நிறுவனம்:கற்பகப் பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name கற்பகப் பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place திருகோணமலை
Address கற்பகப் பிள்ளையார் கோவில், திருகோணமலை
Telephone -
Email -
Website -


திருகோணமலை நகரில் திருஞானசம்பந்தர் வீதியில் இந்த ஆலயம் இருக்கின்றது. இவ்வாலயத்திற்குச் சமீபத்தில் விஸ்வநாதசுவாமி சிவன்கோவில் இருக்கின்றது. சுமார் இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் திரு. கதிர்காம முதலியார் என்பவர் இந்தச் விஸ்வநாதசுவாமி சிவன் கோவிலைக் கட்டுவதற்காகத் தற்போது கற்பகப்பிள்ளையார் கோவில் கட்டப்பட்டிருக்குமிடத்தில் காணியைத் தர்மசாதனம் செய்து சிறிய மடாலயமொன்றைக் கட்டினார். கோவில் கட்டிடவேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அந்த இடம் பிற்காலத்தில் ஆலயத்தை விஸ்தாரமாகக் கட்டுவதற்குப் போதாமலிருக்கும் என்ற காரணத்தினால், கட்டிட வேலையை அப்படியே கைவிட்டு விட்டு தற்போதிருக்கும் விஸ்வநாதசுவாமி கோவிலைக் கட்டினார். அவரால் கைவிடப்பட்ட கோவிலை அந்த அயலிலுள்ள மக்கள் கட்டிமுடிக்க எத்தனித்தார்கள். திரு. கதிர்காம முதலியாரால் கைவிடப்பட்டு நீண்டகாலத்திற்குப்பின் அந்த இடத்தில் வாழ்ந்த கற்பகம் என்ற அம்மையார் மேலும் காணிகளைத் தர்மசாதனம் செய்து, நிதியுதவியும் செய்தார். அதன்பின் கட்டிப் பூர்த்தி செய்யப்பட்ட கோவிலுக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் என்று பெயர் வைத்தார்கள்.

இவ்விடத்தில் வாழும் மக்களின் ஆழமான சமய பக்தியினால் இவ்வாலயம் அமைக்கப்பட்ட தென்ற செய்திகளும் முதியவர்கள் வாயிலாகத் தெரிய வந்தது. அக்காலத்தில் விஸ்வநாதசுவாமி சிவன் கோவிலுக்காகக் கொண்டுவரப்பட்ட பிள்ளையாரின் திருவுருவத்தையே கற்பகப் பிள்ளையார் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள்.

கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங்களைக் கொண்டதாயிருந்த இவ்வாலயத்தில் சுமார் நூற்றியிருபத்தைந்து வருடங்களுக்கு முன் திரு. நாகன் பரியாரியார் என்பவர் ஸ்தம்ப மண்டபமும், மணிக்கோபுரமும் கட்டிக் கோவிலைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

அர்த்த மண்டபத்தில் எழுந்தருளிப் பிள்ளையாரும், வீரபத்திரர், வேல் நாகதம்பிரான், அஸ்திர தேவர் என்பன வைக்கப்பட்டிருக்கின்றன. உள்வீதியில் பத்திரகாளிக்கும், வைரவருக்கும் தனிக்கோவில்கள் உண்டு. மாசிமகத்தைத் தீர்த்த தினமாகக்கொண்டு அதற்குமுந்திய பத்து நாட்களும் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது. இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் பூசைகள் யாவும் கைவிடப்பட்டிருந்தன. இப்பொழுது உச்சிக்காலம், மாலைச் சந்தியாகிய நித்திய பூசைகளும், சிவராத்திரி, திருவெம்பாவை, ஆவணிச் சதுர்த்தியாகிய விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன. கோணேசர் ஊர்வலம் நடைபெறும் போது இவ்வாலய பரிபாலன சபையாரும் மக்களும் சேர்ந்து பக்திபூர்வமான வரவேற்புச் செய்து வழிபடுவார்கள். தற்போது இவ்வாலய பரிபாலன சபையின் செயலாளராக திரு. த. துரைராசா என்பவர் இருக்கின்றார்.

தற்சமயம் இவ்வாலயம் கும்பாபிஷேகம் கண்டு, புது பொலிவுடன் காட்சியளிக்கின்றது.