ஆளுமை:கனகசபை, எஸ். ஆர்.

From நூலகம்
Name கனகசபை
Birth 1901.07.10
Pages 1964
Place இருபாலை
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபை, எஸ் (1901.07.10 - 1964) யாழ்ப்பாணம், இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவர் ஆரம்பத்தில் சாவகச்சேரி சின்னையா ஆசிரியரிடமும் பின்னர் சென்னைக் கலைக்கல்லூரியில் பயின்று 1917- 1919 இல் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஓவிய ஆசிரியரானார். பின்னர் 1921 இல் இராமநாதனால் பரமேஸ்வராக் கல்லூரிக்கு சித்திர ஆசிரியராகப் பணிக்கப்பட்டார். 1927 இல் வடக்கு - கிழக்கு மாகாண ஓவியக் கல்விப் பரிசோதகராகப் பதவியேற்று 1957 இல் ஓய்வு பெற்றார். வின்ஸரின் தூண்டுதலால் ஓவியத்தைச் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டு 1938 இல் வின்ஸர் சித்திரக்கழகம் என்ற ஓவியப் பயிற்சிக் கழகத்தை ஸ்தாபித்து 1955 ஆம் ஆண்டு வரை இயங்கினார்.

இவரின் முயற்சியால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பொன் விழாக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக வின்ஸர் ஆட் கிளப்பின் சித்திரக் கண்காட்சி இடம்பெற்றது. இதில் பல ஓவியர்களது பிரதிமைகள், இயற்கைக்காட்சிகள், வர்ணவேலைகள், பென்சில்வேலைகள் என பலவகைப்பட்ட சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு, இவருடைய நயினாதீவு சாமியார், சோமசுந்தரப் புலவர் போன்ற இரு ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது. சோமசுந்தரப் புலவரின் ஓவியம் 1940 இல் வரையப்பட்டதாக அறியமுடிகின்றது. இவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சித்திர நுண்கலைக் கூடங்களை அமைத்தார். இதன்பின் யாழ்ப்பாணத்துச் சித்திரக்காரரின் தலைமைஸ்தானம் எஸ்.ஆர்.கனகசபைக்கே இருந்தது என்பதை ஈழகேசரியில் வெளிவந்த விமர்சனமொன்றிலிருந்து அறியமுடிகின்றது.

இவரது நிகழ்ச்சிச் சித்தரிப்பு ஓவியத்திற்கு 'இருட்டிப்பு' ஓவியம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவரது பிரதிமை ஓவியங்களில் நாவலர் ஓவியம் முக்கியமானது. இது இன்று நீராவியடிப் பிள்ளையார் கோயிலுக்கு மேற்காக உள்ள நாவலர் மண்டபத்தில் காணப்படுகிறது. மேலும் இவர் அருட் தந்தை லோங் அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோரின் பிரதிமை ஓவியங்களையும் வரைந்துள்ளார். இவர் 1945 இல் ஈழகேசரிப் பத்திரிகைக்கு ஓவியம் என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 08-11


வெளி இணைப்புக்கள்