நிறுவனம்:மடத்தடி மாரியம்மன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மடத்தடி மாரியம்மன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் மடத்தடி
முகவரி மடத்தடி மாரியம்மன் கோவில், திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலையிலுள்ள "மடத்தடி" என்னுமிடம் இற்றைக்குச் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே முக்கியமான இடமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த மடத்தடியில் தான் கிருஷ்ணன் கோவிலும், மாரியம்மன் கோவிலும் இருக்கின்றது. திருக்கோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் திருஞானசம்பந்தர் வீதியில் மாரியம்மன் கோவில் காணப்படுகின்றது.

இரண்டாவது உலக மகாயுத்தகாலத்தில் திருக்கோணமலையில் ஜப்பானியரின் குண்டு வீச்சினால் மக்கள் இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். இந்த யுத்தக் கெடுபிடியினால் ஆலயப் பராபரிப்புச் சீர்குலைந்துவிட்டது. 1938ஆம் ஆண்டு இவ்வாலயத்தில் கடைசியாகப் பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் 1945ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்வதற்காக "பாலஸ்தாபனம் நடைபெற்று திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், தவிர்க்கமுடியாத பல காரணங்களால் திருப்பணிவேலைகள் பூர்த்தியடையாத நிலையில் இன்றும் இருந்துகொண்டிருக்கின்றது.

போத்துக்கேயரால் கோணேசராலயம் தரைமட்டமாக்கப்பட்ட பின் திருக்கோணமலை அன்னியருடைய கைவசமிருந்தது. அக்காலத்தில் திருக்கோணமலையில் ஆங்காங்கே சிறிய சிறிய சைவக்கோவில்கள் இருந்த போதிலும், சைவப் பெருங்குடிமக்கள் கோணேசராலயத்தைப் பெருங்கோயிலாகக் கொண்டு வழிபட்டு வந்தவர்களாதலால், அக்கோவில் தரைமட்டமாக்கப்பட்டபின் திருக்கோணமலையிலிருந்த சிறு கோவில்களைப் பறங்கியருக்குப் பயந்து பயந்து மறைமுகமாக ஆதரித்து வந்தார்கள். இவ்வாறு ஆதரிக்கப்பட்ட ஆலயங்களில் மாரியம்மன் கோவிலுமொன்று. இந்தியாவிலிருந்து வந்து இங்கு வாழ்ந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் தாம்வரும் போது கொண்டுவந்த முத்து மாரியம்மன் திருவுருவமொன்றை (தாமிரவிக்கிரகம்) இப்போது மாரியம்மன் கோவில் இருக்குமிடத்தில் வைத்து ஆதரித்து வந்தாராம்.

அந்த மாரியம்மனைக் கும்பத்தில் வைத்துக் கட்டி, மாரியம்மன் கும்பத்தை இந்தக் கோவிலிலிருந்து புறப்பாடுசெய்து வீதிகளில் எடுத்துச் செல்வாராம். இதனை மக்களும் பயபக்தியுடன் வழிபட்டு ஆதரித்துவந்தார்கள். இந்தக் கும்பத்தை அந்தப் பக்தர் கன்னியாய்க்கும் எடுத்துச் செல்வதுண்டு. ஒருநாள் அங்கு சென்றிருந்தபோது திருக்கோணமலையை ஆட்சிசெய்த பறங்கிய அதிகாரி ஒருவர் இந்தக் கும்பத்தை ஏளனம் செய்து காலால் உதைத்துத் தள்ளிவிட்டார். அன்று தொடக்கம் அந்த அதிகாரி நோய் வாய்ப்பட்டு வருந்தினாராம். இந்த விஷயத்தையறிந்த சிலர் அதிகாரியிடம் முத்துமாரியம்மனுடைய தெய்வீக சக்தியையும், அதிகாரி செய்த அபசாரத்தையும் கூறினார்கள். அதிகாரியுடைய விருப்பப்படி அந்தப் பக்தர் அழைக்கப்பட்டார். அவர் அதிகாரிக்கு விபூதிப் பிரசாதம் கொடுத்து மந்திர சக்தியால் நோயைக் குணப்படுத்தினார்.இதனால் திருப்தியும், மகிழ்ச்சியுமடைந்த அதிகாரி தற்போது மாரியம்மன்கோவிலிருக்கும் காணியையும் (சுமார் பத்து ஏக்கர்) கன்னியாவிலுள்ள கமுகஞ்சோலைக் காணியையும் நன்கொடையாக உபகரித்தார். தற்போது மாரியம்மன் கோவிலிருக்குமிடத்தில் முன்னிருந்த சிறிய கோவிலைத் திருத்திக்கட்டி அந்த இந்தியப் பக்தர் தான் கொண்டுவந்த மாரியம்மன் சிலையை வைத்துப் பிரதிஷ்டை செய்தார். இந்த விக்கிரகம் இன்றும் மாரி யம்மன் கோவிலில் வழிபாட்டு மூர்த்தமாயிருந்துவருகின்றது.

