நிறுவனம்:செல்வநாயகபுரம் ஆலடி விக்னேஸ்வரர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகபுரம் ஆலடி விக்னேஸ்வரர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் செல்வநாயகபுரம்
முகவரி செல்வநாயகபுரம் ஆலடி விக்னேஸ்வரர் ஆலயம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருகோணமலையில் இருந்து ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் 'செல்வநாயகபுரம்' என்ற குடியேற்றக் கிராமம் இருக்கின்றது. இலங்கை சுதந்திரமடைந்த பின் இலங்கையின் பல பாகங்களிலும் புதிய குடியேற்றக் கிராமங்கள் தோன்றின. திருகோணமலையிலிருந்து நிலாவெளிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் சோலையடி வைரவர் கோவில் சந்தியிலிருந்து மேற்குப்பக்கமாக கதிர்காமத்தம்பி வீதி பிரிந்து செல்கின்றது. அந்த வீதி வழியே சென்று இந்த ஆலயத்தை அடையலாம். 1960 ஆம் ஆண்டு கிராமக் குடியேற்றம் நடைபெற்ற போது திருகோணமலைப் பட்டினத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்று குடியேறிய மக்கள் செல்வநாயகபுரத்தில் வாழ்கின்றார்கள். தமிழ் மக்களின் தந்தை திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் ஞாபகார்த்தமாக இந்தக் குடியேற்றத் திட்டம் நடைபெற்றது. இப்பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்கின்றார்கள்.

"கோவில் இல்லா ஊரில் குடியிருக்கக்கூடாது" என்று நினைத்து அங்கு குடியேறிய மக்கள் செல்வநாயகபுரம் கிராமத்தின் மத்தியில் இந்த ஆலயத்தைக் கட்டினார்கள். ஆலயங்கள் நிறைந்த திருகோணமலைப் பட்டினத்தில் வாழ்ந்து ஆலய வழிபாடு செய்து பழக்கப்பட்ட மக்கள் இவ்வாலயத்தைக் கட்டிப் பயபக்தியோடு வழிபட்டு வந்தார்கள். கற்பக்கிரகம், அர்த்தமண்டபங்களைக் கொண்ட இந்தக் கற்கோவிலின் கருவறையில் விக்கினேஸ்வரப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். அக்கிராமம் புதிய குடியேற்றத் திட்டத்தில் அமைக்கப்பட்டதால் காடு திருத்தி நாடாக்கும் பெருமுயற்சியில் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். இந்தக் கஷ்டத்தின் மத்தியிலேயே இந்த ஆலயமும் அமைக்கப்பட்டது. இதனால் இந்த ஆலயத்தை அமைக்கப் பெரிதும் சிரமப்பட்டார்கள். இப்போதும் சிரமப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.

வருடா வருடம் நடைபெறும் கோணேசப் பெருமானுடைய ஊர்வலத்தில் கோணேசப் பெருமானை இந்தக் கிராமத்து மக்கள் விக்கினேஸ்வரர் ஆலயத்தில் வரவேற்று விசேட பூசைகள் நடத்தி உபசரித்து அனுப்புவார்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை நித்திய பூசையும், நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை முதலிய விசேடகால பூசைகளும் நடைபெற்று வருகின்றன. ஆலயத்தில் சில திருத்தவேலைகளைச் செய்து 09.10.1980 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தைப் பரிபாலன சபையே நடத்தி வருகின்றது. பரிபாலன சபைத் தலைவர் திரு. நா. கணேசமூர்த்தி அவர்கள் இவ்வாலயத்தின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்த ஒருவர்.