ஆளுமை:சந்தியா, சூசை

From நூலகம்
Name சந்தியா
Pages சூசை
Pages -
Birth 1933.07.25
Place கிளிநொச்சி, இரணைத்தீவு
Category கூத்துக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்தியா, சூசை (1933.07.25 - ) கிளிநொச்சி, இரணைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கூத்துக் கலைஞர். இவர் சிறுவயதிலிருந்து சின்னப்பு அண்ணாவின் நாட்டுக்கூத்து அம்சங்களால் ஈர்க்கப்பட்டவராய் அவருடைய பழக்கங்களில் ஒத்துழைத்தார். சின்னப்பு அண்ணாவி பழக்கிய வரப்பிரசாதம், தேவசகாயம், எஸ்தாக்கி போன்ற நாடகங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார். தனது அனுபவங்களை கொண்டு சந்தியோகுமையோர், பொன்னுலக செபமாலை, கோலியாத் செபஸ்தியார் முதலிய நாடகங்களை பழக்கி இரணைதீவு செபமாலை மாதா திருவிழாவிற்கும் செபஸ்தியார் திருவிழாவிற்கும் நாச்சிக்குடா யாகப்பர் திருவிழாவிற்கும் தனது மச்சான் மருசலீன் அண்ணாவிற்கு ஈடாக மேடையேற்றி வந்தார்.

தனது நாடக புத்தகங்கள், கொப்பிகள், வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி அன்று இடப்பெயர்வின் போது தன்னுடன் எடுத்துச் சென்றார். இரணைமாதாநகர், சோலை, ஆனைவிழுந்தான் வன்னேரி, வட்டக்கச்சி, கல்மடு ,மூங்கிலாறு, இருட்டுமடு, சுதந்திரபுரம், தேவிபுரம் இரணைப்பாலை, மாத்தளன் என்று நகர்ந்த மக்கள் கூட்டத்துடன் இணைந்து இறுதியாய் மாத்தளனின் அனைத்து உடைமைகளையும் கைவிட்டு வெறுமையாய் வட்டுவாகல் ஊடாக 2009 ஆம் ஆண்டு வவுனியா மெனிக்பாம் முகாம் அடைந்தார். 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டதும் இழந்த உடமைகளை தேட வேண்டிய மாபெரும் சவால் நிறைந்த சூழலிலும் கூத்துக்களை ஆவணங்களை தேடத் தொடங்கினார்.

இலங்கை கலைத்துறையில் முன்னேற்றத்தின் பொருட்டு பங்காற்றிய மிகச் சிறந்த சேவைக்கான உபகாரமாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். கலைத்துறைக்கு செய்த சேவையை பாராட்டி 2011 ஆம் ஆண்டு பூநகரி பிரதேச கலாசார பேரவையால் கலைநகரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு வடமாகாணம் இவருடைய கலை சேவைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவித்தது. அதே ஆண்டில் மன்னார் தமிழ் சங்கம் நடத்திய செந்தமிழ் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு உடலால் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் கலை உலகில் கூத்துக்கலை காவலராய் இன்றும் வாழ்கின்றார்.