ஆளுமை:பெரோஸா, ஹுசைன்

From நூலகம்
Name பெரோஸா
Birth
Place கல்முனை
Category எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெரோஸா, ஹுசைன் அம்பாறை கல்முனையில் பிறந்த எழுத்தாளர். முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் உடன் பிறந்த சகோதரியாவார். இவரின் கணவர் அப்துல் ஸலாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். மூன்று பிள்ளைகளின் தாயான இவர் எதிர்பாராத விதத்தில் இவரின் இரண்டாவது மகன் அகால மரணமடைந்துள்ளார். கல்முனை ஸாஹிரா கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றார்.

களனி பல்கலைக்கழகத்தின் எல்.எல்.பீ.சட்டத்துறை பட்டதாரியுமாவார். தொடர்ந்து இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்துறை கல்வியைத் தொடர்ந்து சட்டத்தரணியானார். கல்வி கற்கும் காலத்திலேயே சட்டக்கல்லூரியின் நீதி முரசு சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதியுள்ளார்.

1977ஆம் ஆண்டு உயர்தரம் படிக்கும் போதே எழுத்துத்துறையில் பிரவேசித்தார். இவரின் ஆக்கங்கள் தினகரன், வார மஞ்சரியில் தொடர் நாவல்களாக வெளிவந்துள்ளன. இரண்டு மனம் வேண்டும். தீ, ஒரு தாயின் போராட்டங்கள் என்பன இவர் எழுதிய நாவல்களின் சிலவாகும். சிந்தாமணி, வீரகேசரி, நவமணி, அல்ஹிக்மா போன்ற நாளிதழ்களிலும் சிறுகதைகளை எழுதியுள்ளார். கலைசுடர், தமிழ் ஒளி போன்ற மாதாந்த சஞ்சிகைகளிலும் சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன.

இலங்கை வானொலியில் வாலிபவட்டம், இளைஞர்வட்டம், சங்கநாதம், இசையும்கதையும் முஸ்லிம் நிகழ்ச்சியின் செவ்வாய்மலர், மருதமலர், சிறுகதை, கவியரங்கு போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபற்றியுள்ளார். இந்தியாவில் தமிழருவி வானொலியிலும் இவரின் கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. முஸ்லீம் பெண்கள் மாநாட்டில் உலக நாகரிகத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு என்ற ஆய்வுக்கட்டுரை முதலாமிடத்தை பெற்றது.