ஆளுமை:கந்தசாமி, பரதன்

From நூலகம்
Name பரதன் கந்தசாமி
Pages கந்தப்பன் பரதன்
Pages பார்வதி அம்மா
Birth 1957.06.04
Place கல்முனை, அம்பாறை
Category எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பரதன் கந்தசாமி (பி.1957.06.04 ) அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளராவார். இவர் 1957ம் ஆண்டு தேத்தாத்தீவு எனும் ஊரில் கந்தப்பன் பரதன் மற்றும் பார்வதி அம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை தேத்தாத்தீவு மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை களுதாவளை மகா வித்தியாலயத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்றார்.

1978ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழத்தில் வெளிவாரியாக கலைப்பட்டதாரியாகவும் உள்வாரியாக வர்த்தகப் பட்டதாரியாகவும் பட்டங்கள் பெற்றார். அதன் பின் பேராதனை பல்கலைக்கழத்திற்கு அருகே உள்ள கேகாலை மாவட்டத்தில் ஶ்ரீ கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிற்ற, கன்னத்தொட்ட, மாவனெல்ல போன்ற பாடசாலைகளிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

1984ம் ஆண்டு கல்முனையில் அனந்தகெளரி என்பவரைத் திருமணம் முடித்து அங்கேயே தனது வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார். கேகாலை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு உதயபுரம் மகா வித்தியாலயத்திற்கு இடம் மாற்றம் பெற்றார். அதன் பின்னர் களுவாஞ்சிக்குடி விநாயகர் வித்தியாலயத்திலும் பின் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கலை பிரிவுக்கு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் அம்பாறை மாவட்ட பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள கலை கலாச்சார உத்தியோகத்தராக கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டார். இவர் அதிபர் சேவையில் சித்தி பெற்று மீண்டும் பாடசாலை சேவைக்குள் இணைந்தார். இவர் கல்வித்துறையில் எம்.ஏ, எம்.பில் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் இதழியல்துறையில் சித்தி பெற்று பொதுசன துறையில் தேர்ச்சி பெற்றார். இதனால் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

இறுதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளராக 8 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவ்வேளைகளிலே இலக்கிய துறை சார்ந்தவர்களுடன் பழக்கங்களையும் பெற்றார். இவர் பாடசாலை காலத்திலிருந்தே ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் மற்றும் கவிதை எழுதுதல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆரம்ப காலங்களில் வீரகேசரி, சிந்தாமணி, தினபதி போன்ற பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியுள்ளார்.

1973ம் ஆண்டு காலப்பகுதியில் இவரது முதலாவது கவிதையாகிய அலையும் மாந்தர் எனும் கவிதை சிந்தாமணி பத்திரிகையில் வெளியாகியது. 1998ம் ஆண்டு பீ.பீ.சி நடாத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் பங்குபற்றி முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டார். இவர் கல்முனை நால்வர் கோட்டம் எனும் இடத்தில் நால்வர் கோட்டம் மண்டபம் ஒன்றை உருவாக்கி நடாத்தி வருகின்றார். அண்மையில் லண்டன் வானொலி ஒன்றில் இவருடைய அக்கட்டுரை ஒலிபரப்பப்பட்டது. இவர் பல மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சைவசித்தாந்தம், வானியல், விளையாட்டு, இந்துசமயம், தமிழ் பண்டிகைகள், தமிழ் பாரம்பரியம் போன்ற ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் கீதங்கள், இலட்சனைகள், கொடி போன்றவற்றை உருவாக்கி வடிவமைத்து அதனை ஆவணப்படுத்தியுள்ளார்.

நிரந்தமானவன் என்ற ஆவண நூலை தொகுத்து கலாச்சார திணைக்களத்தில் ஆவணப்படுத்தி கொடுத்துள்ளார். அத்தோடு பல கூத்துப் பட்டறைகள் மற்றும் நாடகப் பட்டறைகளை நடாத்தியுள்ளார். இனியம் எனும் வாத்திய கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் தாரை, தப்பட்டை, உடுக்கு, நாகசின்னம், கபில் போன்ற திருக்கைலாய வாத்தியங்கள் அடங்கும்.

இலங்கையின் கணனித்துறையில் முத்திரை பதித்த ஈழத்துப் பூராடனார் செல்வராசகோபால் அவரது 100 ற்கு மேற்பட்ட நூல்களுக்கு பதிப்பாசிரியாக பணியாற்றியுள்ளார். இவர் பல இலக்கியவாதிகளின் கலைப்படைப்புகளுக்கு அணிந்துரை மற்றும் விமர்சனங்களை வழங்கியுள்ளார். இவருக்கு தேசகீர்த்தி, தமிழ்த்தென்றல், வித்தியாஜோதி, கலைஇளவல், சிவநெறிசெம்மல் பொன்ற பட்டங்களும் பிரதேச ரீதியான கெளரவிப்புகளையும் பெற்றுள்ளார். கலை கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் இவருக்கு வித்தகர் விருதும் வழங்கப்பட்டது.