நிறுவனம்:வரத விநாயகர் கோவில்

From நூலகம்
Name வரத விநாயகர் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place திரியாய்
Address வரத விநாயகர் கோவில், திரியாய், திருகோணமலை
Telephone
Email -
Website -


திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள கட்டுக்குளப்பற்றில் திருக்கோணமலைப் பட்டினத்திலிருந்து ஐம்பது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள திரியாய் என்ற கிராமத்தில் இக்கோவில் இருக்கின்றது. யானோயாவுக்கும் புடவைக்கட்டு ஆற்றுக்கும் இடையே கிழக்கே கடலும் மேற்கே மலைகளாலும் சூழப்பட்ட இயற்கையமைப்பைக் கொண்டது திரியாய்க் கிராமம். திருக்கோணேஸ்வரத்தில் திருக்கோவிலெடுத்த குளக்கோட்டு மன்னன் கோணேசர் கோவிலில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படவேண்டுமென்று திட்டம் பண்ணி வைத்தான். இந்த விளக்குகளுக்குத் தாமரைத் திரியும், நெய்யும் கொடுத்துக் கொண்டிருக்கும் திருத்தொண்டைச் செய்வதற்காக மருங் கூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்களைக் குடியேற்றினான். அவர்கள் இந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் இவ்வூரிலிருந்து தாமரைத்திரி தயாரித்து விளக்கேரிப்பதற்கு நெய்யும் அனுப்பிவந்தார்கள். இதனால் இவ்வூருக்குத் திரியாய் என்று பெயர் ஏற்பட்டது. கோணேசர் கோவிலில் விளக்கெரிப்பதற்கு இங்கிருந்து இலுப்பை எண ணெயும் அனுப்பப்பட்டதாகவும், கோணேசர் கல்வெட்டில் கூறப்படுகின்றது. இலுப்பை விதை எடுப்பதற்காக அக்காலத்தில் இலுப்பை மரங்களையும் அதிகமாக வளர்த்து வந்தார்களாம். வரதவிநாயகர் கோவில் வாசலில் மிகப்பெரிய இலுப்பை மரம் இன்றும் காணப்படுகின்றது. இதனை இக் கோவிலின் தலவிருட்சமாகவும் கொள்கின்றார்கள்.

இவ்வாலயத்தின் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் வரதவிநாயகரைப் பற்றிய சுவையான செய்தியொன்று கிடைக்கின்றது. தற்போது இவ்வூரில் இருந்த திரு. தம்பிரெத்தினசிங்கம் என்பவர் கருத்து படி, இவருக்கு ஏழு தலைமுறைக்கு முன்பிருந்த திரு. வீரவாகு உடையாரின் முன்னோர்கள் மருங்கூரிலிருந்து வந்தவர்கள். காசியிலிருந்து எடுத்த சிவலிங்கமொன்றை, வீரவாகு உடையாரின் முன்னோர்கள் பரம்பரையாக வைத்துப் பூசைசெய்து வழிபட்டு வந்தார்கள். வீரவாகு உடையாருக்குப்பின் வென்றி மாலை உடையார், நினைவாத்த உடையார், சுந்தப்பர், முருகப்பர் என்பவர்கள் ஒருவர்பின் ஒருவராக இந்தப் பரம்பரையினர் புளியமரமொன்றின் கீழ் வைத்து வழிபட்டு வந்தார்கள். கந்தப்பர் பரம்பரையில் வந்த சோமநாத வன்னியஞரின் சகோதரியைக் கல்யாணம் செய்தவர் கதிர்காமதம்பி என்பவர். இவருடைய மகன் கணபதிப்பிள்ளை வன்னியனார் இந்த லிங்கத்தை வைத்து வழிபட்டுவருங் காலத்தில் இவருக்கு மூக்கினுள்ளே முளை வளர்ந்து உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்தது. எந்தவிதமான வைத்தியத்தாலும் குணப்படர்திருந்த இந்த நோயை நீக்கியருளும்படி தாங்கள் வணங்கி லிங்கப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டார். லிங்கத்தைப் பிள்ளையார் என்று கருத்திற்கொண்டே இவர்கள் வழிபட்டு வந்தார்கள். கணபதிப்பிள்ளை வன்னியனார் தமது நோயை நீக்கித்தரும்படி நேர்கடன் வைத்து விரதமிருந்து பத்துப் பாடல்களைக்கொண்ட பதிகம்பாடி லிங்கப் பிள்ளையாருக்குச் சமர்ப்பித்தார். "என்சிரசிலுறு குறையை நீக்கி வைத்தால் உந்தனக்கோர் ஆலயமும் கட்டி வைப்பேன்" என்பது பதிகத்திலுள்ள வேண்டுகோள். இந்தச் சங்கற்பத் தின்படி அவருடைய மூக்கிலிருந்த முளை மறைந்துவிட்டது. அதேவேளையில் லிங்கத்தில் ஒரு மூக்கு வளர்ந்திருந்ததாம். இந்த அதிசயக் கணபதிலிங்கத்தை வைத்துக் கணபதிப்பிள்ளை வன்னியனார் வரதவிநாயகர் கோவிலைக் கட்டுவித்தார்.

