ஆளுமை:சரோஜினிதேவி, சிவஞானம்

From நூலகம்
Name சறோஜினிதேவி
Pages தெய்வேந்திரம்பிள்ளை
Pages சரஸ்வதி
Birth
Place வட்டுக்கோட்டை
Category எழுத்தாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரோஜினிதேவி, சிவஞானம் யாழ்ப்பாணம் வட்டுக்கோlட்டையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை தெய்வேந்திரம்பிள்ளை; தாய் சரஸ்வதி. இவர் ஆரம்பக்கல்வியை வட்டு திருநாவுக்கரசு பாடசாலையிலும் வட்டு ஆ.மி.த.க. பாடசாலையிலும் கற்றார். பின் பண்டதரிப்பு உயர்தரப் பாடசாலையிலும் கற்றார். திருமண பந்தத்தில் இணைந்த இவர் ஐந்து பிள்ளைகளின் தாயாராவார். இவரின் ஐந்து பிள்ளைகளையும் பட்டதாரிகளாக ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பின்பு இவர் தனது கல்வியை மீண்டும் தொடர்ந்துள்ளார்.

தனது 64ஆவது வயதிற்குப்பின் இளம் சைவப்புலவர், சைவப்புலவர், சைவசித்தாந்தப் பண்டிதர் போன்ற பட்டங்களைப் பெற்றதோடு மேலும் எட்டு பட்டங்களையும் பெற்றுள்ளார். தனது எழுவதாவது வயதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார்.

தனது பிள்ளைகளையும் அயலவர்களுடைய பிள்ளைகளையும் பாடசாலை மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் அவ்வப்போது நடக்கின்ற பேச்சுப்போட்டிகளுக்கு பேச்சுகளை எழுதிக் கொடுத்து பயிற்றுவித்து நெறியாக்கம் செய்து வந்துள்ளார். இவரால் நெறியாள்கை செய்து மேடையேற்றப்பட்ட சிவனுடன் வாதிட்ட செந்தமிழ்புலவர் என்ற நாடகம் 1978ஆம் ஆண்டு பாராட்டுக்களை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

1977ஆம் ஆண்டு எழுத்துத் துறைக்குள் பிரவேசித்துள்ளார் சரோஜினிதேவி. 2006ஆம் அண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் நான்கு நூல்களும் எழுதி வெளியீடு செய்துள்ளார். இவர் எழுதிய திருவாசகத்தில் சிவபுராணம் என்ற நூல் கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாவின் போது 2019ஆம் ஆண்டின் சிறந்த நூல் என்ற பாராட்டும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சமய விழாக்களின் போது ஆலயங்களிலும் சைவசமய சொற்பொழிவு செய்து வருவதுடன் எழுத்துப்பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவருடைய சொற்பொழிவு பேச்சு எழுத்து என்பன வெளிநாடுகளிலும் பிரபலம் பெற்றவையாகும். அதிலும் குறிப்பாக நியூசிலாந்தில் அதிகம் பிரபலம் பெற்றதென்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர். அன்னைக்கென் உள்ளக்கமலம், பிள்ளைக்குணம் (இலக்கிய நூல்), வெருகலம் பதியும் அருகம் எம்விதியும் (சமய நூல்), திருவாசகத்தில் சிவபுராணம் ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

திருமுறை நெறிச்செல்வர் – இந்தியா திருவாவடுதுறை ஆதீனம் – 2012.

இந்து தர்ம ஆசிரியர் விருது – ஜனாதிபதி 2012.

கலாபூஷணம் – அரச விருது – 2016.

சிறந்த சைவப் பணியாளர் – திருகோணமலை இந்துக்கல்லூரி – 2016.

ஆன்மீக சமூக சேவை சான்றிதழும் சிவநெறிச்செம்மல் பட்டமும் – உலகச் சைவத்திருச்சபை – 2018.


குறிப்பு : மேற்படி பதிவு சரோஜினிதேவி, சிவஞானம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.