நிறுவனம்:தி/ சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி/சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சாம்பல்தீவு
முகவரி தி/சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயம், திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மெதடிஸ்த மிஷன் எனப்படும் நிறுவனத்தினால் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கல்வி சாலைகள் அமைக்கப்பட்டு, கல்வி புகட்டப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட கல்வி சாலைகளில் ஒன்றே சாம்பல்தீவு மகாவித்தியாலயமும் ஆகும். இப்பாடசாலையானது சாம்பல்தீவு சந்தியிலிருந்து 1 கிலோமீற்றர் தொலைவில் வீதி ஓரமாக செம்பாடு என்னும் பகுதியைச் சார்ந்து அமைந்துள்ளது. பாடசாலை 1880 ஆண்டில் ஓலைக்கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்டது. 50 இற்கும் குறைவான பிள்ளைகளே இப்பாடசாலையில் கல்விகற்றனர். பின் இப்பாடசாலை படிப்படியாக உயர்வடைந்து வித்தியாலயம் என்னும் தரத்தை அடைந்து 1C தரப்பாடசாலையாக விளங்குகின்றது. அதாவது க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவுவரை கொண்ட பாடசாலையாக விளங்குகின்றது. மெதடிஸ்த மிஷனுக்குரிய பாடசாலையாக இருந்த இப்பாடசாலையை 1960 ஆண்டு அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. 1970 ஆண்டளவில் இப்பாடசாலையில் க.பொ.த சாதாரணதரம் ஆரம்பிக்கப்பட்டது. 01.02.1977இல் இருந்து இப்பாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.

இப்பாடசாலையில் கணனி கற்கை நிலையம், பல்லூடக நிலையம், நூலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், சமூக கற்கை நிலையம், சிறிய மைதானம் ஒன்று கூடல் மண்டபம், சரஸ்வதி ஆலயம் ஆகிய வசதிகள் உண்டு. மாணவர் பாடவிதான செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றனர். 2014 இல் 05 மாணவர்களும் 2015 இல் 06 மாணவர்களும் உதவிமானியம் பெறும் மாணவர்களாக சித்தியடைந்துள்ளனர். க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல மாணவர்கள் பொ.த உயர்தரத்திற்குச் செல்கின்றனர். உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கும் செல்கின்றனர்.

இப்பாடசாலை பல சிறந்த கல்விமான்களை உருவாக்கியுள்ளது. இங்கு கற்றவர்கள் பலர் உயர் தரவகுப்புக்களில் நகரப்பகுதி பாடசாலைகளில் இணைந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகவும், டாக்டர்களாகவும், பொறியியலாளர்களாகவும் உருவாகியுள்ளனர். க.பொ.த உயர் தரம், கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆகிய தகுதியுடனும் பல பழைய மாணவர்கள் சிறந்த தொழில்களில் உள்ளனர். ஆசிரிய சேவையில் இணைந்த சிலர் அதிபர் சேவை தரம் பெற்றும் உள்ளனர். இவ்வாறான ஒரு சிறந்த பழைய மாணவர் பரம்பரையை இப்பாடசாலை கொண்டுள்ளது. இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர் ஈடுபடுத்தப்படுகின்றனர். விளையாட்டுப்போட்டி, தமிழ்மொழித்தினம், ஆங்கிலதினம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி வலயமட்ட வெற்றிகளை பெற்றுள்ளனர்.

கீழ்வருவோர் இப்பாடசாலையில் கடமையாற்றியுள்ளனர். அதிபர்களாக,

திரு. S. கணபதிப்பிள்ளை திரு.சின்னத்தம்பி - 1910 - 1930 திரு. N. காசிநாதர் - 1934 - 1935 திரு. D. V. கந்தவனம் - 1935 - 1936 திரு. R. கெஜரட்ணம் - 1936 - 1940 திரு. J. ஜோன் முத்தையா - 1941 - 1948 திரு. S. K. செல்வநயினார் - 1949 - 1955 திரு. S. கந்தையா - 1956 - 1959 திரு. D. V. கந்தவனம் - 1960 - 1963 திருமதி. S. காசிநாதர் - 1964 - 1965 திரு. V. குமாரசாமி - 1966 - 1968 திரு. P. பொன்னையா - 1969 - 1970 திரு. S. தம்பிப்பிள்ளை - 1970 - 1971 திரு. K. வேலுப்பிள்ளை - 1972 - 1976 திரு. S. செல்லத்துரை - 1977 - 1990 திரு. S. சிவப்பிரகாசம் - 1990 - 1996 திரு. T. சிதம்பரப்பிள்ளை - 1997 - 2003 திரு. K. யோகானந்தன் - 2004 - 2010 திரு. V. மகேஸ்வரன் - 2010 - 2013 திருமதி. உதயரட்ணம் - 2013 - 2016

இக்கிராமத்தில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளிலிருந்தும் தரம் 2, தரம் 11 ஆகிய வகுப்புக்களுக்குரிய அரச பரீட்சைகளின் பொருட்டு மாணவர்கள் நகரப்பகுதி பாடசாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இச்சிரமத்தை போக்கும் பொருட்டு இப்பாடசாலை 2004ஆம் ஆண்டு முதல் தரம் 5, தரம் 11 ஆகியவற்றின் பொதுப்பரீட்சைக்குரிய நிலையமாக கல்வித்திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.