ஆளுமை:காளியப்பு, விஜயசிங்கம்

From நூலகம்
Name விஜயசிங்கம் காளியப்பு
Pages விஜயசிங்கம்
Pages -
Birth -
Pages -
Place சேனையூர், மூதூர்
Category பல்துறை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சேனையூர் பெற்ற முதுசங்களில் ஒன்றாய், ஊருக்கு பெருமை சேர்த்த புலவர் பாரம்பரியத்தின் வாரிசாய் வழி வழியாய் வந்த மரபின் தொடர்ச்சியாய் பன்மைத்துவ வித்தக திறள் கொண்ட ஆளுமையாய் நம் பண்பாட்டின் வழி அறிவொளி பரப்பிய ஆற்றலாளன் இவர்.

இவர் கொட்டியாரத்தில் கூனித்திவு முதல் வெருகல் வரையிலும், தம்பலகாமம், தென்னமரவாடி, திருகோணமலை நகரம் என பிரபலம் பெற்ற வைத்தியர். பல ஊர்களிலிருந்தும் வண்டில் கட்டி வந்து தங்கியிருந்து வைத்தியம் பார்த்துச் செல்லும் தன் திறனால் முத்திரை பதித்தவர். பொதுவாக எல்லா நோய்களுக்கும் வைத்தியம் பார்த்தாலும், காளியப்பு அவர்களின் கண் வைத்தியம் பிரசித்தமானது. இன்று சத்திர சிகிச்சை மூலம் சுகப்படுகின்ற கண் பூ போன்ற கண் நோய்களுக்கு தன் மருந்தினால் இலகுவில் சுகமாக்கும் திறன் படைத்தவர். கண் தொடர்பான எல்லா நோய்களுக்கும் அவரிடம் மருந்து இருந்தது. காயப்பட்ட கண்களைக் கூட தன் வைத்தியத்தால் சுகமாக்கும் திறன் கொண்டவர். பாரம்பரியமான ஆயுள்வேத வைத்தியத்தின் எல்லா முறைகளையும் அறிந்தவர். வாகட வைத்திய முறைகளில் நிகரில்லா திறன் படைத்தவர்

இவர் புலவராகவும் அறியப்பட்டவர். ஆசுகவி எனப் புகழப்பட்ட ஒரு புலவர் பாரம்பரியத்தின் வாரிசு அறம்பாடும் ஆற்றல் வாய்த்தவர். வாது கவி பாடுவதிலும் வல்லவராய் இருந்திருக்கிறார். தொல்காப்பியம், நிகண்டு என்பனவற்றின் வழி தமிழ் இலக்கணத்தை அறிந்த அறிவாற்றல் நிறைந்தவர். ஏட்டில் விரைவாக எழுதும் ஆற்றல் மிக்கவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இயற்றிய ஏடுகள் கட்டுக் கட்டாய் இருந்தமையும், பின்னர் அவை காலத்தால் அழிந்து போனமையும் நம் துரதிஸ்ரமே. எடுத்தவுடன் செய்யுள் பாடுவதில் கெட்டிக்காரர்.

சேனையூர் சார்ந்த கும்ப முறைகளில் தேர்ச்சி பெற்ற பூசகராக விளங்கினார். மந்திரங்கள் அறிந்த மாய வித்தைக்காரன். மந்திரத்தால் மாங்காய் பறிக்கலாமா என்றொரு தொடர் வழக்கில் உள்ளது. மாங்காய் அல்ல, கமுகு வடலியே தலை முறிந்து விழும் மந்திரம் செய்பவர் இவர். சேனையூர் கும்பத்து மாலின் பிதாமகர் நம் பண்பாட்டு படையலாய் இன்றுவரை தொடரும் கும்ப சடங்கின் எல்லா நுணுக்கங்களும் அறிந்தவர். எதிர் மந்திரக்காரர்களை எளிதில் தோற்கடித்து வரலாறு படைத்தவர். சம்புக்களி பத்தினி அம்மன் கோயில், சேனையூர் வீரபத்திரன் கோயில் ஆகியவற்றின் வேள்விச் சடங்குகளை பத்ததி முறையில் பரிகல வேள்விகளின் நேர நியமம் குறித்து செய்யும் திறன் மிக்கவர்.

சன்னாசி முறை எனும் அபூர்வ மந்திர வகை அறிந்தவர். மலையாள மந்திரம், சிங்கள மந்திரம் என பல்வகை மந்திர உச்சாடனங்களின் வழி பயணிப்பவர். வீடு தோறும் நடக்கும் மடைகள், கரையல், வேள்வி என எல்லாவற்றிலும் வாழும் வரை தலைமைப் பூசகராய் தொழிற்பட்டவர்.

கும்பம் என்றால் பூசாரியார் காளியப்பு அவர்களே அடையாளமாக கணிக்கப்பட்டவர். அவர் மத்திரத்துக்கு நிகர் அவரே. அவரிடமே அவர் பின் பலர் மந்திரம் பயின்றதாக பல கதைகள் உண்டு. கும்ப விழாவில் முக்கியமான விடயங்கள் ஒன்பது நாள் பூசையும், ஆயுத பூசையும், கன்னி வாழை வெட்டும் கும்ப ஊர்வலமும் ஆகும். அந்த நாளில் மட்டக்களப்பிலிருந்து கொண்டு வரப்பட்ட மந்திரவாதிகளைக் கொண்டு கும்பத்து மாலில் சாமி ஆடப் பண்ணாமல் செய்யும் முயற்சிகள் நடைபெற்ற போதெல்லாம் தன் மந்திர வலிமையால் முறியடித்து வெற்றி கொண்டவர் திருமிகு காளியப்பு அவர்கள். அவர் அந்த நாளில் மேற்கொண்ட சன்னாசி முறை மந்திரம் பல ஊர் காரர்களாலும் அதிசயமாக பேசப் பட்ட ஒரு முறை.

