நிறுவனம்:திரு/ அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருக்கோணமலை நகரம்
முகவரி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், திருக்கோணமலை
தொலைபேசி 0262222760
மின்னஞ்சல் -
வலைத்தளம்

திருக்கோணமலையின் அடையாளங்களில் ஒன்றாகவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும் புகழ்பூத்து விளங்கும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயமாகும். அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகிய திருக்கோணேஸ்வர ஆலயத்தை பார்த்த வண்ணம், திருக்கோணமலை நகர மத்தியில் அழகாகவும், அருள்நிறைந்து புனிதமாகவும் அமையப்பெற்றுள்ளது. திருக்கோணமலை நகரின் அடையாளங்களாக கூறப்படும் ஆலயங்களில் பத்திரகாளி அம்பாள் ஆலயத்திற்கான இடம் தவிர்க்கமுடியாத ஒன்று. திருவிழா காலத்தில் ஏனைய ஆலயங்களை விட இங்கு மக்கள் அதிகளவில் வருகை தந்து, அம்பாளின் அருளை பெறுவதனை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாலயத்தின் வரலாறு கர்ணபரம்பரைக் கதைகள், கல்வெட்டுக்கள், பழைய சாசனங்கள் என்பவற்றின் அடிப்படையிலும், ஆலயத்தில் இருக்கும் விக்கிரகங்கள், வாகனம், பொருட்கள் போன்றவற்றையும் கொண்டும் முதலாம் ராஜேந்திர சோழனுடைய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற காணப்பட்டுள்ளது என வரலாற்று பேராசிரியர் திரு. செ. குணசிங்கம் அவர்கள் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இவ்வாலயம் அதற்கு முன்னர் இருந்தே அமையப் பெற்றிருந்தது என்பது இனங்காணப்பட்டுள்ளது..

கர்ணபரம்பரைக் கதைகளின் அடிப்படையில் நீண்ட காலத்திற்கு முன்னர் குறித்த இடத்தில் அகழி தோண்டிய போது தகளி ஒன்று கிடைத்ததாகவும், அதற்குள் இருந்த அம்பாளின் தாமிரக விக்கிரகம் இப்போதும் ஆலயத்தில் இருக்கின்றது எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் ஆலயத்தில் இருக்கும் சிங்கவாகனம் இந்தியாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டதாகவும், குறித்த கப்பல் ஆலயத்திற்கு நேராக கடலில் அசையாது நின்றதாகவும் அதனால் கப்பல் தலைவன் தனது கனவின் அடிப்படையில் சிங்க வாகனத்தை ஆலயத்திற்கு கொடையாக வழங்கியதாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் அம்பாளின் இவ்வாலயம் பயபக்தி ஏற்படுத்தும் வகைகள் இடம்பெற்ற சம்பவங்களை கர்ணபரம்பரைக் கதைகள் குறிப்பிடுகின்றன. யாவுகப் பெண் ஒருவர் தலைவிரி கோலமாக அம்பாளின் சன்னிதானத்தை உதாசீனம் செய்து சென்றமையால் கழுத்து வாங்கி, துன்பப்பட்டுள்ளார். தனது குற்றத்தை உணர்ந்து தலைமயிரை நேர்த்திக்கடன் அளித்து, அருள் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முன்னைய காலத்தில் இவ் ஆலயத்தில் குருக்கள் ஒருவர் தனது பிள்ளையை பூஜை முடிந்த பின்னர் ஆலயத்தில் மறந்து விட்டு விட்டு சென்று விட்டதாகவும், சாஸ்திர விரோதமாக அவரது மனைவியின் கட்டாயத்தின் அடிப்படையில் ஆலயத்தை இரவில் திறந்து பிள்ளையை எடுக்க முயற்சித்த பொழுது, காவல் தெய்வமாகிய வைரவர் அந்த பிள்ளையை இரண்டாக கிழித்து போடும் உக்கிர மூர்த்தியாக தோற்றமளித்ததாகவும், அதன்பின்னர் உக்கிர மூர்த்தி வைரவரை மந்திர, தந்திர மூலம் இடம்பெயர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளக்கோட்டன் காலத்தில் இவ்வாலயம் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் எல்லை கோயில்களில் ஒன்றாக இருந்துள்ளது. கோணேசப்பெருமான் ஆண்டுதோறும் நகர்வலம் வரும்பொழுது ஒரு இரவு இவ்வாலயத்தில் தங்கிச் செல்வது செல்வதன் மூலம் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கும் பத்திரகாளி அம்பாள் ஆலயத்திற்குமான தொடர்பு வெளிப்படுகின்றது.

பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் காணப்படும் கோயில் கல்வெட்டு 1972ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு சோழ மன்னனின் மெய்கீர்த்தி பற்றி விளம்புகிறது. இக்கல்வெட்டு பற்றிய தகவல்களை வழங்கி, ஊக்கம் அளித்தவர் அப்போதைய சாம்பல்தீவு கிராம சபை தலைவராக இருந்த திரு. வ. நா. தம்பிராசா அவர்கள் ஆவார். இந்த கல்வெட்டு ஒன்பது அடி உயரமும், இரண்டு அங்குல அகலமும், ஒன்பது அங்குல நீளமும் உடையது. மூன்று பக்கங்களில் எழுத்துக்கள் காணப்படுகின்றது. இக்கல்வெட்டின் நான்காவது பக்கம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள், எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1933 ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் திருத்தப்பணிகளுடன், இடம்பெற்று அதன் பின்னர் 1947 இல் இரண்டாவது கும்பாபிஷேகம் மகாமண்டபம் கோபுரமும் திருத்தி அமைக்கப்பட்டு இடம்பெற்றது. பின்னர் மூன்றாவது கும்பாபிஷேகம் 1962 இல் வசந்த வசந்த மண்டபத்தையும் மேலும் சில திருத்தங்களுடன் இடம்பெற்றது. பல திருப்பணிகள் இடம்பெற்று 06.02.1980 ஆம் ஆண்டு சம்பூர்ண கும்பாபிஷேகம் மிக விமர்சையாக இடம்பெற்றது. 1972 இல் இருந்து மூன்று சித்திர தேர்கள் செய்யப்பட்டு இரதோற்சவம் வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் பத்திரகாளி அம்பாளுக்கும் திருக்கோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மனுக்கும், சல்லி அம்பாளுக்கும் நீண்ட காலம் தொட்டு தொடர்புகள் இருந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாலயத்தில் காணப்படும் காளியானவள் கருத்த கூந்தலையும், அடியார்களின் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பவளாகவும், ஆறாம் பிறை நெற்றி, கண் உடையவளாகவும்; புருவங்கள் கருநீல மலர் போன்ற தோற்றம் உடையவளாகவும், தர்மத்தை ஒளி பொருந்திய பாதங்கள் பக்தர்களை காப்பதாகவும் காணப்படுகின்றது.

இவ்வாலயத்தின் சிறப்புக்கும், அழகுக்கும் முக்கிய காரணமாக விளங்கும் தற்போதைய ஆலய ஆதினகர்த்தா மற்றும் பிரதமகுரு பிரம்மஸ்ரீ சு. கு. சோமஸ்கந்தக் குருக்கள் தனது 16 ஆவது வயதில் அவரது தந்தையாரின் இறப்பின் பின்னர் ஆலய பூஜை பொறுப்பெடுத்து சிறப்பாக திருப்பணியாற்றி, ஆலயத்தை இலங்கையிலேயே அடையாளப்படுத்தும் ஒரு ஆலயமாக பேணி வருகின்றார். அம்பாள் மீதான இவரது பக்தி, அம்பாளை விதம் விதமாக அலங்கரித்து, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு திருவாசி, வாகனம் என பூசித்து வருகின்றார்.

இவ்வாலயத்தில் வைகாசிப்பொங்கல், நவராத்திரி விழா, கும்ப விழா, இலட்சார்ச்சனை, கேதார கௌரி விரதம் போன்றவை வருடாந்தம் மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக வைகாசி பொங்கல் அன்று ஆலயத்தைச் சுற்றிலும் அதிகளவான பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு மிகச் சிறப்பாக இடம்பெறும். நவராத்திரி காலத்தில் புரட்டாதி மாதம் பிரதமை தொடக்கம் ஒன்பது இரவுகள் இயந்திரப் பூஜைகள் இடம்பெற்று நவமியன்று சூரன்போர் இடம்பெறும். இக்காலப்பகுதியில் அம்பாள் விசேடமாக அலங்கரிக்கப்பட்டு, அழகு பொங்க காட்சியளிப்பார்.

அத்துடன் திருக்கோணமலை நகருக்கு மிக விசேடமான விழாவான கும்ப விழாவும் இவ்வாலயத்தில் இடம்பெறுகின்றது. திருக்கோணமலையில் இருக்கும் பல ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் கும்பங்கள் கட்டாயம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு வந்து செல்லும் மரபும் காணப்படுகின்றது. விதம்விதமாக கும்பங்கள், கரங்கள் தயார் செய்யப்பட்டு ஆலயங்களில் இருந்து ஊர்வலமாக நகரைச் சுற்றி வரும். அத்துடன் அன்றைய தினத்தில் இவ்வாலயத்தில் “மானம்பூ திருவிழா” இடம்பெறும்.

திருக்கோணமலையை பொருத்தவரை கேதார கௌரி விரதத்துக்கு விரதம் கடைப்பிடித்து விரத நூல் எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் அடியார்கள் இவ்வாலயத்தில் காத்திருந்து விரத நூலை பெற்றுச் செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது. திருக்கோணமலையின் வரலாற்றில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் அடையாளப்படுத்தல் இன்றியமையாதது என்பதுடன், தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி நிற்கின்றது.