ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தசுவாமி

From நூலகம்
Name கணபதிப்பிள்ளை
Pages கந்தசுவாமி
Birth 1903
Pages 1968
Place பருத்தித்துறை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, கந்தசுவாமி (1903 - 1968) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கந்தசுவாமி. இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணிப் பட்டத் தேர்விற்குத் தோற்றி முதற்பிரிவில் சித்தி பெற்ற இவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்ட போது கீழைத்தேயக் கல்விப் போதனாபீடத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இந்தோ ஆரிய மொழிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்தர், சோழவந்தான் கந்தசாமி ஆகியோரிடம் கற்று வித்துவான் பட்டமும் (1931 - 1932), இலண்டன் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய, ஆபிரிக்க ஆய்வுப் பணிகளுக்காக கலாநிதிப் பட்டமும் (1933 -1935) பெற்றார்.

கல்வெட்டியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுத் தமிழியலுக்கு வளம் சேர்ந்த இவர், கல்வெட்டியல் பயில்நெறியைப் பல்கலைக்கழகத்தில் மாணவருக்குச் சிறந்த முறையில் கற்பித்து வந்தார். மேலும் மங்கணாய், பாண்டுவஸ்நுவர தமிழ் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுப் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நாடகத்துறையிலும் நானாடகம், சங்கிலி, மாணிக்கமாலை ஆகிய நாடக நூல்ககளை எழுதியுள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றைத் தரும் நூலாக அவரது மாணவரில் ஒருவராகிய த. சண்முகசுந்தரம் எழுதிய 'கலையருவி கணபதிப்பிள்ளை' என்ற ஒரு சிறு நூல் 1974 இல் 68 பக்கங்களுடன் வெளிவந்தது. இவரது செய்யுள்நூலான 'காதலியாற்றுப்படை' யாழ்ப்பாணம் பற்றிய ஒரு விபரணச் சித்திரமாகும். இவர் பிரெஞ்சு நாவலைத் தழுவி வாழ்க்கையின் வினோதங்கள் (1954) நாவலையும் ஜேர்மன் நாவலைத் தழுவி பூஞ்சோலை (1953) நாவலையும் படைத்துள்ளார். பூஞ்சோலை நாவலில் வரும் இவரது கவிதைகள் நெஞ்சைத் தொடுவனவாகும்.

இவரது கல்விச் செயற்பாடுகளுக்கு முத்துக்குமாரசாமிக் குருக்கள் (ஈழத்தமிழறிஞர்), ஜி.பி.மலலசேகர, நம்புக்வெல்ல சித்தார்த்தா (பாளி சமஸ்கிருத அறிஞர்), சுவாமி விபுலானந்தர், சோழவந்தான் வி.கந்தசாமிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை (தமிழறிஞர்கள்), றால் ஃ ப்ரேணர், எல்.டி.பாணெற் (கீழைத்தேய ஆய்வியல் வல்லுனர்கள்) போன்ற பல கல்விமான்கள் பக்கபலமாக இருந்துள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 206-216
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 07-09
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 146-151
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 07-09
  • நூலக எண்: 955 பக்கங்கள் 18-29