நிறுவனம்ːஅம்/ இறக்காமம் ஜும்மா பெரிய பள்ளிவாசல்
Name | இறக்காமம் ஜும்மா பெரிய பள்ளிவாசல் |
Category | முஸ்லிம் ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | இறக்காமம் |
Address | ஜும்மா பெரிய பள்ளிவாசல், இறக்காமம், அம்பாறை |
Telephone | - |
- | |
Website | - |
இறக்காமம் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் வரலாற்றுக் காலம் மிக தொன்மையானது. இப்பள்ளிவாசலின் ஆரம்பகால எழுத்துமூல ஆவணங்களைப் பெற முடியாதிருந்தாலும் 1930 இற்குப் பிந்திய எழுத்துமூல ஆவணங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றன. 1933 இற்கு பிற்பட்ட காலங்களில் ‘இறக்காமம் பள்ளிவாசல் முஸ்லிம் சங்கம்’ என்ற பெயரின் கீழ் நிருவாக முறை இடம்பெற்றுள்ளது. இதில் 33 அங்கத்தவர்கள் பதிவாகியுள்ளனர். இப்பள்ளிவாசலில் லெப்பையாகக் கடமையாற்றியவர்களே முகல்லிமாக இருந்து திருமண ‘நிகாஹ்’ நிகழ்வையும் நடத்தியுள்ளனர்.
1964 இல் அல்ஹாஜ் ஹாமிது லெவ்வை உமர் லெவ்வை (உடையார்) அவர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதிலிருந்து புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ‘நம்பிக்கைப் பொறுப்பாளர் குழு’ என்ற பெயர் நீக்கப்பட்டு ‘கொமிற்றி’ அதாவது ‘மரைக்காயர் சபை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஊர் மக்கள் சேர்ந்து மரைக்காயர்களையும் தலைவரையும் தெரிவு செய்யும் புராதன முறை, இவரது காலத்திலேயே மாற்றப்பட்டது. அத்துடன் தலைவரை ‘நம்பிக்கைப் பொறுப்பாளர்’ என்று அழைக்கும் முறையையும் மாற்றி ‘பிரதம நம்பிக்கையாளர்’ என அறிமுகம் செய்ததும் இவரது நிருவாக காலத்திலேயே ஆகும்.
ஏற்கனவே இருந்து வந்த சபை இயங்காத பட்சத்தில் பள்ளிப்பரிபாலன சபைக்கு (நிருவாக சபை) குடும்பப் பிணக்குகள் கொண்டுவரப்பட்டமையும் இப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. மருமக்கள் காணிகளாக செய்கை பண்ணப்பட்டு வந்த பள்ளிவாசல் காணிகளை பள்ளிவாசல் நிருவாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, அம்முயற்சியின் பயனால் 9 ஏக்கர் பெறப்பட்டது. (மர்ஹூம் சாஹீர் (AI) அவர்களின் நிருவாக காலத்தில் இது திருத்தியமைக்கப்பட்டு 11 ஏக்கராக விஸ்தரிக்கப்பட்டது.)
உமர் லெவ்வையின் நிருவாக காலத்திலேதான் சிறு கட்டடமாக இருந்த இப்பள்ளிவாசல் ஆதம் லெவ்வை (பணிக்கர்) உதுமா லெவ்வையின் மேற்பார்வையின் கீழ் முகப்பு (மினாரா) உடன் அழகிய தோற்றமாக விசாலமாக்கப்பட்டது.
1967.08.07 இல் திருத்தம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டு 1969.07.13 இல் வேலைகளை ஆரம்பிக்கும்போது, நீற்று மண்ணால் மெழுகப்பட்ட சிறு பள்ளியாக அது இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இறக்காமம் ஜும்ஆப் பள்ளிவாசல் கட்டடம் சம்பந்தமாக, பூர்வீக காலத்தில் அமைக்கப்பட்டதும் பாவிக்க முடியாது பழுதடைந்த நிலையிலுள்ள கட்டடத்தைத் துப்பரவாக அகற்றிவிட்டு தற்போதைய சனத்தொகைக்கு ஏற்றவாறு புதிதாக ஒரு கட்டடத்தை அமைத்துக் கொள்ள 1969 இல் ஆரம்பித்து கிராம மக்களினதும் வெளியில் உள்ளவர்களிடமிருந்தும் பணமாகவும் பொருளாகவும் நன்கொடையாகக் கிடைக்கப் பெற்றதைக் கொண்டு கட்டடம் செய்து முடிக்கப்பட்டது.
1991 இல் மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் மஜீட் முகம்மட் சாஹிர் அவர்கள் புதிய நம்பிக்கையாளராக நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து மீரா லெவ்வை அப்துல் மஜீட், ஆதம் லெவ்வை முகம்மது ஹாசிம், கலந்தர் லெவ்வை முகம்மது ஹாசிம், ஆதம் லெவ்வை முகம்மது இஸ்மாயில போன்றோர் அடுத்தடுத்து இப்பள்ளிவாசலை நிருவாகம் செய்த பிரதம நம்பிக்கையாளர்கள். புதிய பிரதம நம்பிக்கையாளராக அல்ஹாஜ் மௌலவி அப்துல் கரீம் அப்துல் றவூப் அவர்கள் நியமிக்கப்பட்டார். புதிய நம்பிக்கையாளர் சபையின் தீர்மானத்திற்கேற்பவும் பொதுமக்களின் ஏகசம்மதத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2017ம் ஆண்டு Jannath foundation அமைப்பின் அனுசரணையோடு புதிய நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.