செய்வார்கள். மக்களுக்குத் துன்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க சனீஸ்வர வழிபாடும் பெருகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாலயத்திற்குத் "தாண்டிமரம்" தலவிருட்சமாயிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். "தாண்டிக் காய்க்குள் சனியன் புகுந்ததுபோல" என்று பழமொழி சொல்லுவார்கள். தாண்டி மரத்திற்கும், சனி பகவானுக்கும் புராணசம்பந்தமான கதைகளுமிருக்கின்றன. இவ்வாலயம் கட்டப்பட்ட காலந்தொடக்கம் இந்தத் தாண்டிமரம் இருந்துவருகின்றதாம். சிவஸ்ரீ கா. பஞ்சநதக் குருக்களுக்குப்பின் அவர்களுடைய பரம்பரையினரால் பரிபாலிக்கப்பட்டுவந்த இவ்வாலயம் சிவஸ்ரீ ப. யோகீஸ்வரக் குருக்களுக்குப் பின் அவருடைய மகள் செல்வி சி. யோகீஸ்வரக்குருக்களால் தற்போது பரிபாலனம் செய்யப்பட்டு வந்துள்ளது.

புரட்டாதிச் சனீஸ்வர விரத காலங்களில் இங்கு பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. காலைச் சந்திப் பூசையோடு திருக்கதவு திறந்தால் இராப்பூசைவரையும் தொடர்ந்து பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஏராளமான பக்தர்கள் வந்துகூடி வழிபாடு செய்கின்றார்கள். இரண்டாவது உலக மகா யுத்தகாலத்திற்குமுன் ஒவ்வொரு சனிப் பிரதோஷத்திற்கும் விசேட அலங்காரப் பூசைகள் நடைபெற்று வந்தன.