நிறுவனம்:பன்குளம் பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பன்குளம் பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பன்குளம்
முகவரி பன்குளம் பிள்ளையார் கோவில், பன்குளம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலைப் பட்டினத்திலிருந்து அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபத்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிராமம் பன்குளம். இங்கிருக்கும் குளத்தின் பாய் தயாரிப்பதற்குரிய "பன் என்று சொல்லப்படுகின்ற ஒரு வகைப் புல் வளர்வதால், பன்குளம் எனப் பெயர் பெற்றது. அனுராதபுரத்திற்குச் செல்லும் வீதி அமைத்த காலத்தில், வீதியமைப்புவேலை செய்த தொழிலாளர்கள் இந்த இடத்தில் வாடியமைத்துத் தங்கியிருந்தார்கள். அவர் ஒருவர் ஒருநாள் இயற்கைக் கடன் கழிப்பதற்காகக் காட்டிற்குள் சென்றபோது ஒரு குருந்த மரத்தடியில் எதிர் பாராதபடி ஒரு ஒளி மிகப் பிரகாசமாகத் தோன்றியதாம். அந்த ஒளியினால் அவர் அறிவுமயங்கி விழுந்துவிட்டார். அங்கு இருந்த தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக இருந்த திரு. வேலுப்பிள்ளை என்பவர் இதனை அறிந்து அவரைத் தூக்கிக்கொண்டு வந்து மயக்கம் தெளிவித்தார்கள். மயங்கித் தெளிவந்தவர் தாம் குருந்த மரத்தடியிற் கண்ட அதிசயத்தைக் கூறினார். இந்தத் தெய்வீக நிகழ்ச்சியை உணர்த்த வேலுப்பிள்ளை என்பவர் குருந்த மரமிருந்த இடத்திலுள்ள காட்டை வெட்டித் துப்புரவாக்கி அவ்விடத்தில் ஒரு சிறு கொட்டில் கட்டிப் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்தார்.

கடந்த என்பது வருடங்களாக இந்தக் கோவிலில் பூசை செய்துவந்த திரு. செட்டிப்பிள்ளை பொன்னையா என்பவர் இந்த வரலாற்றைக் கூறியுள்ளார். திரு. வேலுப்பிள்ளை என்பவர் அதிசயமான ஒளிதோன்றிய குருந்த மரத்தடியில் சுமார் இருநாறு வருடங்களுக்கு முன் கட்டிய கொட்டிற் கோவிலை அவருக்குப் பின் அவருடைய மகன் திரு. தாமோதரம்பிள்ளை ஆதரித்து வந்தார். இவருடைய மறைவுக்குப் பின் அவருடைய மகனாகிய திரு. சீவரெத்தினம் என்பவர் இந்தக் கொட்டிற் கோவிலைக் கல்லால் கட்டிப் பிள்ளையாரை ஸ்தாபித்து பூசை விழாக்களைச் செய்வித்து வந்தார். அக்காலத்தில் இந்தக் கோவில் மிகவும் பிரபல்யமடைந்திருந்தது. மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாத பண்டைக் காலத்தில் மாட்டு வண்டிகளில் மக்கள் வந்து பொங்கிப் பூசை வழிபாடுகளைச் செய்துவந்தார்கள். இந்தக் கோவிலைத் தாண்டிச் செல்லும் வாகனங்களும், பிரயாணிகளும் பிள்ளையாருக்குத் தேங்காயுடைத்துக் காணிக்கை செலுத்தாமல் செல்வதில்லை.

ஆலயத்தின் கருவறையில் சிவரேத்தினம் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட பிள்ளையாரே இன்றும் இருக்கின்றார். இரண்டடி உயரமுள்ள லிங்கவடிவமான பெரிய கல்லில் பிள்ளையாரின் திருவுருவம் செதுக்கப்பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில், வைரவர், நாகதம்பிரான், பத்தினியம்மன் என்பன வைக்கப்பட்டிருக்கின்றன. நவராத்திரியில் பத்தினியம்மன் முகக்களையைக் கும்பத்தில் ஆவாகனம் செய்து வைத்து அலங்கார உற்சவம் பத்து நாட்களுக்கு நடைபெற்று வருகின்றது. ஆவணிச் சதுர்த்தி, திருவெம்பாவை முதலிய விசேட பூசைகளும் நடைபெறுகின்றன. பின் பொன்னையாவின் மகன் திரு. முருகையா என்பவர் பூசைசெய்து வருகின்றார். ஆதியில் இந்தக் கோவிலை ஸ்தாபித்த வேலுப்பிள்ளை என்பவர் சிறந்த விஷவைத்தியர். அவர் அக்காலத்திலிருந்த அரசாங்க அதிபரின் மனைவிக்கு விஷம் தீண்டியபோது விஷநீக்கம் செய்து குணப்படுத்தியதினால் வெள்ளைக்கார் அரசாங்க அதிபர் இந்தக் கோவிலுக்கு முன்னூற்று முப்பத்து மூன்று ஏக்கர் காணியை நன்கொடையாக வழங்கியிருந்தாராம். இப்பொழுது ஒரு ஏக்கர் காணிகூட ஆலயத்திற்குச் சொந்தமாயில்லையென்று கூறுகின்றார்கள்.

தற்பொழுது ஆலயம் மீள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, அழகுடன் உள்ளது.