ஆளுமை:ஆதம்பாவா, உதுமாலெவ்வை

From நூலகம்
Name ஆதம்பாவா
Pages உதுமாலெவ்வை
Pages சல்ஹா உம்மா
Birth 1939.06.15
Place அம்பாறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆதம்பாவா, உதுமாலெவ்வை (1939.06.15 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை உதுமாலெவ்வை; தாய் சல்ஹா உம்மா. சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

பயிற்றப்பட்ட முதலாந்தர ஆசிரியரான இவர் 38 வருடகாலமாக தமிழ்மொழி ஆசானாகப் பணி புரிந்துவிட்டு தற்போது ஓய்வுபெற்றுள்ளார். அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரிவில் பிரதம முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியுள்ளார்.

இவர் ஜென்னதுல் நயிமாவின் அன்புக் கணவராவார், முஹம்மது நயிம், முஹம்மது அளபீம், முஹம்மது அஸாம் ஆகிய புதல்வர்களும், ரயிஸாஹஸ்மத், சியானா சிறின், சில்மியத்துல் சிறீன் ஆகிய மகள்களும் உள்ளனர்.

இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் களம் கொடுத்ததும் ‘மணிக்குரலே'. 1961ம் ஆண்டு ‘மலையருவி’ எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும், 48 உருவகக் கதைகளையும், 55 கவிதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரின் படைப்புகள் மணிக்குரல், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன், மாலைமதி, ஸாஹிரா போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. ஆதம்பாவா ஒரு சிறந்த எழுத்தாளர், முஸ்லிம்களின் சமூகப்பிரச்சினைகளை இனங்கண்டு படைப்பிலக்கியம் மூலம் சமூக எழுச்சியைக் காண முயற்சித்தவர்.

யூ. எல். ஆதம்பாவா “நாங்கள் மனித இனம்” என்ற உருவகக் கதைத்தொகுதி (1991), “காணிக்கை” சிறுகதைத்தொகுதி (1997), “பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம்” இரங்கல் கவிதைத் தொகுதி (2003), “சாணையோடு வந்தது” (2007), “குருதி தோய்ந்த காலம் (2011), “கிராமத்து மண் வாசம்” (2018) போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் தமிழ்மொழி ஆசானாக இவர் பணிபுரிந்த காலத்தில் சுமார் 10 ஆண்டுகள் ஸாஹிரா பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து தமிழ்மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் நிறையவே பணியாற்றியுள்ளார்.

படைப்பிலக்கியத்துறையில் இவரால் ஆற்றப்பட்ட மேலான சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் 1999இல் இலங்கை அரசினால் 'கலாபூஷணம்’ விருதும், 2005 இல் வடக்கு கிழக்கு மாகாணசபை ஆளுநர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் தென்கிழக்கு ஆய்வு மையம், சாய்ந்தமருது ஐக்கிய நண்பர்கள் நலன்புரி ஒன்றியம் போன்ற அமைப்புகள் இவரைப் பாராட்டி கெளரவித்துள்ளன.



வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 50-53