ஆளுமை:கணபதிப்பிள்ளை, சி.

From நூலகம்
Name கணபதிப்பிள்ளை
Birth
Place புங்குடுதீவு
Category வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, சி. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவர் யாழ்ப்பாணத்தில் பிரபலமான பரம்பரைச் சித்தவைத்திய நிபுணர் கஸ்தூரியாரிடத்திலும், தூத்துக்குடி மரபுநிலை வைத்தியசிகாமணி சிகண்டியாரிடத்திலும் வைத்தியம் படித்தார். புங்குடுதீவில் அரசினர் மருத்துவமனை வருவதற்கு முன்னே இவர் மக்களின் நோய் தீர்த்த பெருமைக்குரியவர்.

மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருந்த காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த இவருடைய மைத்துனர் பசுபதியின் அழைப்பை ஏற்றுச் சிங்கப்பூரில் ஏழு ஆண்டுகள் சீனர், மலாயர், தமிழர் என்னும் அனைத்து இனத்தவர்களுக்கும் வைத்தியசேவை ஆற்றினார். அங்கு வாழ்ந்த பொழுது இவர், கை நாடி பிடித்து வருத்தத்தை அறிவதோடு ஒருவருடைய வாய் மணத்திலிருந்து நோயைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டிருந்தமையைப் பாராட்டிச் சீனமருத்துவ அமைப்பு ஒன்று இவருக்குப் பொற்பதக்கம் சூட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய சைவசித்தாந்தப் புலமைக்காகப் பல இந்திய ஆதீனங்களாலும், அறிஞர்களாலும் கௌரவிக்கப்பட்டார்.

இவர் இந்தியாவுக்கு யாத்திரை செய்ததோடு மலேசியா, சிங்கப்பூர் சைவசித்தாந்த அரங்குகளிலும் கருத்துரை வழங்கினார். அத்தோடு இந்தியாவிலுள்ள திருக்கோவிலூர் என்னும் இடத்தில் 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவாச்சாரியார்களுடைய அர்ச்சகர் மகாநாட்டில் பிரதிஷ்டா பூஷணம் ஐ.கைலாசநாதக்குருக்கள், பூரணானந்தக் குருக்கள் ஆகியோருடன் இலங்கை பிரதிநிதியாகக் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய சித்தாந்தப் புலமையையும், சிவபூசைக்கிரமங்களையும் பாராட்டிக் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன சந்நிதானம் சிவத்திரு ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் இவருக்கு நிர்வாணத் தீட்சையளித்து ஈசானசிவன் என்னும் தீட்சாநாமத்தைச் சூட்டினார். இவர் குறிகட்டுவான் பகுதியில் உயிர் பிரிந்த பின்பும் உடலோடு சமாதியாக வைக்கப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 223-224