நிறுவனம்:சீனக்குடா ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சீனக்குடா ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சீனக்குடா
முகவரி சீனக்குடா ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருகோணமலை நகரில் இருந்து ஒன்பது கிலோ மீற்றர் தூரத்தில் மட்டக்களப்பு செல்லும் பாதையில் சீனக்குடா கிராமம் இருக்கின்றது. திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு பாதை பிரிந்து கிண்ணியாவுக்குச் செல்கின்றது. அந்தப் பாதை வழியாகச் சென்று சீனக்குடா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை அடையலாம். திருகோணமலையை வந்தடையும் புகையிரதப் பாதையில் சீனக்குடா ஒரு பிரதான புகையிரத நிலையம். இந்தப் புகையிரத நிலையத்திற்குப் பக்கத்தில் இவ்வாலயம் இருக்கின்றது.

திருகோணமலையின் இயற்கைத் துறைமுகம் உலகப் பிரசித்தி பெற்றது. துறைமுகம் பல மலைகளாலான இயற்கை அரணைக் கொண்டது. அதனால் பல வளைகுடாக்களும் இயற்கையாகவே அமைந்துள்ளன. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் திருகோணமலையில் கடற்படைத் தளம் அமைத்தார்கள். தள அமைப்பின் ஓர் அங்கமாக பிரம்மாண்டமான நூற்றிரண்டு எண்ணெய்த் தாங்கிகள் கட்டப்பட்டன. இந்தத் தாங்கிகளில் எண்ணெய் நிரப்புவதற்காக வரும் கப்பல்களை அணைத்துக் கட்டுவதற்குக் கட்டப்பட்ட முதலாவது கப்பல் கட்டும் துறைமுக மேடையைக் கட்டியவர்கள் சீனத் தொழிலாளர்கள். அவர்கள் இவ்வேலையைச் செய்வதற்காகத் தங்கியிருந்த இடமாதலால், இந்த இடம் சீனக்குடா அல்லது சீனன்வாடி என்று பெயர் பெற்றது. இவர்கள் இந்த இடத்தில் கடலட்டைகள் பிடித்துத் தங்கள் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்தார்களாம். இதனாலும் இந்த இடத்தில் சீனர்கள் நிரந்தரக் குடிகள் போல் வாழ்ந்ததால் சீனக்குடா என்ற பெயர் நிலைத்து விட்டது.

திருகோணமலைக்குரிய விமானத் தளமும் இங்குதான் இருக்கின்றது. பிறிமா மாவாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் என்பன இங்கு அமைவதால் இன்று சீனக்குடா ஒரு தொழிற்பேட்டையாக மாற்றமடைந்திருக்கின்றது. முற்காலத்தில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரம் இங்கு வாழ்ந்திருந்தார்கள். இவர்கள் தமது வழிபாட்டுக்காக ஒரு சிறு கொட்டில் கோவிலைக் கட்டி பிள்ளையாரை வைத்து வழிபாடு செய்துவந்தார்கள். இரண்டாவது உலக யுத்தத்தின்பின் சீனக்குடாக் கிராமம் பலதுறைகளிலும் அபிவிருத்தியடைந்து வந்ததால் நிரந்தரக் குடிகளுடன் வந்தேறிய சைவ மக்களும் சேர்ந்து இந்த ஆலயத்தைச் சிறப்பாக அமைக்க எண்ணினார்கள். அதனால் ஆலய பரிபாலன சபையொன்று 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தலைவர் திரு. சுப்பிரமணியமும், செயலாளர் திரு. வீரக்குட்டி முருகேசு என்பவரும், ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் சேர்ந்து மூலஸ்தானத்தைக் கல்லால் கட்டிப் பிள்ளையார் திருவுருவத்தைக் கிண்ணியாத் துறையடியிலிருந்து ஊர்வலமாக எழுந்தருளச் செய்து ஆலயத்தில் ஸ்தாபித்து வழிபட்டு வந்தார்கள். உத்தியோகக் கடமையில் இங்கு வந்திருந்த பல சைவப் பெரியார்கள் இவ்வாலயத்தைப் பெரிதாகக் கட்டத் திட்டமிட்டு, கற்பக் கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங்களைக் கொண்டதாக கற்கோவில் கட்டி 1969 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் உத்தர நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள்.

இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள பிள்ளையாருடைய அற்புதத்தால் பல அன்பர்களுக்கு நேர்ந்த சங்கடங்கள் நீங்கியதாகவும், நம்பினோர் பலருக்குத் தும்பிக்கையான் சுப காரியங்களை நிறைவேற்றி வைத்ததாகவும் அனுபவித்தவர்கள் கூறுகின்றார்கள். இதனால் மேலும் இவ்வாலயத்தைச் சிறப்பாகக் கட்ட விரும்பிய அடியவர்கள் ஆலயத்தில் புனருத்தாரணம் செய்து பிள்ளையார் கோவிலுக்கருகில் முருகப் பெருமானுக்குத் தனியாக ஆலயமும், பரிவார மூர்த்திகளாக வைரவருக்கும், நாகதம்பிரானுக்கும் தனித்தனியே கோவிலுங் கட்டி 1980 ஆம் ஆண்டு சித்திரை மாதம் அத்த நட்சத்திரத்தில் சிவஸ்ரீ சு. சச்சிதானந்தேஸ்வரக் குருக்களைக் கொண்டு கும்பாபிஷேகம் செய்வித்தார்கள்.

ஆலயத்தின் கருவறையில் விநாயகப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். அர்த்த மண்டபத்தில் விநாயகப் பெருமானின் எழுந்தருளி விக்கிரகம் வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாலயத்தில் தற்போது மூன்று காலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக தினத்திற்கு முந்திய பத்து நாட்களும் அலங்கார உற்சவம் செய்து முடிவில் சங்காபிஷேகமும் நடைபெற்று வருகின்றது. பிள்ளையார் கதை, திருவெம்பாவை, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, வருடப் பிறப்பு முதலிய விசேட காலங்களில் சிறப்பாகப் பூசை வழிபாடுகள் அனுட்டிக்கப்பட்டு வருகின்றன. பிராமணக் குருக்கள் ஆலயப் பூசைகள் நடத்தி வருகின்றார். இவ்வாலய பரிபாலன சபையார் ஆலயத்தில் சமய வகுப்புக்களை நடத்தி, மாணவர்களுக்குச் சமயபாடப் போட்டிகள் வைத்துப் பரிசில்கள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றார்கள்.

இவ்வாலய முன்னேற்றத்திற்கு உழைப்பதற்காக இந்து மாணவர் மன்றம், இந்து மகளிர் மன்றம் என்பன இயங்கி வருகின்றன. இவ்வாலயத்திற்கு இந்து சமயத்தவர்கள் மாத்திரமல்ல பிற மதத்தவர்களும் வந்து வழிபட்டுச் செல்கின்றார்கள்.

சீனக்குடாச் சித்திவிநாயகர் ஆலயச் சூழல் விரைவாக மாற்றமடைந்து கொண்டு வருவதை அவதானிக்கக்கூடியதாய் இருக்கின்றது. தொழிற்பேட்டை போல் விரைவாக மாறி வரும் சீனக்குடாவில் பிற மதத்தவர்களும் வந்து குடியேறிக் கொண்டிருப்பதாலும், குடியேற்றப்படுவதாலும் ஆதியில் வாழ்ந்த சைவமக்களின் பாரம்பரியத்தை ஸ்ரீ சித்தி விநாயகராலயத்தைச் சிறப்பாகப் பராபரிப்பதன் மூலம் பாதுகாக்கச் சைவமக்கள் முன்னின்று உழைக்க வேண்டும்.