நிறுவனம்:வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் வெருகல்
முகவரி வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம், மூதூர், திருக்கோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருகோணமலையின் தென் திசையில் வெருகல் கிராமத்தில் மகாவலி கங்கை ஓரத்தில் அமைந்துள்ள ஆலயமே வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் ஆகும். இது இலங்கையில் வாழ்ந்த ஆதி குடிகளால் வழிபாடு செய்யப்பட்டு வந்த ஒரு முருகன் ஆலயமாகும். இந்தப் பகுதியில் வெருகுச் செடிகள் அதிகளவில் காணப்பட்டதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் மூதூர் நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் எல்லையாக காணப்படுகின்றது. இதனை சின்னக்கதிர்காமம், வெள்ளை நாவற்பதி எனவும் அழைப்பர்.

நல்லைநாத செட்டியார் என்பவர் தனது தீர்க்க முடியாத தொழுநோயை தீர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து கதிர்காமத்தின் புகழறிந்து வரும் பொழுது வெருகல் ஊடாக சென்றதாகவும் 14 ஆம் நூற்றாண்டு கதைகள் கூறுகின்றன. அந்த சமயம் அங்கு தண்ணீர் அருந்திவிட்டு தங்கி இருந்தபோது ஆயுதபாணிகளான வேடர் கூட்டம் அவரை சூழ்ந்து போது, தான் கதிர்காமம் செல்வதை வேடுவ தலைவனுக்கு குறிப்பால் அறிவித்த போது தேன் கலந்த இறைச்சியை உணவாக கொடுத்து அவருக்கு ஆதரவளித்துச் சென்றனர். அந்த சமயம் முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி அவ்விடத்தில் தனக்கு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும், இருந்த போதும் அவரிடம் போதிய அளவு பணம் இல்லை என்று வருந்திய போது, அவ்விடத்திலிருந்து வடக்கே ஒன்பது மைலுக்கு அப்பால் உள்ள அரிப்பு எனுமிடத்தில் பூமியின் கீழே புதைந்துள்ள திரவிய கிடாரங்களில் ஒன்றை எடுத்து, பணியைச் செய்து முடிப்பாய் என முருகப்பெருமான் கூறியதாகவும், அன்றே அவரது தொழுநோயின் தீர்ந்ததென்றும் கூறப்படுகின்றது. "வெருகல் சித்திரவேலாயுதர் காதல்" என்ற நூலில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

வெருகல் கல்வெட்டு ஊடாக கயிலை வன்னியனார் காலத்தில் ஏற்பட்ட புனரமைப்புகள் அறிய கிடைக்கின்றது. 1985 காலப்பகுதியில் இப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக பூட்டியிருந்த இவ்வாலயம் 1991 ஆம் ஆண்டு ஈச்சிலம்பற்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு. எஸ். வீரசிங்கம் அவர்களின் தலைமையில் செயலவை கூடி கோயில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்திய, இலங்கை ராணுவத்தின் படை முகமாகவும் இந்த ஆலயம் இருந்து வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு ஆலய பரிபாலன சபையினரின் விடாமுயற்சியால் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் புனருத்தானம் மேற்கொள்ளப்பட்டு, 1999 ஆம் ஆண்டு ஆடி மாதம் 15 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மீண்டும் இப்போது ஏற்பட்ட வன்செயல் காரணமாக பரிபாலனம் 2008 ஏழாம் மாதம் ஒன்பதாம் திகதி சிறப்பான முறையில் மற்றும் ஒரு கும்பாபிஷேகத்தை நடத்தியது. தற்சமயம் ஆலயத்திற்கான ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றது. வெருகல் கல்வெட்டு சாசனம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் தொன்மையை கூறுவதாக அமைந்துள்ளது. "வெருகல் சித்திர வேலாயுதர் காதல்" எனும் நூல் தம்பலகாமத்தை சேர்ந்த திரு. ஐ. வீரக்கோன் என்பவரால் எழுதப்பட்டுள்ளதுடன், இந்நூல் கிபி 1600 காலப்பகுதியில் கொட்டியாரப்பற்று இருமரபுந்துய்ய இளஞ்சிங்கம் வன்னிமையின் தலைமையில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் ஆவணி உத்தரத்தில் கோயில் கொடியேறி தொடர்ந்து 18 நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. இந்த ஆலயத் திருவிழாவின் போது விசேடமாக கதிர்காம சுவாமி வீதியுலா, மலைக்கோயில் மாம்பழத் திருவிழா, சூகர வேட்டை, தூது பேசுதல், தீமிதிப்பு, தீர்த்தோற்சவம், திருஊஞ்சல், பூங்காவனம் என்பன விசேடமாக இடம்பெறுகின்றன. கதிர்காம சுவாமி உலா எனப்படும் 13 நாள் திருவிழா காலப்பகுதியில் முன்னர் ஆலயத்தில் இருந்து தென்மேற்கு திசையில் ஒரு மைல் தூரம் திக்கானை என்ற இடத்திற்கு குருக்கள், கோயில் பணியாளர்களும், யானைப்பாகனும் சென்று மடை வைத்து பூசை செய்யும் வழக்கம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு செட்டிவிழா என்பது பதினெட்டாம் நாள் திருவிழாவாக இடம் பெறுகின்றது. இது வேட்டை திருவிழா என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த ஆலயத்தின் நிர்வாகம் கங்காணம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இப்பதவிக்குரியவர்கள் சிந்து நாட்டு மக்களிடமிருந்தே தெரிவு செய்யப்படுவது வழமையாக உள்ளது. இதுபற்றி 1938 ஆம் ஆண்டு யாப்பில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.