நிறுவனம்:மொட்டை புளி வைரவர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொட்டை புளி வைரவர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் அலஸ்தோட்டம்
முகவரி மொட்டை புளி வைரவர் ஆலயம், அலஸ்தோட்டம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இந்த ஆலயமானது பல நூற்றாண்டு காலமாக நிலவி வந்த மரபு வழியே கிராமிய காவல் தெய்வமாக காணப்படுகின்றது. மொட்டை புளி வைரவர் ஆலயம் பல ஆண்டுகால வரலாற்றைக் கொண்டதும், ஆலயத்தின் அண்மையில் காணப்படும் முதியவர்களின் கருத்துப்படி தங்களுடைய தாத்தா, முப்பாட்டன் காலத்தில் இருந்து வைரவ சூலத்துடன் இந்த ஆலயம் காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் காணப்படும் புளியமரம் பல காலம் தொட்டு வளர்ச்சி அடையாமல் மொட்டையாக இருப்பதனால், மொட்டை புளி வைரவர் எனும் பெயர் வந்ததாக மரபு வழி கதைகள் கூறுகின்றது.அந்தக் காலத்தில் சல்லி, சாம்பல்தீவு, நிலாவெளி போன்ற பகுதிகளில் பெரும் காடுகள் காணப்பட்டதாகவும், அங்கு விறகு, தேன் எடுக்க செல்லும் வழிப்போக்கர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டு செல்வதை வழமையாகக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். இரவு வேலைகளில் செல்லும் மக்கள் வைரவர் நடமாடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். திருக்கோணமலையில் இருந்து நிலாவெளி செல்லும் வீதியில், அலஸ்தோட்டம் தாண்டும் பொழுது இந்த ஆலயம் காணப்படுகின்றது.

இந்த ஆலயம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கைவிடப்பட்டு காணப்பட்ட நிலையில், அந்த வீதியால் கூலித்தொழிலுக்கு சென்று வந்த திரு. தேசிங்கம் அமிர்தலிங்கம் என்பவர் தன்னை இவ்வாலயத்திலிருந்து சாம்பல்தீவு பாலம் வரை நாய் குரைத்துக் கொண்டு துரத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டு, அவரது வாழ்விலும் சிறு தடைகளும், கட்டுக்களும் நேர்ந்த வண்ணம் இருந்ததாக குறிப்பிடுகின்றார். இந்நிலையில் ஓர் முதியவர் அவரது கனவில் தோன்றி "ஏன் எனது வீட்டை யாரும் கவனிக்காமல் காடு சூழ விட்டு இருக்கின்றீர்கள்?" என கேட்டு மறைந்தார். இவ்வாறு இதுவரை காலமும் வழிபாடாமல் சென்று வந்தவர் மனதில் இந்த ஆலயம் புணரவைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதன் அடிப்படையில் 1992 ஆம் ஆண்டு இவ்வாலயத்தின் பத்தைகளை வெட்டி சுத்தம் செய்து, தனது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் இருபதாயிரம் ரூபாய் செலவழித்து தகரத்தினால் ஆன சிறு ஆலயத்தினை அமைத்து, உண்டியல் வைத்து வழிபட்டு வந்துள்ளார். மக்களின் ஒத்துழைப்பாலும், பாதசாரிகளின் நன்கொடைகளாலும் சிறுக சிறுக சேர்த்து இந்த ஆலயம் சிறு ஆலயமாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கான மின்சார இணைப்பினை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் அவர்கள் செய்து கொடுத்துள்ளார். பல பக்தர்கள் நேர்த்திக்கடன்களை வைத்து அந்த நேர்த்திக்கடன்கள் நிறைவேறியதனால் அவர்களின் நன்கொடைகளுடன் 2007 ஆம் ஆண்டு ஆலயம் பாரியளவில் கட்ட முற்பட்டபோது அந்த ஆலயத்தின் காணி சொந்தக்காரர்கள் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கும்படி, போலீசாரிடம் முறையிட்டனர். இந்நிலையில் ஆலயம் மக்களுக்காகவே கட்டப்பட்டது, எனவே உடைப்பதென்றால் நீங்களே உடையுங்கள் எனக்கோரி ஆலய திறப்பை காணிகாரர்களிடமும், போலீசரிடமும் ஒப்படைத்த பின்னர் இரண்டு, மூன்று நாட்களுக்கு பின் காணிச் சொந்தக்காரர் ஆலயத்தை அமைக்கும் படிக்கோரி போலீசாரின் முன்னிலையில் திறப்பை ஒப்படைத்துள்ளார். பின்னர் சிறுக சிறுக நிதி சேர்த்து பெரிதாக கட்டி கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி சிவாச்சாரியார் ஸ்ரீ இருபால குருக்கள் தலைமையில் 2016.04.01 வெள்ளிக்கிழமை தொடக்கம் எண்ணெய்க் காப்பு இடம் பெற்று, 2016 மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து தன்னால் ஆலயத்தை தொடர்ச்சியாக பராமரிக்க முடியாது எனக்கோரி ஆலய பரிபாலன சபை ஒன்றை நிறுவிய ஆலய பொறுப்புகளை 30.07.2017 அன்று ஒப்படைத்துவிட்டு அறங்காவல் பணிக்காக திரு. தேசிங்கம் அமிர்தலிங்கம் செயற்பட்டு வருகின்றார்.