நிறுவனம்:புனித யூதாததேயு ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புனித யூதாததேயு ஆலயம்
வகை கிறிஸ்தவ ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கனகபுரம்
முகவரி கனகபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

கனகபுரம் படித்த படித்த வாலிபர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1 ஆம் பண்ணையிலிருந்து 7 ஆம் பண்ணை வரை காணிகளில் வாலிபர்கள் குடியேறியிருந்த சமயம் 1960 ஆம் ஆண்டு 11 ஆம் பண்ணை வரை குடியேறுவதற்காக 7 ஆம் பண்ணையில் தங்கியிருந்து காடுகளை வெட்டி பின் 10 ஆம் பண்ணையில் தற்காலிக கொட்டகை அமைத்துத் தங்கியிருந்த சமயம் காட்டு மிருகங்கள்,விச ஜந்துக்கள் இவற்றில் இருந்து பாதுகாப்பாக தெய்வத்தின் துணையை நாடினர். அதன் காரணமாக இந்து சமய வாலிபர்கள் பாலைமரத்தின் கீழ் பிள்ளையார் சிரை ஒன்றினை வைத்து வழிபட்டனர். அதுவே தற்போது கருணாகரப் பிள்ளையார் என அழைக்கின்றனர்.அதற்கு அண்மையாக கத்தோலிக்க வாலிபர்கள் கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலரான புனித யூதாததேயு புனிதருக்கு சிறிய கொட்டில் அமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பின்னர் ஒவ்வொருவரும் குடியேறிய பின்னர் ஆலயத்தின் தேவைக்காக கனகபுரம் வீதியின் அருகே தெற்குப்புறமாக அந்த ஆலயம் அமைக்கப்பட்ட இடத்தில் கத்தோலிக்க வாலிபர்களான கிறிஸ்ரோபர், வோல்ரர் அம்புரூஸ், அஞ்சலோமரியதாஸ், பிலிப்பு இராசநாயகம், யோச் இம்மானுவேல்,ஞானானந்தன், சவரிமுத்து அன்ரன்,மரியதாஸ்,பற்றிக்குலநாயகம், வரப்பிரகாசம்(அருள்) ஆகியவர்களால் காடுவெட்டி அண்ணளவாக 3 ஏக்கர் காணியை யூதா ஆலயத்திற்கு சொந்தமாக்கிக் கொண்டனர். ஆரம்பத்தில் சிறிய ஆலயமாக ஓலையால் வேயப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்ற வந்தன.பின்னர் குடியேறிய அமரத்துவம் அடைந்த வஸ்தியாம்பிள்ளை அவர்கள் இறுதிவரை ஆலயத்தின் மூப்பராக இருந்தார். முதலில் இந்த ஆலயமானது கிளிநொச்சி திரேசாள் ஆலயப் பங்கின் கீழ் செயற்பட்டு வந்தது. பின்னர் உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயப் பங்கின் கீழ் மாற்றப்பட்டு தற்போதும் இயங்கி வருகின்றது. 1993 ஆம் ஆண்டில் இவ்வாலயம் ஓட்டினால் வேயப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது முற்றாக அழிவடைந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு மரியதாஸ் மகளான யூலியற்றின் முயற்சியின் பலனாகவும் பலரது பங்களிப்புடனும் அழகான சிறிய ஆலயமொன்று அமைக்கப்பட்டது. இவ்வாலயமானது 2009 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது சேதமடைந்த நிலையில் மீளவும் 2010 ஆம் ஆண்டு மரியதாஸ் அஞ்சலோவின் மகளான கலிஸ்ராசாமினி அவர்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டது. இப்பகுதியில் பாலர் பாடசாலை எதுவும் இல்லாத சூழ்நிலையில் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் பங்குத்தந்தையாக இருந்த போது அவரின் முயற்சியில் யேசுசபை நிறுவனத்தால் (JRS) சிறிய யூதா முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இம்முன்பள்ளி தற்போது World vision நிறுவனத்தின் நிதியுதவியுடன் கட்டிடம் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றது. மேலும் யூதா ஆலயத்தை மெருகூட்ட வஸ்தியாம்பிள்ளை மருமகனான அமரர் சூசை இராசரத்தினத்தால் முகப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காடசி அளிக்கின்றது. இவ்வாலயத்திற்கு பண்டக்காப்பறையை ஜெறோம் பிறாங் குடும்பத்தினரால் அமைத்துத் தரப்பட்டுள்ளது. 8ஆம் பண்ணை தொடக்கம் 11 ஆம் பண்ணை வரையுள்ள கத்தோலிக்க மக்களும் இந்துசமய சகோதரர்களும் புனிதர் மீது பற்றுக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். வாரத்தின் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருடத்தின் சித்திரை நடுப்பகுதியில் திருவிழா இடம்பெற்று வருகின்றது.கைவிடப்பட்டவர்களின் புனிதரான புனித யூதாதேயு கனகபுரத்தையும் இங்கு வாழும் மக்களையும் பாதுகாத்து வருகின்றார்.


.