இந்தியப் பக்தருடைய மறைவுக்குப் பின் அவரோடு நட்புறவுகொண்டிருந்த குருகுலத்தவர்களுடைய பராபரிப்பில் இவ்வாலயம் இருந்துவந்தது. அந்தப் பரம்பரையில் வந்தவர்களில் மாரிமுத்து மணியம் என்பவர் சுமார் நூற்றைம்பது வருடங்களுக்குமுன் இக்கோவிலைத் திருத்திக் கட்டினார். அதன் பின் திரு. மூத்ததம்பி மணியம் என்பவரும், அவருக்குப் பின் திரு. பெ. வ. செல்லையா மணியம் என்பவரும் கோவிலில் பல திருப்பணிகளைச் செய்து ஆலயத்தைச் சிறப்பாக நடத்தி வந்தார்கள். ஆலயப் பூசைகளை, அன்று தொடக்கம் திரு. ராமையர், திரு. நாகமணி ஐயர், சிவஸ்ரீ சரவணமுத்துக் குருக்கள், சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள், புலவர் வை. சோமாஸ்கந்தக் குருக்கள் என்ற பரம்பரையில் சந்ததி சந்ததியாகச் செய்து வருகின்றார்கள்.

கட்கம், கபாலம், டமருகம், பாசம் தாங்கிய சதுர்ப் புஜங்களோடு சுமார் பதின்மூன்றரைத் தேவாங்குல உயரமான மாரியம்மன் சிலாவிக்கிரகம் கற்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில் பன்னிரண்டு தேவாங்குல உயரமுடைய எழுந்தருளியம்பாளும், மாரியம்பாளுக்குரிய பரிவாரங்களாக காத்தவராயர், ஆரவல்லி, சூரவல்லி, தொட்டியச்சின்னான் என்பனவும், நாகதம்பிரான் பிள்ளையார் சிலாவிக்கிரகங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்தம்பமண்டபம், யாகசாலை, பாகசாலை, வசந்தமண்டபம். களஞ்சியம், வாகனசாலை என்பனவற்றையும், சுற்றுமதிலோடுகூடிய இரண்டு விதிகளையுமுடையது. இவ்வாலயம் உள்வீதியில் (தெற்கில்) வடக்கு நோக்கியதாக பேச்சியம்மன் ஆலயம் பரிவாரமூர்த்தமாக அமைந்திருந்தபோதிலும், இதற்குத் தனியாகச் சிறப்புப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. நோய்துன்பங்களை நீக்கும் தெய்வமாகக்கருதி மக்கள் இதனை பயபக்தியோடு வழிபட்டு வருகின்றார்கள். சாதி, சமய பேதமில்லாமல் சகலரும் பேய்ச்சியம்மனை வழிபடுவார்கள். முற்காலத்தில் பேய்ச்சியம்மனுக்குப் பலியிடும் வழக்கம் இருந்து வந்ததாம். அது இப்போது நடைபெறுவதில்லை. சுகப்பிரசவத்தை விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பேய்ச்சியம்மனுக்கு நேர்த்திவைத்து வழிபட்டுவரும் வழக்கம் இன்றும் இருந்துவருகின்றது.

சித்திராபூரணையில் தீர்த்தோற்சவம் நடைபெறக்கூடியதாக பத்து நாட்களுக்கு மகோற்சவம் நடைபெற்று வந்துள்ளது. பத்தாம் நாள் இரதோற்சவம் நடைபெற்றுவந்ததாம். திருக்கோணமலையில் இந்த ஆலயத்தில் மாத்திரந்தான் துலாக்காவடி நடை பெற்றுவந்தது. தேர்த்திருவிழாவன்று துலாக்காவடி நடைபெறும். முப்பதடி உயரத்தில் கட்டப்பட்ட துலாவில் காவடியெடுக்கும் பக்தர் செடில் பாய்ச்சப்பெற்று துலாவில் பக்தியோடு காவடியெடுப்பார். மெய்சிலுர்க்கத்தக்க நிலையில் துலாவில் தொங்கும் அடியாரைத் தெய்வமாக நினைத்து மக்கள் அம்பாளுக்கு வழிபாடு செலுத்துவார்கள். வடக்கு வீதியில் தேர் வந்துகொண்டிருக்கும்போது கோவில் வாசலில் துலாக்காவடி நிகழ்ச்சி நடைபெரும். துலாக்காவடி எடுக்கும் பக்தர் ஒரு கூடையில் வில்வம், புஸ்பம், எலுமிச்சம் பழம் என்பவைகளை வைத்துக்கொண்டு அவற்றை அம்பாளுக்கு அர்ப்பணம் செய்து அஞ்சலி செலுத்துவார். மக்கள் அவர் எறியும் மலர்களைத் திவ்வியப் பிரசாதமாகப் பெற்றுத் திருப்தியடைவார்கள். நவராத்திரி, கௌரிவிரதம், திருவெம்பாவை என்பன விசேட பூசைகளாக நடைபெற்று வந்தன.

பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோவிலுக்கும், சல்லியம்மன் கோவிலுக்கும் கும்பம், கரகம், காவடி, பாற்செம்பு எடுத்துச்செல்லும் அடியார்கள் இவ் வாலயத்திற்குவந்து வழிபட்டுச் செல்வார்கள்.

சிற்பசாஸ்திரமுறையாக அமைக்கப்பட்டு, சிறப்புவிழாக்கள் நடைபெற்றுவந்த இவ்வாலயம், இன்றுள்ள நிலை பரிதாபத்திற்குரியது.