1892ஆம் ஆண்டு மார்கழி மாதம் இருபதாம் திகதி திரு. கதிர்காமர் கந்தப்பிள்ளை என்பவர் இவ்வாலயத்திற்கு நன்கொடையாக நிலம் வழங்கியதற்குரிய சாசனம் ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. பரம்பரை பரம்பரையாகப் பரிபாலிக்கப்பட்டுவந்த இந்தக் கோவில் நிர்வாகத்தை 1942ஆம் ஆண்டு திரு. கந்தப்பிள்ளை அருளம்பலம் என்பவர் திரியாய் மக்களுக்குப் பொதுவுடமையாக்கிக் கொடுத்துள்ளார். அதன்பின் பரிபாலனசபை ஆலயத்தை நடத்தி வருகின்றது.

கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், வசந்தமண்டபம், யாகசாலை, பாகசாலை, வைரவர் கோவில், மணிக்கோபுரம், என்பனவற்றை முழுமையாகக் கொண்டு முறையாக அமைக்கப்பட்ட இந்தக் கற்கோவிலில் சிவலிங்க வடிவிலுள்ள விநாயகர் ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். இந்த லிங்கத்தில் மூக்குப்போன்ற ஒரு புருவம் இருக்கின்றது. பிள்ளையார் அங்கியை அதன்முன் வைத்துப் பூசை செய்து வருகின்றார்கள். பிள்ளையாருக்குரிய பூசைமுறைகளே செய்யப்பட்டு வருகின்றன. ஸ்ரீ சு. கந்தையா ஐயர் இவ்வாலயத்தில் பூசை செய்துகொண்டிருக்கின்றார். மகாமண்டபத்தில் எழுந்தருளிப் பிள்ளையாகும். வேலும், நாகதம்பிரானும் காணப்படுகின்றன. மூஷிகம், பலிபீடத்துடன் ஸ்தம்பமண்டபம் காட்சியளிக்கின்றது. உச்சிக்காலம், மாலைச்சந்தி ஆகிய இரண்டுகால நித்திய பூசைகளும், கும்பாபிஷேசு, தினத்தை ஆரம்பமாக கொண்டு தொடர்ந்து பத்து நாட்கள் அலங்கார உற்சவமும் நடைபெற்று வருகின்றது. மாதசதுர்த்தி, பிள்ளையார் கதை, கந்தசஷ்டி, திருவெம்பாவை முதலிய விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன.

1943ஆம் ஆண்டு புனருத்தாரணத் திருப்பணிகள் தொடங்கி 1953ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. 1968ஆம்ஆண்டு வரையும் சிறப்பாகத் திருவிழாக்கள் நடைபெற்றுவந்தன. அதன்பின் ஆலய நிகழ்ச்சிகளில் மக்களுடைய ஈடுபாடு தளர்ச்சியடைந்திருந்தது. பின்னர் யுத்த காலத்தின் பின் கிராமம் மீள பொலிவுற்று ஆலய வெளிப்பாடுகள் இடம்பெற்று வருகிறது.