ஆளுமை:ஆனந்தர், சபாபதி

From நூலகம்
Name ஆனந்தர்
Pages சபாபதி
Pages பொன்னம்மா
Birth 1910.10.06
Pages 1996.12.16
Place யாழ்ப்பாணம் இணுவில்
Category கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பண்டிதர் ஆனந்தர், சபாபதி (1910.10.06) யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தை சபாபதி. தாய் பொன்னம்மா. தந்தையாரிடம் அரிச்சுவடியையும் அருகில் இருந்த பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வியின் பொருட்டு யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்தார். வாகன வசதி இல்லாததால் யாழ் இந்துக் கல்லூரிக்கு நடந்து சென்றே கல்வி கற்றார். தொடர்ந்து தனது ஆங்கிலக் கல்வியை கேம்பிறிச் சீனியர் வகுப்பு வரை கற்று 1930ஆம் ஆண்டு சித்தியெய்தினார். 1932.03.14ஆம் திகதி அன்று இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார். கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை முடித்தார். மீண்டும் இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராய் சேர்ந்து குறுகிய காலம் கடமை ஆற்றினார். 1934.10.31அன்று சைவ வித்தியாவிருத்திச்சங்க முகாமையில் இயங்கிய அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயத்திலும் திருநெல்வேலி செங்குந்த துவிபாஷா பாடசாலையிலும் ஆசிரியப் பணியாற்றினார்.

யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கம் நடத்திய பால பண்டித, பண்டித பரீட்சைகளில் சித்தியடைந்து 1941ஆம் ஆண்டில் தமிழ்ப் பண்டிதரானார். சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கி புலமைப் பரிசிலையும் பெற்று அப் பல்கலைக்கழகத்தில் 1943-1944 தமிழ்மொழி பற்றிய ஆய்வினைச் செய்து B.O.L பட்டம் பெற்றார். இணுவிலைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய புலமைப்பரிசிலைப் பெற்ற முதல் பட்டதாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழைத்தேச மொழியில் கலைமாணிப் பட்டம் பெற்றதால் தமிழ், ஆங்கிலக் கல்வி அறிவுடன் வடமொழி அறிவும் பெற்றுக்கொண்டார். புலமைப் பரிசில் கல்வியை முடித்து நாடு திரும்பிய ஆனந்தர் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். தமிழ், சமயம், புவியியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை கற்பித்து நற்பெயர் பெற்றதனால் கல்வித் திணைக்களம் அவருக்கு விசேட பதவி அளித்து 01.11.1948ஆம் ஆண்டு முதல் சம்பள உயர்வு வழங்கியது. இலக்கிய விழாக்கள், சமய விழாக்கள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகமேடைகள் என பல நிகழ்ச்சிகளில் ஆனந்தர் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளார்.

சிறு வாக்கியங்களை மெதுவாக தொடுத்து கட்டுரை எழுதுவதிலும் இரட்டுற மொழிந்து உரையாற்றுவதிலும் ஆனந்தர் மிகவும் வல்லவர். இவரின் திறமையை இலங்கை வானொலி பயன்படுத்தியது.

ஆனந்தரின் சேவை வெளிமாவட்டத்துக்கும் தேவைப்பட்டதால் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் அதிபராக நியமனம் பெற்றார். 1950ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழக B.A பட்டமும் பெற்றார். தொடர்ந்து புசல்லாவை சரஸ்வதி வித்தியாலயத்திலும், நயினாதீவு மகாவித்தியாலயத்திலும் அதிபராக இருந்து ஓய்வுபெற்றார்.

Resources

  • நூலக எண்: 4108 பக்கங்கள் 15-20
  • நூலக எண்: 14655 பக்கங்கள் 3-6


வெளி இணைப்புக்கள்

  • [://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-b-aபண்டிதர் ஆனந்தர், சபாபதி ourjaffna.com இணையத்தில்]