கும்ப ஊர்வலத்தில் கும்பம் எடுப்பவர்கள் இடுப்பில் காய் கட்டி கொண்டு போகும் முறையும், மந்திரமும் அவரிடமே இருந்தது. அவருக்குப் பின் அவர் பரம்பரையினரில் வழி வழியாக தொடர்கிறது. அந்த முறையை வெட்டக் கூடிய மந்திர முறை இது வரை எவரிடமும் இல்லை என்றே சொல்லலாம்.

சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் ஆலயத்தின் பரம்பரை வழி மணியகாரர். திருமிகு காளியப்பு பற்றி பேசும் போது அவர் மனைவி தங்கமுத்து பற்றி குறிப்பிடுவது முக்கியமாகிறது. தங்கமுத்து பெரியவரின் நிழலாய் இருந்து பணியாற்றியவர். சேனையூரின் வரலாற்றில் நினைக்கப் படவேண்டியவர்களில் அவரும் ஒருவர். சுவையாக சமைப்பதில் அவருக்கு நிகர் அவரே. கலியாண வீடு மற்றும் கொண்டாட்டங்களில் சமையலில் மேற்பார்வைக்கு திருமதி. தங்கமுத்துவையே அழைப்பார்கள்.

சேனையூர் கும்பத்து மாலின் ஸ்தாபகரும் நீண்ட காலம் பூசாரியாக இருந்தவருமான விஜயசிங்கம் காளியப்பு அவர்கள். கும்பத்துமாலுக்கு உரிய நெறிமுறைகளையும், பூசை ஒழுங்குகளையும் உருவாக்கியவர். இவரது மூதாதயர் தம்பலகாமத்தை பூர்விகமாக கொண்டவர்கள். தம்பலகாமத்துக்கும், சேனையூருக்குமான தொடர்பு பூர்விகமானது. அது ஒரு குல மரபின் தொடர்ச்சி கும்பத்து மாலின் பூசாரியாக மாத்திரம் இல்லாமல் வீரபத்திரன் கோயில் வேள்வி, பத்தினியம்மன் வேள்வி, அம்மச்சியம்மன் வேள்வி ஆகியவற்றினை நடத்துபவராகவும் திருமிகு விஜயசிங்கம் காளியப்பு அவர்கள் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. வீடுகள் தோறும் மடைகள், வேள்விகள், கரையல் என சேனையூருக்கு தனித்துவம் தந்த சடங்குகளின் பூசாரியாகவும் விளங்கினார்.

சம்பூர் பத்திரகாளி முன்னய காலங்களில் வருசம் தோறும் பெரும் வேள்வி நடைபெறும் இடமாகவும், கொட்டியாரத்து மக்கள் பெருமளவில் கூடும் இடமாகவும் இருந்தது. பயமும் பக்தியும் கலந்த நிகழ்வு அது அந்த வேள்வியில் ஒரு மடை திரு காளியப்புவின் பொறுப்பாக இருந்தது.

சேனையூரில் கும்ப விழா தொடங்கிய காலங்களில் ஊரவர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து ஒற்றுமையுடன் செயல்பட்டனர். பக்கத்து ஊர்களும் கும்ப விழாவில் ஈர்ப்புக் கொண்டன. காளியப்பு அவர்களின் மந்திர உச்சாடனத்தையும், பூசை முறைகளில் அவர் காட்டும் திறன் மிகு செயல்பாடுகளை காண்பதற்கும் மக்கள் கூடுவர். காளியப்பு அவர்களுடன் அவரது மகன்கள் விஜயசிங்கம், பாலசிங்கம், வீரசிங்கம் என மூவரும் இணைந்து செயல்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வால், புவன், திரிபுர என்ற மூன்று சக்திகள் மும் மூன்று சக்திகளாகி ஒன்பது சக்திகள் உருப்பெற்று, இறுதியில் மகா சக்தியாய் வடிவம் கொள்வதை தன் மந்திரங்களால் சேனையூர் கும்பத்து மாலில் நிலை நிறுத்தியவர் காளியப்பு அவர்கள் எட்டுக் காளியில் நம்பிக்கை கொண்டு காளியின் வாலாயம் பெற்றவர். காளியப்பு பூசாரியாரின் வீடு முன்னாள் கிராமசபைத் தலைவர் அவர்களது வீட்டுக்கு பக்கத்தில் இருந்தது. கும்ப ஊர்வலம் நடைபெறுகிற போது பூசாரியாரின் வீடு விழாக் கோலம் பூண்டிருக்கும். அம்மனுக்கு அலங்காரம் செய்து பெரும் படையலாய் எல்லோரும் உருக் கொண்டு ஆடும் காட்சி அற்புதமாய் பலரும் காத்திருந்து காணும் காட்சியாய் சந்தோசத்துக்கும் குறைவில்லாத இனிய நேரமாய் நீளும்.


சேனையூர் கும்பத்து மாலில் கிட்டத்தட்ட ஐம்பது ஆன்டுகள் பூசாரியாய் வழி நடத்தியவர்.