ஆளுமை:மியூறியல் வயலட் ஹட்சின்ஸ்

From நூலகம்
Name மியூரியல் வயலட் ஹட்சின்ஸ்
Birth 1899.03.07
Pages 1996.03.04
Place மிறேகன்ஸயாஹே
Category சமூகசேவையாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மியூறியல் வயலட் ஹட்சின்ஸ் (1899.03.07) இங்கிலாந்து பிறேகன்ஸயர்ஹேயில் பிறந்த சமூகசேவையாளர். ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் 1926ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப்பட்டததைப் பெற்றார். ஸ்ரோவ்பிறிட்ச் இல் மூன்று வருட ஆசிரிய பயிற்சியை முடித்தார். அங்கிலிக்கன் சபையைத் தழுவினார்.

வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். கிழக்கு தேசத்தில் ஊழியம் என்னும் பொருளில் அக்கறை செலுத்தினார். இத்தகைய புத்தகங்களை வாசிக்க வேண்டாமென்று பெற்றோர் ஆலோசனை கூறிவந்தனர். இருந்த போதிலும் இவரது வாசிப்பு கிழக்கு தேசத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற கனவை நனவாக்கும் முகமாக தன்னை திருஅவையின் திருப்பணி மன்றத்திற்கு (Church Missionary Society) ஏழைகளோடு ஏழையாக இருந்தது, சிலுவையை எடுத்துக்கொண்டு பெற்றோர்களின் எதிர்ப்புகளின் மத்தியில் 1927ஆம் ஆண்டு கார்த்திகை 10ஆம் திகதி இலங்கைக்கு வந்தார் மியூரியல். கொழும்பு மகளிர் கல்லூரியில் ஆங்கிலமும் இலத்தீனும் கற்பிக்கும் ஆசிரியராக கடமை புரிந்தார். சில மாதங்கள் பணியாற்றிய இவர் தனது வேலையை விட்டு விலகி யாழ்ப்பாணத்திற்கு வந்தார். இவரது கனவை நனவாக்கிக்கொள்ள சிறந்த இடமாக யாழ்ப்பாணத்தை கருதினார். யாழ்ப்பாண மக்களுடன் தனது பணியை முன்கொண்டு செல்லத் தடையாக இருப்பதாக அவர் கருதிய தமிழ் மொழியையும், கர்நாடக சங்கீதத்தையும் தென் இந்தியாவிற்குச் சென்று ஐயம் திரிபுறக் கற்று யாழ்ப்பாணம் திரும்பிய இவர் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் ஆங்கிலம் இலத்தீன் மொழி ஆசிரியையாகப் பதவி ஏற்றார். பின்னர் கோப்பாய்க்குச் சென்றார். மியூறியல் அதிபராக இருந்த காலத்தில் இருமொழிப் பெண்கள் விடுதிப் பாடசாலையும், தமிழ் கலவன் பாடசாலையும் இணைக்கப்பட்டு கோப்பாய் பெண்கள் தமிழ் விடுதிப் பாடசாலையாக உருப்பெற்றது. தமிழ் மொழி மூலக் கற்றலை விரும்பியோருக்கு இப்பாடசாலை பெரிதும் உதவியது. இவருடைய காலத்தில் அநாதைகள் திணைக்களம் இப்பாடசாலையில் அமைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 75 ரூபா உதவிப் பணம் அளிக்கப்பட்டது. திருப்பணி மன்ற ஆண், பெண் பாடசாலைகள் ஒன்றாக்கப்பட்டு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி உருவாக்கம் பெற்றது. உடுவில் பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் அதிபராகப் பதவி ஏற்ற இவர் நல்லூர் ஒன்றிணைக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் உப அதிபராகக் கடமையாற்றினார்.

தமிழ் மொழியை இலக்கணத் தமிழில் பேசினார். பிரசங்கங்களை தமிழில் ஆங்கில அழுத்தங்களுடன் பேசினார். 1956ஆம் ஆண்டு பிரதம மந்திரி திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் காலத்தில் சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது, தான் ஒரு தமிழர் என்று இலங்கை பிரஜாவுரிமைக்கு மனுச் செய்தார். ஒக்ஸ்பேட் பல்கலைக்கழத்தில் படித்துப்பட்டம் பெற்ற ஒருவர் இலங்கைப் பிரஜையாவதைக் குறித்துப் பெருமைப்பட்ட பிரதமர் எதுவித தாமதமும் இன்றி அவருக்கு குடியுரிமை வழங்கினார்.

தொழில் ரீதியாக ஆசிரியராக இருந்தாலும் தனது சமூக சேவையினை வறிய மக்களிற்கும் புறக்கணிக்கப்பட்ட மக்களிற்கும் வழங்கி வந்தார். அன்னை திரேசாவைப் போன்று இவரின் அலுமாரிக்குள் அணிவதற்கு, தோய்ப்பதற்கு, தைக்க வேண்டிய கிழிந்த ஆடை என்று சொல்லி மூன்று உடுப்புக்களே இருந்தன. தனக்கு வேண்டிய ஆடைகளை பருத்தித்துணியில் வடிவமைத்தார்.

ஏழு பாடசாலைகளில் பணியாற்றிய பின் மியூறியல் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஒரு வருட கால விடுமுறையை மேற்கொண்டு தனது தாயகம் சென்றார். தனது தாயகத்தின் புதிய சூழல், மக்கள், கலாசாரம் என்பனவற்றிற்கு இவரது மனம் ஒத்து போவததால் தனது வாழ்நாளில் மீதிக் காலத்தை இலங்கை வாழ் மக்களோடு கழிப்பதற்காக இலங்கை வந்து கிளிநொச்சியில் கருணா நிலையம் என்னும் இடத்தை ஆரம்பித்தார். வீடற்றவர்கள், அநாதைகள், ஆதரவற்ற பெண்கள், விவாகமாகாத தாய்மார், தேவையற்ற பிள்ளைகள், புறக்கணிக்கப்பட்ட தவறாக உபயோகிக்கப்பட்ட வெறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட நிலையிலுள்ள ஏழை போன்ற பல தரங்களிலும் உள்ளவர்களிற்கு அடைக்கலம் கொடுத்தது கருணா நிலையம். தனது ஓய்வுதியத்தை பயன்படுத்தி கருணா நிலையத்திற்கான வேலையை ஆரம்பித்தார். காட்டுப் பிரதேசமாக இருந்த இந்த இடத்தை திடசங்கற்பம் பூண்டு தனது கடின முயற்சியினால் கிளிநொச்சி மண்ணில் கருணா நிலையத்தை கட்டியெழுப்பினார்.

இரத்மலானையில் உள்ள கட்புலன் செவிப்புலன் விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை போன்று யாழ்ப்பாணத்திலும் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற இவரது எண்ணத்தினால் பேராலயம் கைதடியில் இத்தகைய ஒரு பாடசாலையை அமைத்தது. அங்கே கல்வி கற்ற மாணவர்களிற்கு திறமைகள் பயிற்றுவிக்கப்பட்டது.

தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் கொண்டு தமிழ் நாட்டில் தமிழைக் கற்றறிந்த இவரினால் அனேக கீர்த்தனைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதுடன் விடுதிவாசிகளிற்கு அதனைப் பயிற்றுவித்து ஆராதனைகளில் அவை பாவிக்கப்பட்டன. சிறிய புல்லாங்குழல் மாத்திரமே இசைக்கருவியாக இவரினால் பாவிக்கப்பட்டது.