ஆளுமை:சஞ்சிகா, எஸ். கே.

From நூலகம்
Name லதா
Pages கந்தையா
Pages நாகம்மா
Birth 1979.04.24
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லதா, கந்தையா (1979.04.24) யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். தன்னை கிளிநொச்சியை சேர்ந்தவர் என்று பதிவிடுவதையே விரும்புகிறார். லதா கந்தையா என்ற இயற்பெயரை கொண்டிருந்தாலும் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா, தாரணி, துர்க்கா ஆகிய புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகிறார். பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் மூன்று பிள்ளைகளுக்கு தாயுமாவார். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது இரண்டரை வயது மகனை இழந்துள்ளார். இவரது தந்தை கந்தையா; தாய் நாகம்மா. சிறுவயதிலேயே தாய் தந்தையரை 1986ஆம் ஆண்டு வன்முறையில் இழந்து செஞ்சோலையில் வளர்ந்தவர். ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியிலும், இடைநிலை, உயர்கல்வியை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரி. தமிழீழ சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற சட்டத்தரணி என்பதையும் பதிவிடுகிறார். லதா 12 ஆவது வயதிலேயே எழுத்துத்துறைக்குப் பிரவேசித்துள்ளார். அரசியல் கட்டுரை, கவிதை,சிறுகதை, புத்தக ஆய்வுரை, அரசியல் விமர்சனம், அறிவிப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடுகொண்ட பன்முகத்திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர் லதா சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் திறமையை அடையாளம் கண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பல பரிசுகளும் விருதுகளையும் இவருக்கு வழங்கியதை நினைவுகூருகிறார் எழுத்தாளர். 1993ஆம் ஆண்டு அன்னை பூபதி பொது அறிவுத்தேர்வில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் எழுத்தாளர். நெருஞ்சிமுள் என்னும் ஈழத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நெம்பு, வெளிச்சம், சாளரம் சஞ்சிகைகளிலும் ஈழநாதம், சுதந்திரப் பறவை பெண்கள் பத்திரிகையிலும், சுடர்ஒளி, வீரகேசரி, தினக்குரல், எதிரொளி, புதுவிதி ஆகிய சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. தெளிவு என்னும் மாதாந்த கிறிஸ்தவ நாளிதழுக்கு ஐந்து வருடங்களாக ஆசிரியராக இருந்துள்ளார். சுவாசம் மட்டுமே சுடுகலனாய் என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். ”விடுதலைக்கனல்” என்னும் இவரின் கவிதை நூலின் பிரதி தற்பொழுது கையிருப்பில் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறார் எழுத்தாளர். வறுமைக்குட்பட்ட பிள்ளைகளை உள்வாங்கி அவர்களுக்கு உணவு, சீருடை ஆகியவற்றை கொடுத்து இலவசமாக முன்பள்ளி நடத்தி வருகிறார். இதன் நிர்வாகியாகி இவர் உள்ளார். அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருக்கிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகாவிடமிருந்த பெறப்பட்ட தகவலை உறுதிப்படுத்தி பதிவிடப்பட்டது.


வெளி இணைப்புக்கள்