நிறுவனம்:திரு/ சதுர்வேதி மங்கள நாயகி சமேத சதுர்வேதி மங்களநாதர் பெருங்கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதுர்வேதி மங்கள நாயகி சமேத சதுர்வேதி மங்களநாதர் பெருங்கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் கந்தளாய்
முகவரி சதுர்வேதி மங்கள நாயகி சமேத சதுர்வேதி மங்களநாதர் பெருங்கோவில், பேராறு, கந்தளாய், திருக்கோணமலை
தொலைபேசி 0773060611
மின்னஞ்சல்
வலைத்தளம்


திருக்கோணமலை கந்தளாய் நகரத்தில் அமைந்துள்ள "சதுர்வேதி மங்கள நாயகி சமேத சதுர்வேதி மங்களநாதர் பெருங்கோவில்" எனப்படும் "கந்தளாய் சிவன் ஆலயம்" கந்தளாய் குளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கந்தளாய் நகர பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள கிராமத்தின் பெயர் பேராறு எனப்படும் பகுதியாகும்.

இலங்கையை 11 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழ மன்னர்களில் ராஜேந்திர சோழன் எனப்படும், ராஜராஜ சோழனின் மகனால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதுடன், குறித்த காலப் பகுதியில் அந்தப் பகுதி "பிரம்மதேயம்" எனும் பெயருடன் அழைக்கப்பட்டு, பல அந்தணர்கள் கந்தளாய்ப் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஆலயத்தில் பல புராதான கல்வெட்டுகளும், கருங்கல் வேலைப்பாடுகளும் கூடிய தூண்களும் காணப்படுகின்றன. 11 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் குறித்த ஆலயம் தொடர்பில் தொடர்ச்சியான வரலாறுகள் கிடைக்கப்பெறாத நிலையில், 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின் கந்தளாய்க் குளத்தை மீள் கட்டுமானம் செய்து குறித்த பகுதியில் பாரிய குடியேற்ற திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அங்கு 84 சைவ குடும்பங்கள் குடியேற்றப்பட்டு அவர்களின் குடியேற்ற காலப்பகுதியில் குறித்த ஆலயம் மீள அடையாளம் காணப்பட்டு, அந்த மக்களால் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அரசினால் குறித்த ஆலயத்திற்கு நான்கு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டதுடன், அதில் இரண்டு ஏக்கர் காணி "பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயம்" எனப்படும் தமிழ் பாடசாலை ஆரம்பிப்பதற்கு ஆலயத்தினால் வழங்கப்பட்டதுடன், மிகுதி பகுதியில் ஆலயம் ஒரு மடாலயமாக அமைக்கப்பட்டு வழிபாடு இடம் பெற்று வந்துள்ளது.

பின்னர் 1975 ஆம் ஆண்டு அளவில் குறித்த ஆலய நிர்வாக சபையினால் முதலாவது கும்பாபிஷேகம் மடாலயத்தில் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த ஆலயம் உலகத்தின் பார்வைக்கு தெரிய தொடங்கியதுடன் பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியர் புஷ்பரட்னம், பேராசிரியர் இந்திராபாலா ஆகியோரின் வருகையுடன் குறித்த ஆலயம் ஒரு வரலாற்று சுவடு எனும் வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பல இன்னல்களுக்கு மத்தியில் 2004 ஆம் ஆண்டு அழகிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் இடம்பெற்றது. பின்னர் 2017 ஆம் ஆண்டில் ஆலயம் மீண்டும் பாலஸ்தானம் செய்யப்பட்டு, 24.03.2023 அன்று மகா கும்பாபிஷேகம் இடம் பெற்றதுடன், ஆலயம் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது ஆலய பரிபாலன சபையின் தலைவராக திரு. க. ரவிராஜன் அவர்கள் தலைமையிலான நிர்வாக சபை ஆலயத்தை பராமரித்து வருகின்றது. மேலும் குறித்த ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று கற்சாசனங்களில் ஆலயம் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1977 ஆம் ஆண்டு கந்தளாய்ப் பட்டினம் பிரதேச சபையால் வடிகால் வெட்டும் போது ஒரு வெண்கல சிலையும், பூஜை மணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் வரலாற்றுகளின் அடிப்படையில், இந்த ஆலயத்தின் கிழக்கு பக்கமாக 400 அடி தூரத்தில் தெப்பக்குளம் ஒன்று இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

இவ்வாறு பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் உள்ள போதிலும், பெரும்பாலான தமிழர்களுக்கு போதிய அளவு அறிமுகம் இல்லாத ஒரு ஆலயமாகவும் இது காணப்படுவது கவலைக்குரிய விடயம்.