நிறுவனம்:வடலியம்பதி பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name வடலியம்பதி பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place சாம்பல்தீவு
Address வடலியம்பதி பிள்ளையார் கோவில், சாம்பல்தீவு, திருகோணமலை
Telephone 0778153882/0761496637
Email -
Website -


திருகோணமலையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் சாம்பல்தீவு என்ற சைவ கிராமத்தில் காணப்படும் ஆலயமே, வடலியம்பதி பிள்ளையார் கோவில் ஆகும். இது திருக்கோணச்சர ஆலயத்தில் பண்டைக் காலங்களில் யாகங்கள், வேள்விகள், அன்னதானம் போன்றவற்றினால் யாக சாலையில் சேரும் சாம்பலை கொண்டு சென்று குவித்த பகுதியே இந்தக் கிராமம் என்று கூறப்படுகின்றது. இந்தக் கிராமத்தில் பல ஆலயங்கள் நீண்ட காலம் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றது. இவற்றில் வடலிம்பதி பிள்ளையார் கோவிலும் ஒன்றாகும். இந்த ஆலயம் வடலி பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது.

காடுகளை துப்புரவு செய்து வடலிகளை புரட்டும் போது அதன் அடியிலிருந்து இந்த பிள்ளையார் வெளிப்பட்டார் என்று கூறப்படுவதால் இந்த காரணப் பெயர் ஏற்பட்டது. அவ்வாறே அதன்போது ஆயுதங்களால் தாக்கியதால் பிள்ளையாருடைய ஒரு காலில் ஊனமும் ஏற்பட்டுள்ளது. மேலும் வடலியின் அடியில் கிடைத்தமையினால் வடலி பிள்ளையார் என பெயர் வைத்துள்ளனர். இந்தப் பிள்ளையார் வெளிப்பட்ட இடத்தில் சிறு கோயில் கட்டி அவ்விடத்தில் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

அவர் செய்த அற்புதங்களால் அவ்விடத்தில் ஊனமற்ற பிள்ளையார் சிறிது காலத்தின் பின் ஸ்தாபிக்கப்பட்டார். ஊனமுற்ற பிள்ளையாரை தீர்த்த கடற்கரையில் சிறு கோயில் வைத்து வழிபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே செம்பி மலை சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சன்னியாசி ஒருவர் இந்த கிராமத்தில் தங்கியிருந்து சில சேவைகளை செய்து வந்தபோது, மக்களின் ஒத்துழைப்புடன் வடலியம்பதி கொட்டில் பிள்ளையார் கோவில் ஆகம முறைப்படி அமைந்த கற்கோவிலாக கட்டப்பட்டது.

1936 ஆம் ஆண்டு திருப்பணி வேலைகளை நிறைவேற்றி முதலாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் போது சாம்பல்தீவில் உள்ள வாலையம்மன் கோவிலில் இருந்து பிள்ளையாரை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தனர். வடலியம்பதியில் இருந்த ஊனம் அடைந்த பிள்ளையாரை தீர்த்தக் கடற்கரை கோவிலில் ஸ்தாபித்தார்கள்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தில் ஆலயம் சீர்குலைந்து காணப்பட்ட நிலையில் சாம்பல்தீவு மக்கள் இவ்வாலயத்தை புனருத்தாரணம் செய்ய நீண்ட காலமாக முயன்று புணருத்தருண சபையொன்றை ஸ்தாபித்தார்கள். பொதுநலம் விரும்பும் சைவ அன்பர்களும், புனருத்தாரண சபையும் இணைந்து பெரும் முயற்சியால் வடலியம்பதி பிள்ளையார் கோயில் திருப்பணிகளை நிறைவேற்றி 07.06.1979 புனருத்தாரண சபை செயலாளராகிய திரு. வ. தங்கராசா அவர்களின் சரியான உழைப்புடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினத்தை தீர்த்த தினமாகக் கொண்டு இந்த ஆலயத்தில் பத்து நாள் அலங்காரம் உற்சவம் இடம் பெற்று வருகின்றது.

ஆலயத்தின் தீர்த்த பகுதியாக சல்லி கடற்கரை பிள்ளையார் ஆலயம் காணப்படுகின்றது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 01.06.2023 வியாழக்கிழமை அன்று சிறப்பாக இடம் பெற்றது.