ஆளுமை:சுந்தரலிங்கம், சங்கரப்பிள்ளை

From நூலகம்
Name சங்கரப்பிள்ளை சுந்தரலிங்கம்
Pages சங்கரப்பிள்ளை
Pages சந்தனப்பிள்ளை
Birth 1943.02.27
Pages 1977.09.01
Place திருக்கோணமலை
Category சமூக செயற்பாட்டாளர், சைவ சமய பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அன்பே சிவமாய் அமர்ந்த பெருமானை ஏத்தி ஏத்தித் தொழுது வாழ்ந்தவர்களுள் இறைபணிச் செம்மல் சுந்தரலிங்கம் ஐயாவும் ஒருவர். இவர் கட்டைபறிச்சான் கிராமத்தில் சங்கரப்பிள்ளை, சந்தனப்பிள்ளை தம்பதியினருக்கு புதல்வராக 1943.02.27 அன்று பிறந்தார். தனது கல்வியை மெதடிஸ்த மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் (தற்போதய விபுலானந்த கல்லூரி) பெற்றுக் கொண்டார். குடும்ப வறுமையின் காரணமாக கல்வியை இடைவிட்டு கூலிவேலைக்குச் சென்ற போதிலும், கல்வியின் மீதான ஆர்வம் காரணமாக மீண்டும் கல்வி கற்று தனது 21 ஆவது வயதில் எட்டாம் வகுப்பு பரீட்சையில் சித்தி பெற்று கிராம விதானையராகக் கடமையாற்றினார்.

1965 இல் சம்பூரில் தொடங்கிய இவரது அரசபணி தம்பலகாமம், திரியாய், நிலாவெளி, கும்புறுபிட்டி, கோபாலபுரம் என 1993 வரை தொடர்ந்தது. இக்காலத்தில் பல இடங்களில் அரச பணிக்கு மேலதிகமாக சமயப்பணி, சமூகப்பணி என ஏராளமான சேவைகளைச் செய்துள்ளார். விசக்கடி, மந்திரம், மூலிகை வைத்தியம் போன்றவையும் இவற்றுள் அடக்கம். தமிழர்களின் பாரம்பரிய வழிபாடான மகுடாகம முறை வழிபாடுகளை செய்வதில் கைதேர்ந்தவராகக் காணப்பட்டார். நவராத்திரி சடங்குகள், அம்மச்சியம்மன் பரிகல வேள்விச்சடங்கு, எல்லைக்காளியம்மன் வேள்விச்சடங்கு போன்றவற்றில் பிரதான பூசகராகவும் செயற்பட்டார். கும்புறுபிட்டியில் சைவ மக்கள் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு உட்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அங்கு வராகியம்மன் கோயிலைப் புனரமைத்தும் வழிபாடுகளை ஏற்படுத்தியும் மதமாற்றத்தைத் தடுப்பதில் பெரும்பங்கு வகித்தார். தம்பலகாமத்தில் சைவ நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடாத்தினார். நாடோடிகளாகத் திரிந்த மக்கள் சிலரை தம்பலகாமம் தெலுங்குநகரில் குடியேற்றி அவர்களின் நிலையான வாழ்வுக்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

கட்டைபறிச்சான் இந்து இளைஞர் மன்றத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் தலைவராக 1968 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து, பொதுச் செயலாளராகவிருந்த திரு. செ. சிவபாதசுந்தரம் ஐயாவுடன் இணைந்து கிராமங்கள் தோறும் இந்து இளைஞர் மன்றங்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். தமிழ் பிரதேசங்களில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகளை தடுக்கும் நோக்கில் கடவானை, கல்லம்பற்றை போன்ற இடங்களில் தமிழ் மக்களை குடியேற்றுவதில் முன்னின்று செயற்பட்டார். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் திரியாயில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல், வீடழிப்பு காரணமாக காணியை விட்டு வெளியேறி, நிலாவெளி கிராம விதானையராக மாற்றலாகிச் சென்றார். 1984-87 காலப்பகுதியில் அங்கிருந்த அகதிமுகாமிற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றினார்.

இந்த அகதி முகாமினுள் அடைக்கலம் புகுந்திருந்த 54 தமிழ் பிள்ளைகளை அவரது அலுவலகம் அமைந்திருந்த வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். சிறிது காலத்தின் பின்னர் அகதிமுகாம் மூடப்படவேண்டி ஏற்பட்டது. இவ்வேளையில் அரச அதிகாரிகள் வந்து இப் பிள்ளைகளை நுவரெலியாவில் அமைந்திருந்த சிறுவர் இல்லத்துக்கு (குழந்தைகள் பண்ணை) அனுப்ப ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அப்போது பிள்ளைகள் இவரைப் பிரிய மனமில்லாது அழுதனர். சுந்தரலிங்கம் ஐயாவும் நெகிழ்ச்சியடைந்து அந்த 54 பேரையும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உதவியாக வைத்தியர் ஞானி, திருவாளர் சண்முகராஜா ஆசிரியர், திரு. தட்சணாமூர்த்தி அதிபர் ஆகியோரும் உதவியாக இருந்தனர். அதைத் தொடர்ந்து "அன்பு இல்லம்" உருவாகியது.

"இறந்தவரது குழந்தைகளை இருப்பவர்கள் காப்போம்" என்ற கொள்கையின் அடிப்படையில் திரியாய், தம்பலகாமம், குச்சவெளி, நொச்சிக்குளம், மூதூர், வெருகல் எனப் பல பிரதேசங்களில் இருந்தும் பெற்றோரை இழந்த குழந்தைகள் அன்பு இல்லத்தைத் தேடி வந்தனர். வந்தவர்கள் அனைவருக்கும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆதரிக்கப்பட்டனர். அதிகரித்த யுத்த சூழ்நிலைகளில் பாதுகாப்பின்மை காரணமாக நிலாவெளி, கட்டைபறிச்சான், திருகோணமலை நகரம் போன்ற இடங்களில் காலத்திற்கேற்றாற் போல அன்பு இல்லப் பிள்ளைகள் பராமரிக்கப்பட்டனர். 1990 காலத்தில் ஏற்ப்பட்ட யுத்த நெருக்கடிகள் காரணமாக ஐயா இப்பிள்ளைகளுடன் தானும் மக்களோடு மக்களாக மூதூர் கிழக்கிலுள்ள காடுகளில் தஞ்சமடைந்து அவர்களை பாதுகாத்துப் பராமரித்ததை இன்று நினைத்தாலும் அவர் போல் ஒருவர் இனி இச்சேவை செய்யப்போவது சாத்தியமில்லை என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.

திருகோணமலையில் அன்பு இல்லமானது சாது அப்பாத்துரை செட்டியார் அவர்கள் வாழ்ந்த காணியில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தது. இப்பிள்ளைகளின் நாளாந்த வாழ்க்கையானது கெங்காலிங்கம் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் ஐயாவின் வழிகாட்டலில் இறை சிந்தனையுடனும் சைவத்தமிழ்ப் பண்பாட்டுடனுமே தொடர்ந்தது. கோயில்களில் சரியைத் தொண்டு, கூட்டுப்பிரார்த்தனை, அமைதிப் பிரார்த்தனை செய்தல், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் திருக்கோணேஸ்வரத்துக்குச் சென்று எம் பெருமானை வழிபடுதல், சைவப் பிரசங்கங்கள் செய்தல், வில்வ மரக்கன்றுகளை நடுதல் குருபூசை வழிபாடுகளை மேற்கொள்ளல், திருவாசக முற்றோதுதல் போன்ற ஆத்மீகப் பணிகளை பிள்ளைகளுடன் சேர்ந்து செய்து வந்தார்.

இவற்றுள் மூடப்பட்டிருந்த திருக்கோணேஸ்வரத்தை 1991.01.01 திருவாதிரை நாளன்று கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கோட்டை இராணுவ அதிகாரிகளுடன் முரண்பட்டு வழிபாட்டுக்காக திறந்தமை ஐயாவின் ஆத்மீகப்பணியின் உச்சம் எனலாம். "அன்பு இல்லத் தந்தை" என அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம் ஐயாவின் (1987-2004) காலத்தில் 687 பிள்ளைகள் அன்பு இல்லத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வெளியேறியுள்ளனர். இவர்களுள் இராசயன பொறியியல் பேராசிரியர், 29க்கு மேற்பட்ட பல்கலைக்கழக பட்டதாரிகள், சுமார் 50 க்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களும் அடங்குவர். இவ்வாறான சமய சமூகப் பணிகளை ஆற்றிய சுந்தரலிங்கம் ஐயா அவர்களுக்கு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் (1991-92) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் "இறைபணிச் செம்மல்" என்ற விருதும், இலண்டன் கனகதுர்க்கையம்மன் அறக்கட்டளையினரால் இலண்டனில் வைத்து "ஆசிய ஜோதி" விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2005.08.11 அன்று இறைபணிச் செம்மல் சுந்தரலிங்கம் ஐயா அவர்கள் இவ்வுலகில் இருந்து மறைந்தாலும் அவர் ஆற்றிய தொண்டுகள் இன்னமும் மக்கள் மனங்களில் இருந்து நீங்காமலேயே உள்ளது.